Friday 5 January 2018

அசிப்பான் நாட்பது மில்லிகிராம்


சேலை கட்டாத மேலைநாட்டுப் பெண்களின் கண்களில் புத்திசாலித்தனமும் துணிவும் தெரியும் என்று மேலைநாட்டவர்கள் எப்போதும் கெப்பமாக சொல்லுவார்கள். நம்ம நாட்டு இன்னிசை இளம் அணங்குகளோ கயல்விழிக் கண்களில் நவரசங்கள் காட்டிப் பரதநாட்டியம் ஆடி உலகம் மறந்து ரசிக்க வைக்கிறார்கள் . நம்ம நாட்டுப் பெண்களிடமும் தைரியமும், தந்திரமும் இருக்கத்தான் செய்கிறது. என்ன அவர்கள் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பில்த் தலையைக் குனிவதால் அதைச் சரியாகக் கவனிக்கமுடிவதில்லை.

                                                              முதன் முதலில் பார்த்த எடுப்பில அவளை டாக்டர் என்றுதான் நினைச்சேன். ஒரு வைத்தியருக்கு உரித்தான அங்க அடையாளமாகிய பூனை நடை, பளிச்சென்ற உடை, தீர்க்கதரிசியின் பாவனை எல்லாமே சட்டப்படி சாமுத்திரிகா இலட்ச்சனமாய் இருந்தது. நடை ,உடை,பாவனையில் மேட்குறிப்பிட்ட எல்லாம் பொருந்தியிருந்த அந்த இளம் சுவீடிஷ் டாக்டரின் ஆழிக்கடல் நீலக் கண்களில் அளவுக்கு அதிகமாக அவிட்டு விட்டு ஆடுற ஆர்வக்கோளாறும் இருந்தது
                                                                   அவள் கதைத்த சுவிடீஷ் பேச்சு மொழிக்கு உச்சரிப்பும் அவள் உதட்டசைவுகளும் சம்பளம் இல்லாத சேவகனும் கோபமில்லாத எசமானும் போல நிறையவே பிடுங்கல் இல்லாத ஒற்றுமை இருந்தது. ஆனால் அவள் கதைத்தது அரைவாசிக்குமேல் எனக்கு விளங்கவில்லை.
                                                                 தென்கிழக்கு சுவீடனில் உள்ள ஸ்கொனே என்ற பிரதேச வட்டார வழக்கில் உள்ள ஸ்கொன்ஸ்கா என்ற ஆதியான சுவிடீஷ் மொழியில் அவள் பிடிகொடுக்காமல் கதைத்தாலும் உச்சரிப்புகளை டேனிஷ் மொழிபோல கொடுப்புக்குள்ளே சப்பித்துப்பிக் கதைத்தாள். அந்த ஸ்கொன்ஸ்காவில் லுண்ட் என்ற தொன்மையான கலாச்சார விழுமிய அடையாளங்கள் இருந்தாலும் மத்திய கால சுவீடனில் அது ஏழை விவசாய நாட்டுப்புற மக்கள் தெம்மாங்கு பாடிய மொழி என்று சொல்லலாம் .
                                                                என்ன நல்ல குறட்டை விட்டு நித்திரையில் இருந்தவனை எழுப்பிச் சிரிக்கவைக்கக் கதை சொன்ன மாதிரி இலக்கில்லாத அலட்டலில் பினாத்துறேனா ? சரி உங்கள் பொறுமையைச் சோதிக்காமல் சடக்குப் புடக்கு என்று சக்கடத்தார் போல கிணத்துக்குள்ளேயே குதிக்கிறேன்.
                                                                     கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது போல உடம்பு நாம் நினைத்தபடி எப்போதும் மத்துப் போட்டுக் கிண்ட வளைத்து கொடுத்துக்கொண்டே போகாது. அது சில நாட்கள் அதன் விருப்பப்படி ஏதாவது அவஸ்தை கொடுத்துக்கொண்டுதானிருக்கும் . அதனோடு நடக்கும் சம்பவங்கள் நகைச்சுவையாகக் கலந்தடித்து அனுபவங்கள் தந்தாலும் அது வரும்போது சில நாட்கள் வாழ்க்கை பற்றிய எல்லாக் கணிப்புகளும் பிழைத்துப் போய் ஆரோக்கியம் எவ்ளவு முக்கியமென்று ஜோசிக்க வைக்குது. அதுவும் வயதாகும் போது அதுபற்றிய பயம்கள் குழல் விளக்குத் திரியைப் பத்த வைக்குது .
                                                                   சென்ற மாதம் வயிற்று நோவு காரணமாக ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு இரவும் பகலும் தங்க வேண்டி வந்தது. சுமாரான வைத்திய வசதிகள் உள்ள ஒரு நடுத்தரமான ஆசுப்பத்திரி அது. என்னுடைய நோயின் தன்மை அவ்வளவு ஒன்றும் பதறியடிக்கும் அவசரக் கேஸ் இல்லாததாலும். நானே உருவாக்கி வைத்திருக்கும் வேறுசில சமூகஉதவிச் சிக்கல்கள் காரணமாயும் ஆரம்பத்தில் சிறந்த வைத்திய நிபுணர் உதவி கிடைக்கவில்லை. ஒரு இளம் சுவீடிஷ் நடன நர்த்தகி நேர்ஸ் தான் கேள்விகளும் பதில்களும் பின்தொடர எனக்கு உதவி செய்யும்படியான நிலைமை இருந்தது.
                                                                             அந்த நேர்ஸ் எங்கள் ஊரில் டாக்டருக்கு பின்னுக்கும் முன்னுக்கும் ஆராத்தி எடுத்துக்கொண்டு கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கிக் கொண்டு திரியும் அரைப்பாவாடை சட்டை போட்ட நேர்ஸ் போல இருக்கவில்லை . இவள் பிரத்தியேகமான மென் நீலநிற மேட்சட்டை அணிந்து,,,கீழே நேவி நீலக்கலரில் நீண்ட காட்சட்டை உடுத்திக்கொண்டு , நிறைய கலர் கலரான பிளாஸ்ட்டிக் அடையாள காட்டும் டாக்டர்மார் போலவே கழுத்தில தெதாஸ்ஸ்கொப்பும் கொழுவி இருந்தாள். இடுப்பு நார்ப்பட்டியில் பிளாரென்ஸ் நைட்டிங்கேல் தாதியர் விருது வென்ற மணிக்கூடு செருகி இருந்தாள்.
                                                                         நான் கையைக் காலை ஆட்டிக்கொண்டு ஆரோக்யமாகப் போய் அவளுக்கு முன்னால் கதிரையில் இருந்ததைக் கவனித்தாள் . பிள்ளையார்காப்புப் போல டாக்டர்மார் வழக்கமாகக் கேட்கிற முதல் கேள்வியான
" எத்தினை நாளாக இந்த அசவ்கரியம் உனக்கு வயித்தில நோவாக இருக்கு "
                                                                                                                   என்று ஸ்கொன்ஸ்காவில் கேட்டாள். அதுவே ஒரு மாதிரி ஒரு மாதத்துக்கு இழுக்கும் போல இருந்திச்சு
" ஒரு கிழமையா இந்த உபத்திரவம் போட்டு உலைக்குது டாக்டர் "
" வேற என்னவும் நீண்டகாலப் பிரமானத்தில் வருத்தம் இருக்கா,,என்ன என்ன மருந்துகள் எடுக்கிறணி,,,சொல்லுப்பா "
" அதில ஒன்னும் குறைச்சல் இல்லை..... இருக்கு ....இருக்கு.....மருந்து.....மருந்து போடுறனான் டாக்டர் "
" ஓ..அப்படியா,,,.முதல் பல்ஸ் பார்ப்பம்...இரத்த அழுத்தமும் பார்ப்பம் ,,ரத்தமும், சிறுநீரும் எடுக்க வேண்டும் செக் செய்ய "
" உயிர்த் தவிர வேற என்ன எண்டாலும் எடுத்து செக் செய்யுங்க டாக்டர்.. எதுக்கும் சம்மதமே டாக்டர் "
" ஏன்பா என்னைப் பார்த்தா டாக்டர் போலவா இருக்கு, நான் டாக்டர் இல்லைப்பா,,நேர்ஸ்,,கொஞ்சம் டாக்டர் அளவுக்கு கிட்டத்தட்ட படிச்சு இருக்கிறோம்,,"
" ஓ..அப்படியா,,"
" பிராக்டிகல் அதிகம்,,அதால உன்னை முதல் பரிசோதனை செய்யும் அதிகாரம் இருக்கு,,அவளவுதான்பா "
" எங்கட ஊர்ல தெதஸ்ஸ்கொப்பு கொழுவின எல்லாருமே டாக்குத்தர்மார்,,நேர்ஸ்மார் அவர்களுக்கு எடுபிடிபோல முன்னுக்கும் பின்னுக்கும் திரிவார்கள் அதுதான் அண்டர்சாண்டிங்கில கொண்புயிஸ் ஆகிவிட்டேன் "
" இங்கெல்லாம் அப்படி இல்லை,,நான் ஒரு நேர்ஸ் மட்டுமே, என்ன கொஞ்சம் அதிகம் படித்த நேர்ஸ் "
" உனக்கு இந்த தெதஸ்ஸ்கொப்பு உன்னை ஒரு டாக்டர் போலவே ஆக்கிவிடுகிறது தெரியுமா அது "
" அப்படியா,,நன்றி,,ஆனால் நான் நேர்ஸ் பா "
" அது ஏன் பா ஆசுப்பத்திரியில் வேலைசெய்யும் எல்லாருமே உன்னைப்போல அழகாக இருக்கிறார்கள் "
" என்னது,ஓ. அப்படியா,,நன்றி,,நான் அழகு என்று சொன்னதுக்கு, "
" ஓம்,,உண்மையைத்தான் சொல்லுறேன்..நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்,,உன் கண்களில் நிறையவே புத்திசாலித்தனம் இருக்கு பா, நீயே போதும் பா, இந்த வயிற்றுப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க "
" ஓகே,,ஓகே,,,எனக்கு நேரம் அதிகம் இல்லைப்பா உன்னோட வாழ்த்துரைகளைக் கேட்டுக்கொண்டிருக்க,,வந்த விசியத்தைப் பார்ப்போம்,,என்னாவது என்னால செய்ய முடியுமா என்று ."
                                                                                எனக்கு அங்கே போன சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது சொல்லும்படியாக இங்கே மருத்துவ உதவி கிடைக்காது என்று. அதனால இந்த நேர்ஸ்சை எப்படியும் மடக்கிவைச்சு என்னோட வேலையைக் கொண்டுபோக வேண்டும் என்று அதனாலதான் இப்படி சொல்லி அவளைப் பாப்பா மரத்தில ஏற்றினேன். இப்பிடித்தானே பெண்களே தங்களை யாரும் புகழ்வதை உள்ளூர ரசிக்கிறார்கள் தானே. அதை விட எங்கட ஊரில புண்ணியக்குஞ்சி எப்பவும் சொல்லுவார் காரியம் ஆகிறதுக்கு கழுதையின் காலை என்றாலும் பிடிக்கலாம் என்று. அவர் என்ன சொன்னாலும் அதில மாயப்பொடி மந்திரப்பொடி வித்தை இருக்கும்.
" சரி நீதான் ஆரோக்கியமாக இருக்கிறாய் போல இருக்கே,,இந்த வயிற்றுப் பிரச்சினை ஒரு சின்னப் பிரச்சினை,,இங்கே நிறைய நோயாளிகள் மிகவும் குழப்பமான மெடிக்கல் கொண்டிஷனில் வருவார்கள் "
" அப்படியா,,எனக்கு வலி தங்க முடியவில்லை, "
" பார்க்கலாம்,,ஆனால் இங்கே அதிகம் வசதிகள் இல்லை, நல்ல துறை சார் நிபுணத்துவம் உள்ள ஸ்பெசலிஸ்ட் என்று யாருமே இல்லை,,அது தெரியும்தானே "
                                                                             என்று ஒரு முன் எச்சரிக்கை போலவே சொன்னாலும் அதில தட்டிக்கழிக்கும் அலட்சியம் அதிகமாய் இருந்தது
                                                                ஒரு காலத்தில் நல்ல சுகாதார சேவைகளை அந்த நாட்டு மக்களுக்கு வாசல்ப் படியில் வைத்தே வழங்கிய நாடு. இப்ப அப்படி இல்லை நிலைமை. ஒரு துறை சார் நிபுணத்துவம் உள்ள ஸ்பெசலிஸ்ட்டை சந்திப்பதுக்கே ஏழு கடல் தாண்ட வேண்டும். ஒவ்வொருநாளும் பத்திரிகைகள் இந்த மோசமான குழப்ப இறங்குமுகத்தை விடிய விடிய முழிச்சு இருந்து எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் வெறும் செய்திகளாவே வாசிப்பதால் அதிகம் உறைப்பதில்லை. நமக்கு நமக்கு என்று பிரச்சினை காலைச் சுற்றும்போதுதான் அந்தக் குளறுபடியின் வீரியம் தெரிகிறது.
" அப்படியா,,ஏன்பா ,,ஆரம்பத்திலேயே வந்து இருக்கலாமே,,,என்னப்பா செய்துகொண்டு இருந்தனி இவளவு நாளும்,,"
" அட்டமி நவமி ராகுகாலம் எமகண்டம் வளர்பிறை தேய்பிறை பார்த்துக்கொண்டு இருந்தேன் "
" என்னது பா இதெல்லாம் ,,சுவீடனில் இதெல்லாம் பார்ப்பார்களா,,நீ எங்கப்பா இருக்கிறாய் "
" நான் இப்பவும் அங்கேயேதான் அலைஞ்சுகொண்டு இருக்கிறேன்....பாட்டி சொல்லுவா ஆசுபத்திரிக்கு நல்ல நேரம் போகவேணும் என்று
" பாட்டி,??????????,அது யாருப்பா, ?,உன் பாட்டியா? ,,சரி என்ன உனக்கு வயித்தில செய்யுது "
" சாத்வ குணம் உடம்பில அதிகரித்து அம்சவாயு,,புளிச்சல் ஏவறை செமியாக்குணம், கணப் பித்தம் போல என்னமோ வந்து இருக்குமோ என்று ஜோசித்துக்கொண்டிருந்தேன் "
" இதெல்லாம் என்னப்பா,,ஒன்றுமே விளங்குதில்லை,,விளங்கிற மாதிரி சொல்லுப்பா "
" ஆயுள் வேதப்படி மூன்று தோஷங்களாகவும்‚ ஏழு தாதுக்களாகவும்‚ மூன்று மலங்களாகவும் வெளிப்படுகின்ற தோஷங்கள் சேர்ந்தும்‚ தனித்தும் அறுபத்து இரண்டு வழிகளில் நோய்களை உண்டாக்கக் கூடியவைகள் என்று பாட்டி சொல்லுவா . அதுதான் வயித்தில சங்கடம் ஏட்படுத்தும் ரோகங்கள் என்று பாட்டிதான் சொல்லுவா "
" அட பேந்துபார், கிழிஞ்சுது போ .யாருப்பா,,இந்தப்,,பாட்டி,,அவா என்ன பெரிய டாக்டரா "
" இல்லைப்பா, ,அவா நூறு சதவீதம் இயற்கையான மூலப்பொருட்களை மட்டுமே உபயோகித்து தொண்ணூற்றி எட்டு வருடம் வாழ்ந்த நல்ல ஆன்மிக அறிவாளி, ஆயுள்வேதம் நீண்ட ஆயுளின் வேதம் என்று நம்பி வாழ்ந்த ஒரு வேதாந்தி "
" கிழிஞ்சுது போ..எனக்கு ஒரு நோயாளிக்கு ஒதுக்கும் நேரம் என்று ஒன்று இருக்குப்பா..இந்தக் ககதையெல்லாம் கேட்க நேரம் இல்லைப்பா."
" பிரம்ம பிரஜாபதி வைத்தியர்களான அஸ்வினி குமாரர்கள், முனிவர்கள்‚ தவசிகள்‚ ஞானிகள் உருவாக்கிய வேதங்களின் ஒரு பகுதியான ஆயுர்வேதத்தைக் கடைப்பிடித்த பாட்டியை யாரும் சரியாகப் பதிவுசெய்யவில்லை என்ற கவலை எனக்கு இருக்கு அதனால இதெல்லாம் சொல்லுறேன் "
" ஐயோ,,சாமி,,பேந்துபார்,,உன் பாட்டியை வரலாற்றில் பதிவுசெய்ய கதைக்கிதை என்னவும் எழுதி அவிச்சு அவிட்டு விடுப்பா,,நான் கேட்க்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு பா,,நல்ல அணில்ப் பிள்ளை போல "
" சரி "
" நேரத்துக்கு நேரம் பசிக்குதா,
" ஓம்,,எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் என்பதுபோல எப்பவுமே சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் ,"
"என்னப்பா சொல்லுறாய், நோ விட்டு விட்டு வருகுது,,அல்லது தொடர்ச்சியாக இருக்கா,,"
" ஓம், இறுக்கி அறைஞ்சு கறல் பிடிச்ச பழைய கம்பி ஆணியைக் கொண்டைச் சுத்தியலால நெம்பி இழுத்து எடுக்கிறது போல வலிக்குது ,,"
" என்னபா சொல்லுறாய், வயிற்றுக்குமட்டல் வாந்தி வாறதுபோல இருக்கா.."
" இல்லை, நாக்கிலே உப்புப் போட்டு ஊறவைக்க நாரத்தங்காய் தேச்ச மாதிரி கசப்பு இருக்கு ,"
" என்னப்பா சொல்லுறாய், இதுக்கு முதலும் இப்படி வந்திருக்கா "
" ஓம், சின்ன வயசில வந்திருக்கு,பாட்டி அதுக்கு பர்ராசிங்கம் பரியாரியிட்ட கூட்டிக்கொண்டு போனா,,அவர் கீழ்க்காய்நெல்லிவேர் குடிநீரும் அதிமதுரம் கரைசல் மருந்தும் வெள்ளைக் கப்பூரமும் தேங்காய்ச் சிரட்டையில் அரைச்சுக் குடிக்க சொல்லி ஆயுள் வேதவைத்தியம் செய்தார் ,அதைவிட சரியான விபரங்கள் இப்ப நினைவு இல்லை "
" நான் கேட்க்கிற கேள்விக்குமட்டும் பதில் சொல்லு பா, அனாவசியமா அலட்டாதே பா ,"
" நீ கேட்ட எல்லாம் இருக்கு இதுக்கு மேலேயும் இருக்கு.
" சரி,,கடைசிக் கேள்வி ,,சொல்லு, அதிகம் உறைப்புள்ள,,எண்ணை சேர்ந்த சாப்பாடு சாப்பிட்ட உடனே ,வயிறு உனக்கு எப்படியான உணர்வில் இருக்கு "
" வயிறு ரோட்டுப் போடுற நேரம் மிதிக்கிற கல்லுமெஷின் போல அப்பப்ப பொருமிக்கொண்டிருக்கும் ,சின்ன வயசில் கொஞ்சகாலம் குடல்ப்புண் இருந்தது "
" ஓ..பெப்டிக் அல்சர்போல இருக்கே, ,சரியா சொல்ல முடியாது இப்ப,, சரி நீட்டி நிமிர்ந்து படு,,வயிறை அமதிப் பார்க்க வேண்டும் ,,சேட்டைட் கழட்டு,,ஜீன்ஸ்ஸை கொஞ்சம் பதித்து இறக்கி பெல்டை இழக்கிவிடு "
" சரி ,,படுக்கிறேன் ,ஹ்ம்ம்,, பெப்டிக் அல்சர் புண்ணியத்தில நல்லா எல்லாத்தையும் இழக்கி விடுறேன் , இப்பிடி இளம் பெண் டாக்டர்களை கிட்டத்தில சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்க்காதே "
" என்னப்பா ஒரு மாதிரி சொல்லுறாய்,
" நீ சொன்னதை திருப்பி என்தாய்மொழி தேனினும் இனிய தெவிட்டாத தெள்ளமுத்துத் தமிழ்மொழியில் சொல்லிப்பார்த்தேன் "
"இப்ப பாய்ஞ்சு விழுந்து படக்கு படக்கு என்று எல்லாத்தையும் கழட்டுறாய் ,போறபோக்கில உடுப்பு எல்லாத்தையும் கழட்டிப் போட்டு நிப்பாய் போல இருக்கே பா "
" நீதானே கழட்ட சொன்னாய். நான் எதைச் செய்தாலும் அதை முழுமையாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் வாழுறவன் ."
" ஐயோ..சாமி,,நான் சொன்னது ஜீன்ஸை கொஞ்சம் இறக்கி,பெல்ட்டை இழக்கிவிடு என்று , நான் என்ன உனக்கு தாய்லாந்து லோட்டஸ் மசாச்சா செய்யப்போறேன்,"
"அவ்வளவுதானா "
" குறிப்பாக ,எங்க நோகுது என்று பார்க்க அமதிப் பார்க்கப் போறேன் ,சிலநேரம் ,ஈரல் பிரச்சினையாக இருக்கலாம்,,உன் கண்கள் மஞ்சளாக இருக்கே "
" இருக்கலாம்,,,நிறையக் குழப்பங்கள் இருக்கலாம்,,நான் மேகங்களையும் , குழந்தைகளையும் தனித்தமனிதர்களையும், புத்தகங்களையும், புல்வெளிகளையும் , மேப்பிள் இலைகளையும், பூனைகளையும் ,நீரோடைகளையும்,,விமானங்களையும் கவனிப்பதுபோல என் உடம்பையும் ஆரோக்கியத்தையும் அவ்வளவாக அக்கறையாகக் கவனிப்பதில்லை "
" அட அட,,,நீ என்னப்பா பெரிய இன்டெலக்சுவல் அப்ஸ்ட்ரக் திங்கர் போல கதைக்கிறாய்,அதென்ன கடைசியில் விமானம்,,ஏரோப்பிளேன் அதுவா
" ஓம்,,விமானங்களை ரசிப்பேன் மணிக்கணக்கில் , விமானங்கள் பற்றி நிறைய வாசிப்பேன்,,காணொளிகளில் பார்ப்பேன்,,சிலநேரம் ஏர்போட் போயே பார்ப்பேன், ,அவ்வளவு கிளுகிளுப்பு கிடைக்கும் ஒரு விமானத்தைக் கிட்டத்தில் பார்த்தால் "
" அட,,இங்க பாரடா இவன் ஒருத்தனை,,அவன் அவனுக்கு பெண்களைக் கிட்டத்தில் பார்த்தால் கிளு கிளுப்பு வருக்குதாம்,,இவனுக்கு ஏரோப்பிளேன் பார்க்க வருக்குதாம்,,பிக்கியுள்ளார் கேஸ் பா நீ "
" ஹ்ம்ம்,,,,உண்மையைத்தான் சொன்னேன் "
" நீ இப்படி அலட்டுற மனப்பிறழ்வு உள்ளவனா அல்லது , மண்டைப்பிசகில தலகாணியைப் பிச்சு எறியிறது இப்பிடி என்னவும் இருக்கா,,இருந்தா இப்பவே சொல்லுப்பா,,கொஞ்சம் பாதுகாப்பாய் தள்ளி நிண்டு கதைக்க "
" ஹஹஹஹ,,,கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது,, அண்டிடிபிரஸிவ் டபிளட் போடுறனான் "
" நினைச்சேன்,,,,நீ எல்லாரும் போல வாழ்க்கையைப் பற்றி சிம்பிளா சொல்லாத நேரமே நினைச்சேன்,,கொஞ்சம் அவுட் ஒப் த ஓடேர்னரி வேய் கேசா இருக்குமோ என்று "
" ஓம்,,,அதில உண்மையும் இருக்கு "
" சரி விடுப்பா,,விசயத்துக்கு வாறன் சப்போஸ் இது பெப்டிக் அல்சர் கோர்ஸ் ஆக இருந்தால் எண்டோஸ்கோப்பி செய்து உறுதிப்படுத்த வேண்டும்..
" ஓ அப்படியா,,எதுக்கும் முதல் உன்னோட வெறுங்கையால அமத்திப்பார் பா ,,எனக்கு இந்த மெடிக்கல் இயந்திரங்களில் நம்பிக்கை இல்லைப்பா "
" எண்டோஸ்கோப்பிக்கு இங்கே வசதி இல்லை,, காஸ்ட்ரோஇன்டெஸ்ட்ட்ரனல் நிபுணத்துவ டாக்டரும் இங்கே இல்லைப்பா,,அது செய்ய சென்ஸ்ஜோரன் அல்லது டாண்டரிட் சிக்குஸ் ஹாஸ்பிடல் தான் போக வேண்டிவரும் பா "
" பரவாயில்லை நீ உன் ரெண்டு பிஞ்சுக் கையாலே முதல் அமுக்குப்பா, எதுவா இருந்தாலும் பிறகு பார்ப்பம், , உன் மென்மையான பயிற்றம்பூப் போன்ற உள்ளங்கைகள் பட்டாலே சில நேரம் குளறுபடி தானாகவே சரியாகலாம் பா "
" என்னப்பா பினாத்துறாய் ,,உனக்கு இப்ப என்ன வந்தது ,,,உண்மையாவே வயிறு நோவா அல்லது என்னவும் நாடகம் போட்டுக்கொண்டு வந்து நிக்கிறியா,",
                                                                               என்று சொல்லி வயிறு முழுவதும் கைக்கு கிளவுஸ் போட்டு, தியறியாகப் படித்த வைத்திய முறையில் பிராக்டிகலாகப் பிசக்கக்கூடிய பல சாத்தியங்களை நினைவில் மீட்டிக்கொண்டு, ஒவ்வொரு அங்குலமாய் வயிறு முழுவதும் அமத்திப் பார்த்தாள் . பிறகு தன்னோட வேலை செய்யும் மற்ற நேர்ஸ் இடம் அபிப்பிராயம் கேட்பதாகச் சொல்லிப் போட்டுப் போட்டாள்
                                                                            நான் கட்டிலில் கையைக் காலை நீட்டியபடி கிடந்தேன். அந்த முன்பரிசோதனை அறையில் நான் மட்டுமே இருந்தேன். அந்தக் கட்டிலையும் , ஒரு பெரிய தண்ணீர் கலனையும் , சில பேப்பர் கப்புகழையும் , சுவரில் இரவுநேர ஸ்டாக்கோலம் நியோன் லைட் வெளிச்சத்தில் இரவைப் பகலாக்கும் ஒரு பெரிய பனோராமிக் படத்தையும் , ஜன்னலுக்கு வெளியே ஒரு கிளாசிக்கல் வோல்வோ கார் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் , அந்த நேர்ஸ் விட்டுச் சென்ற கோலோன்ஜிஜினே பிரெஞ் சென்ட் வாசனையையும் தவிர வேற ஒன்றுமே இல்லை
                                                                           நாங்கள் ஒவ்வொருநாளும் ஏதோவொரு ஆஸ்பத்திரியைக் கடந்துதான் அன்றாடம் வேலைக்கோ அல்லது வேற அலுவல்களுக்கோ ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் எல்லாக் கட்டிடங்கள் போலவே அதுவும் ஒரு சீமெந்துக் கட்டிடம் போலவே இருக்கும். ஆனால் உள்ளே ஒருநாள் தங்கி நிக்கவேண்டிய தேவை வரும்போது அது இதுவரையில் அடிக்கடி சந்திக்காத இன்னொரு உலகமாக மாறிவிடும்.
                                                                                சரியாகக் கையைப் பிடிச்சு சொன்னால் விசித்திரமான உலகம் அது . அது தட்காலிகமாகவும் ஒரு நிலையில்லா வாழ்க்கை பற்றிய ஞானத்தையேடெலிவிஷன் சீரியல்களுக்கு நடுவில வாற சரவணாஸ் ஸ்டோர் வெள்ளிப்பாத்திர விளம்பரம் போல சில நிமிடங்கள் சீரியஸ் ஆக நடுமண்டையில் மணி அடிக்கலாம் .
                                                                         அந்த நேர்ஸ் எனக்கு கொஞ்ச நேரத்தில வந்தாள். பெப்டிக் அல்சர் கோர்ஸ் இக்கு நிறைய சான்ஸ் இருக்கு என்று சொல்லி ஒரு பிளாஸ்ட்டிக் கானில் வெள்ளையாக ஒரு கிரீம் கொண்டுவந்து தந்து ,
"காஸ்ட்ரோஇன்டெஸ்ட்ட்ரனல் நிபுணத்துவ டாக்டரும் இங்கே இல்லைப்பா.. இது பெப்டிக் அல்சர் போலத்தான் இருக்குப்பா ."
.
" சரி உன்கையாலே என்ன தந்தாலும் குடிக்கலாம் பா "
" இப்ப..முதலில் இதைக் குடி,,இது ஒன்றும் பெரிய டாக்டர் தான் எழுதவேண்டிய மருந்து இல்லை,,நான் சிபாரிசுசெய்யலாம் "
" சரி சரி ,வசந்த மாளிகை படத்தில நடிகர் திலகம் சிவாயி கணேசன் ,,லதா லதா லதா விஷத்தை தானே குடிக்கக் கேட்டேன் லதா லதா விஸ்கியக் குடிக்கக் குடுத்திட்டியே,, என்ற டயலக் நினைவு வருது ,, "
.
" என்னப்பா,,சொல்லுறாய்,,, இது அசிப்பான் நாட்பது மில்லிகிராம் உள்ள கிரீம் பா காஸ்ட்ரோஇன்டெஸ்ட்ட்ரனல் பிரச்சினைக்கு நல்லது . ,ஒரு தேக்கரண்டி அளவு "
" ஓம்,,, "
" கொஞ்சமாக இது அசிப்பான் நாட்பது மில்லிகிராம் உள்ள கிரீம் பா மூன்று நேரம் குடி வாயில மிடறு போல விடு . "
"ஓம்,,ஓம், நன்றிப்பா ,,, "
" முதலில் மறக்காமல் இந்த கிரீம் கானைக் குலுக்கிக் குடி ."
" ஓம்,ஓம்,,,ஓம்,நன்றி நன்றி பா ,,,,"
                                                              அந்த அசிப்பான் நாட்பது மில்லிகிராம் கிரீம வாயில விட்டேன் . அது வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பார் சர்பத் போல இருந்தது.சாடையா அமினியத்தை அரைச்சு டின் பாலில் கரைச்சது போல ஒரு டேஸ்ட் இருந்தாலும், அடிப்படையில் அது அசிப்பான் நாட்பது மில்லிகிராம் கிரீம் இல்லைபோல இருந்தது. வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பார் சர்பத் போலதான் சுவையா இருந்தது. வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பாரரை நினைச்சுக்கொண்டே அரைவாசிக் கானை அப்படியே சர்பத்போல உறிஞ்சு உறிஞ்சு உள்ளுக்கு விட்டுடேன் .
                                                                        நான் அசிப்பான் நாட்பது மில்லிகிராம் உள்ள கிரீம குலுக்காமல் குடிச்சிட்டேன் பிறகுதான் அந்த நேர்ஸ் குலுக்கிக் குடிக்க சொன்னது நினைவு வந்தது. அதால கட்டிலில் இருந்து எலும்பிப் போய் கொரிடோரில் அங்கேயும் இங்கேயும் குத்திக் குத்தி ஓடிக்கொண்டு இருந்தேன், அதை கொடிரோர் முடிவில் கண்ணாடி அறையில் இருந்து பார்த்த அந்த நேர்ஸ் உடன வந்து
" இப்ப எதுக்குப்பா இப்பிடி குத்தி முறிஞ்சு பிரண்டு கொண்டு இருக்கிறாய் "
" நீ தந்த மருந்த..அசிப்பான் நாட்பது மில்லிகிராம் உள்ள கிரீம குலுக்கி குடிக்க சொன்னாய் எல்லா,,நான் மறந்துபோய் குலுக்காமல் குடிச்சிட்ட்டேன் ,,அதுதான் இப்ப குலுக்கிறேன் "
" அடப்பாவி,,நீ ஒரு அகராதி பிடிச்சவன் டா, போய்க் கட்டிலில் படு பா..,பொறுவாறன்,,உன்னோட கதைக்க வேணும் டெஸ்டிங் ரிப்போட்டில் விட்டமின் ஊட்டச்சத்து குறைவாக இருக்கு "
                                                                            நான் போய்க் கட்டிலில் படுத்தேன். வயிற்று வலியத் தவிர மற்றப்படி நான் ஆரோக்யமாகத்தான் இருந்தேன். அல்லது இருப்பது போல நினைச்சுக்கொண்டு இருந்திருக்கலாம். ஏனென்றால் உடம்பில பல இரசாயனச் சுரப்புக்கள் நம்மளை அறியாமலே ரகசியமாக சமநிலை குழம்பி இருக்கலாம். அல்லது ஒரு வாழ்வாதார உள்ளுறுப்பு களைத்துப்போய் பின்வாங்கிக்கொண்டிருக்கலாம் ,சில கலங்கள் மறுபுத்தியுயிர்ப்பை முன்னறிவித்தல் இன்றி நிறுத்தி இருக்கலாம். ஒரு மெடிக்கல் ரிப்போட் அதுகளைக் கண்டு பிடிக்கலாம்.
                                                                                         அதை நினைக்க அண்மையில் எங்கேயோ படித்த " இப்போதும் மேற்பரப்பில் சலனமில்லாமல்த் தான் இருக்கிறேன் " என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது. நேர்ஸ் ரிப்போட் பேப்பர்களுடன் வந்து கட்டிலுக்கு அருகில் இருந்து
" உனக்காக நேரம் ஒதுக்கி இருக்கிறேன்.
" அவ்வளவுதானா "
" கொஞ்சம் மருத்துவம் பற்றி கதைக்க வேணும், இங்கே வரும் நோயாளிகள் வீட்டில கதைக்க யாருமே இல்லாதுபோல எங்களோடு கதைக்க எப்பவுமே விருப்பப் படுவார்கள்..
" பாவப்பட்ட ஜென்மங்கள் "
" ஆனால் இது எங்களுக்கு ஒவ்வொருவருக்கு இவ்வளவுதான் என்று நேரம் பிரிக்கப்பட்ட சரி இந்தக் கிரீம் எவ்வளவு குடிச்சாய் "
" அரைவாசிக்கு மேலே இழுத்திட்டுது ,,நல்ல டேஸ்ட்,,வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பார் சர்பத் போல இருந்திச்சு "
" அடக் கறுமமே , மருந்துக்கும் மாத்திரைக்கும் அளவுப் பிரமாணம் இருக்கு பா,,அதென்னபா ,வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பார் சர்பத் "
" அதுதான் அசிப்பான் நாட்பது மில்லிகிராம் உள்ள கிரீம் ,,அதுதான் இது இதுதான் அது ,,..சிவாயநமவும் நமசிவாயவும் போல ,வெலிங்டன் சந்தி லிங்கம் கூல்பார் சர்பத் எங்கட ஊர்ல பேமஸ் ஆனா சர்பத் ,"
" என்னது..பொறுவாறன் ,,இப்ப உனக்கு வைக்கிறேன் ஆப்பு,,ஆசுப்பத்திரியிலேயே வந்து முசுப்பாத்தியா ,,பொறுவாறன்,,சொல்லு உனக்கு மருந்துக்கும் மாத்திரைக்கும் சர்பத்துக்கும், சாராயத்துக்கும் அளவுப் பிரமாணம் தெரியாதா பா "
" பர்ராசிங்கம் பரியாரியும் இஞ்சி முலைப்பால் சங்கில அளவுப் பிரமாணப்படி சுறுக்கெண்டு கொடுத்துதான் பாட்டி பாட்டில விழுந்த போது புசுக்கெண்டு நிமிர்த்தி எழுப்பி விட்டார்"
" இந்த அலட்டல் கேட்க நேரமில்லை,,ஆனால் அறிய விருப்பம் இருக்கு,,அதனால சொல்லு அதென்ன இஞ்சி ? .ஜிஞ்சர் Zingiber Officinale அதுவா ? அது heart diseases, arthritis, migraines, depression, stress-related anxiety disorders. இதுக்கெல்லாம் சொல்லப்பட்ட சாமான் பா "
" ஓம் அதைத்தான் முலைப்பாலில் கலந்தார்,,இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும் பா "
" நான் ஓரியண்டல் மெடிசின் படித்து இருக்கிறேன்,,தனியாக படித்தேன்,,ஆர்வத்தில் . அதென்ன முலைப்பால் Breast milk அதுவா ? "
"ஓம் அதைத்தான் பர்ராசிங்கம் பரியாரி கலந்தார் "
" அதில endocannabinoids, Arachidonoyl glycerol, anandamide என்ற முக்கிய தாதுப்பொருள்கள் இருக்குப்பா ,,சரி முலைப்பால் எங்கே எடுப்பது "
" எங்கள் வீட்டுக்கு அருகில் பவளம் அக்கா பிள்ளைப்பெற்று இருந்தா அவாவிடம் இருந்து எடுத்து பாட்டிக்கு வைத்தியம் செய்தோம் "
" ஓ ,,அதென்ன சங்குபா, சொல்லு,,அதென்ன அளவுப்பிரமாணமா ? "
.....இன்னும் வரும் ....



No comments :

Post a Comment