Wednesday 20 December 2017

பருவங்கள்...!

 " தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க " என்று ஒரு பாடலில் மழைக்காலதைப்பற்றி  எழுதியிருப்பார் கவிஞ்சர் கண்ணதாசன் .    அதே பாடலில் "  கையோடு கைகள் உறவாட வேண்டும்  கன்னங்களே இதம் பதம்…காலங்கள் வாழ்க " என்று பருவக்காலத்தை எழுதி இருப்பார். பருவங்கள் எங்கள் வாழ்வோடும் வயதோடும் சமாந்தரமாய்ப் பயணிக்கும் ஒரு இயட்கையின் வரப்பிரசாதம் .

                                               ஸ்கண்டிநேவியாவில் இருக்கும் சுவீடனில் நான்கு பருவகாலங்கள், நாலும் ஒவ்வொருவிதமான மனவெளியை நிறைக்கும் அனுபவங்கள். அவற்றைக் கடந்துகொண்டு, அவற்றுக்குள் வாழ்ந்துகொண்டு இருப்பது ஒருவிதமான திரில். பலநேரம் நம்மை அறியாமல் பருவங்கள் எங்கள் மனதின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் ஆதிக்கம் செய்யும். தவிர்க்க முடியாத ஒரு விதியின் நியதி அது.  


                                                                 சுவீடனில்   உறைபனிபொழியும் வின்டர் உயிரின் தடத்தை அழிக்கும்  கொடுமை. மத்தியானம் இருட்டிவிடும் முன்னிரவு பகலென்பதையே அழித்து இரவுதான் எல்லாமே என்பதுபோல தன்னை முன்னிறுத்திக்கொண்டிருக்கும். அதிகமான மனிதர்கள் இந்தக் காலக்கொடுமையில் " வின்டர் டிபிரசன் " என்ற மனவழுத்த வியாதியில் அவதிப்படுவார்கள்.  நிலமெல்லாம் வெள்ளையாக அழகாக நாடு நகரம் இருந்தாலும்  எலும்பைப்  சுண்டும் குளிர் தனிமையை அதிகரித்து விடும் .


                                                         அதன் பின் இலைதளிர் வசந்தம் .  கன்னிப்பெண்ணின்  கல்யாண  வரவேட்பு,  எல்லாமே புதிதாக கழுவித் துடைத்தமாதிரி ஒரு புத்துயிர்ப்பின் வடிவமாக மாறும். மலர்கள் செந்தூர  மணம் வீசும், தென்றல்க் காற்று தலை துவட்டி அலைபாயும்.  மரங்கள் உதறி எறிந்தது  சிலிர்த்துக்கொள்ள, சூடான நாடுகளுக்குப்   புலம்பெயர்ந்த பறவைகள்  அங்கே பெற்ற குஞ்சுகளை அழைத்துக்கொண்டு குடியிருந்த கோவிலின்   வாசல் தேடி வரும். 


                                            கோடை காலம் கண்மண் தெரியாத  உல்லாசம், வியர்வை வாசத்தை கொஞ்சம் அறியவைக்கும் அதிசயம்.  எரிக்கரைகளில் நீர்குமிழிகளின்  துள்ளாட்டம், பிரதியடிக்கப்படாத சுத்தமான  நீலவானம், அலைகளின் ஆர்பரிப்பில்   கடல், அபரிமிதமான வடதுருவ சூரியன், மனிதர்களின் முகங்களில் சந்தோஷம், புல்வெளிகளில் புதுவிதமான பனித்துளிகள்,  வீதியெங்கும் பருவ  வெள்ளோட்டம் ,  பாதையெங்கும்  சொல்லிமாளாத உட்சாகம் .வெளிப்புறம் எழுந்து நடமாடும் இளமைத் திருவிழா !


                             அதன் பின் இலையுதிர்காலம். அழுதுவடியும் பிரிவின் பருவகாலம். மனத்தைக் கனத்தியாகும் மஞ்சள் இலைகள் இந்தாவோ அந்தாவோ என்று விழக்காத்திருக்க, பறவைகள் புலம்பெயரும். நெறுக்கிக் கொண்டுவரும் மெல்லிய குளிர் வரப்போகும் பயங்கரத்தை தமுக்கம் அடிச்சு  முன்கூட்டியே அறிவிக்கும். அதிலேயே இருக்கிற கொஞ்சநஞ்ச  நம்பிக்கைகளும் அறுந்துகொண்டிருக்க இனியென்ன என்று ஏங்க வைக்கும் விரகதாபப்பருவம். 


                                        இந்த நாலு பருவங்களிலும் ஒரு வருடத்தின் சுழட்சிக்குள் சிக்குண்ட அனுபவம் எழுதவைத்தவைகள் இவைகள். சில விசயங்கள் புரியாமல் இருக்கலாம். காரணம் நீங்கள் சுவீடன் போன்ற ஒரு நாடு தவிர்ந்த  வேறு ஒரு நாட்டில் வசித்துக்கொண்டு  வாசிக்கலாம் . அதில் வரக்கூடிய குழப்பங்கள் நன்றாகவே புரிகிறது. நான் என்ன செய்ய எனக்கு கட்பனையில் எழுதும் ஆற்றல் என்னோட மரமண்டை மூளைக்குள் இல்லையே , அதனாலே இதட்குள் இருந்தெடுத்து  இங்கிருந்துதானே எழுதவேண்டி இருக்கே  !    


                                               இதில்  முகநூலில் கிறுக்கிய  ஒரு சில கவிதைகளே பகிர்ந்துள்ளேன்.. இன்னும் நிறையவே எழுதியவை உள்ளன  கொஞ்சம் கொஞ்சமாக  தொடர்ந்தும் பகிர்கிறேன் .           

.                                          
தனை மறந்து 
குடை சுருக்கி நனைபவளின் 
சோடனைகளற்ற முகத்தைத்தான் 
அதிகம் தேடுகிறது 
மழை !

.
....................................................................
.
வெளிச்சங்களோடு 
வெட்கப்பட்டுக்கொண்டே 
இருள் வீதியெங்கும் 
வெள்ளைத்தோரணங்கள் கட்டி 
மேகங்களின் 
மணக்கோல நேரம்
ஏதோவொரு எண்ணமோகத்தில்

மனம் லயித்து
நாணத்தோடு நடந்துவந்து
வெள்ளி உடைந்து சிதறிக்கிடக்கும்
வானத்துக்குத் தலைகுனிந்து

ஓரமாக ஒதுங்கிநின்று
நாணிச் சிவந்து
பெருவிரலால்ப் படம்வரைந்து
கிறக்கவிழிகளால் ஓரக்கண்ணடித்து

சிணுங்கிப் பனிபெய்யும்
மழைக்கு
நேற்றைய முன்னிரவு
முதலிரவாகத்தானிருக்க வேண்டும் !

.
....................................................................................
.
வருடப்பருவத்தின் 
வெளிப்புற நிறங்களின் 
கொண்டாட்டம் 
வேறுவகையாக மாறியிருக்கிறது !


பச்சையங்கள் விலகி, 
துளிர்ப்புக்கள் பிரிந்து,
பசும்புல் தலைகவிழ்ந்து ,
இளஞ்சிவப்பும்
மஞ்சளும் ஊதாவுமாக
வாசமற்ற மலர்களோடு
இருள்மேக வானத்தில்
குடியேறிவிட்ட
சாம்பல்நிற முன்னிருட்டு !

முழிச்சுப் பார்க்க விரும்பாத
வடதுருவ சூரியனோடு
ஒருவழியாக
வெளியாகி
பகலில்
கொஞ்சநேரமாவது
வாழ்ந்து விடவேண்டும் . “

.
...........................................................................
.
மரக்கிளைகள்
எப்போதாவதுதான்
விரும்பியபடி ஆடுகின்றன

இலையுதிர்ந்த
குளிர்மழை சிந்தும் 
நீர்த்திவலைகளை
மிகச்சாதாரணமாகக்
கவனித்துக்கொண்டிருக்கிறேன் .

ஒன்றோடொண்று
அவதி அவசரமாகவில்லை

அதன்
மிகச்சிறந்த அம்சம்
எவரும் செல்லமுடியாத ஆழங்களுக்கு
மிகத்தெளிவான
பிரியமானவொரு மொழியை
இழுத்துச்செல்கின்றது

.
....................................................................
.
ஒரேயொருநாள்
காமம் தலைகேறியதால்
விரும்பியபடியெல்லாம்
கண்டபடி அவிட்டு ஆடிவிட்டு
இரவே அடங்கிப்போனது 
மழை ,

அதுபற்றிய
ஆதாரங்களை முற்றிலுமாக
மறைத்துவிட்டது
இருட்டு வெண்முகில்கள் ,

விடியவந்த வெய்யில்
தெருவோரத் தேங்குதண்ணியில்
ஆடை அவிழ்ப்பு
நிழல்களை அவதானித்தபடியே
பக்கச்சார்பின்றி நகர்ந்விட்டது ,

பாவம் மழை
எவ்வளவுதான் ரகசியமாய்
ஒதுக்குப்புற பூங்காவில் சல்லாபித்தாலும்
குற்றவுணர்வில்
எதிர்நிலைகளை விசாரணைசெய்ய
ரெண்டுபேர் இருக்கத்தான் செய்தார்கள் ! 

.
......................................................................................
.
இப்போது
உண்மைகள் தெரியும்வரை
காற்று
விசாரித்த கோணத்திலிருந்து
முற்றிலுமாக விலத்திநின்று
மற்றொரு திசையில்
மழையை விசாரிக்குது
மரங்கள் !

.
..............................................................................
.
யாருடைய உதவியுமின்றி 
பருவமே 
கனவோடு திரிகையிலும் 
நினைவு தந்து 
புன்னகைக்க வைக்குது 
தன்னைத்தானே
உருக்குலையவைக்கும்
காலநிலை


துதான்
அடுத்த
போராடத்துக்குள் நுழைய
அடுத்த
இலக்குக்கு அடித்தளமிட
இன்னும் சில
உருக்கிப் பரிணமிக்கும்
அறிமுகத்தில் கிடைக்கும்
வரங்களையும்
உறைபனியில்க்
கிடைக்கவைத்துவிடுகிறது !

.
............................................................................
.
கதகதப்பைப்
பாரக்கனதியாக்கும் ஆடை

விரல்களைத் தின்னும்
கடும்தோல்ச் சப்பாத்து

வியர்வை நாறும் 
தடித்த கழுத்துப்பட்டி

தலை மயிர்களை
எண்ணிப் பிடுங்கும் குல்லாய்

இந்த
மரணத்தின்
விளையாட்டுதான்.
நம்பிக்
கையிழந்த
வடதுருவ மனிதர்களின்
குளிரைப் புறக்கணிக்கும்
கடைசி முயற்சி!

.
..............................................................................
.
நெருக்கமில்லாத
பழைய இலைகளைத்
துகிலுரிந்துவிட்டு
புதுகாலைத் துளிர்கள் உடுத்திக்கொண்டு
சாமந்திப் பூச்சூட நினைத்ததில் ,
அப்படியென்ன
தலைபோகிற குற்றம் ?

அதுவும்
வயதுக்கு வந்ததுபோல
வருடத்தில் ஒருமுறை


வசந்தகால

அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு
அறுகம்புல்லில் நனைத்து
கோபுரசந்தனம் பூசி
பூப்புனித நீராட்டுவிழா !

.
................................................................................
.
ஒருமித்துப்போன தனிமரத்துக்கு
பருவமெழுதிய தீர்ப்பு
ஏற்றுக்கொள்ள முடியாத 

தண்டனை !

கெட்டுச் சீரழிந்த
கார்த்திகைக் குளிர்காற்றை
பக்கம் வைச்சுக்கொண்டு

வினோதமாக உச்சரித்து
ஆவேசமாகவே
கிளைகள் வீசியெறிந்த
கடுமையான வார்த்தைகள்
சிதறிக் கொட்டிக்கிடக்கின்றன
மஞ்சள் இலைகளாக !

.
...................................................................................

உறக்க
நினைவுகளைக்
காட்சிப்படுத்தலாக்கி
திட்டமிடல்கள் கட்டமைக்கப்படாது
மோதிக்கொண்டியிருக்கும் 
தடயங்களில்
கடத்திக்கொண்டுபோய்
விடிவதுக்குள்
தன்போக்கில் விட்டுச்செல்ல
நிறமற்ற புள்ளிகளே
போதுமானதாயிருக்கிறது
இருட்டுக்கு !

.
...................................................................
அதட்டி நிறுத்திவைத்துக்
கையளைந்து விளையாடி,
தாழப்பறந்த
கடல்ப்புறாவைக்
கைதட்டிக் கலவரப்படுத்தி,
இருள்வானம்
ஜன்னல் திறந்துவிட்ட
நட்சத்திரங்களுக்கெல்லாம்
பட்டப் பெயர்வைத்து,,
உள்மூச்சில்
உப்புக்காற்றை
ஆதிக்கம் செய்யவைத்து
பழைய மரப்படகின்
சரிவு நிழல் மறைப்புக்களில்
நித்திரைகொண்டு
விழித்துப் பார்த்தபோது ,
கிளிஞ்சல்களோடு
சிப்பிகளையும் சோகிகளையும்
கலவி செய்ய வைத்துவிட்டு
கடல்
நீண்டதூரம்
பின்வாங்கிப்போய்விட்டது !
.
எனக்கெனவே
வடிவமைக்கப்பட்டது போல
அதிகாலை
நடைபாதை நிழலில்களில்
குளிர்நாளின் 
சலிப்புத்தரும் அயர்ச்சி !

இனியும்
ஏற்றுக்கொள்ள விரும்பாத
பொறுப்புக்களையெல்லாம்
இடம்மாற்றிவைத்துவிட்டது
மேப்பிள்மர இலைகளுக்கு
தங்க முலாம்பூசிக்கொண்டிருந்த
வெளிச்சப்பகல் !

.
.........................................................................
.
பிரதிக்கப்பட்ட
திசையில்லா அலைச்சலில்
மிச்சங்களையெல்லாம் கடந்துவிடும்
கடைநிலை உத்தேசத்தில்
மாலைப்பொழுது !

தனிமனிதர்கள் போலவே
துணை தேடும் துடிப்பில்
தன்னை இன்னமும்
ரகசியமானவொண்றாகவே
கட்பனை செய்கிறது
நடுச்சாம இருட்டு !

ம்ஹூம்.!!!!!!!!!!
ஒன்றும் தேறவில்லை. !!!!!!!!!!
பலருக்கு
முழுமையில்லாத நாள்
இப்படித்தான் முடிந்துபோகிறது !

.
..........................................................................
.
தன்னிச்சையான வேகச்சுழற்சியில்
இருப்பு குறித்துத் தெரிவிக்க
நடுப்பகலிடம்
இப்போது எல்லாமேயிருக்கு ,
என்னிடம் 
இப்போதுமெல்லாவற்றுக்கும்
பெரும் கனவரும்பிய
வெளிச்சங்கள் மட்டுமேயிருக்கு ,
.

...........................................................................
.
ஊதல்க்காற்றடிப்பதால்
முன்னிரவுக்கும் மழையிருக்கலாம்
அனுமானம்தான் !


இடிமின்னல் தாக்குவது போலவோ
பூமி அதிர்வது போலவோ
எதுவெல்லாத்தையும் நிகழழ்த்தக்கூடும்

சட்டெனப் புரிபடாத
ஆழத்தைப் புரிந்துகொண்ட நுட்பமான
நள்ளிரவு !

.
..............................................................................
.
எவருக்கும் வளையாமல்
எதற்கும் இசைந்து கொடுக்காத
பயணத்துக்கான சாலையைத்தான்
நானும்
முழுநாளொன்றில்
நாடிபிடித்துத் தெரிவாக்குகிறேன் !

இன்னும் நீளமானதாகவும்
விரிவானதாகவும் மாற்றிவைத்த
ஜீவிதமனத்தில்
பதியும் மனோரஞ்சிதநினைவுகள்தான்

ஒரு இரவென்பதும்
ஒரு பகலென்பதும் !

.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;