Thursday 14 December 2017

எதார்த்த உலகம் .

நம்மை அண்மித்து பார்க்க ஏதுவான  சுற்றுவட்டார அவதானிப்புகளில் கிடைக்கும் அனுபவங்கள் கவிதையாகும் போது கூடுதலான எதார்த்த உலகம் ஒன்றை அது சிரிஸ்டிஸ்த்து விடும். என்ன அந்த அவதானிப்புகளை அப்படியே உள்ளபடி எழுதினால் சப்பென்று பத்திரிகை நேரடி ரிப்போர்ட் போல வரும், அப்படி எழுதாமல் அதில் கொஞ்சம் வார்த்தைச் சித்துக்களை செய்து, கவிதைமொழி கலந்து, பரிமாணங்களை உடைத்து, இன்னொரு தளத்தில் உணர்வுகளை சடப்பொருள்களுக்கும் கொடுத்து விட்டு, அதிகம் அல்லாடாமல் சுருக்கமாக வரிகளில் வாசனைகள் தடவி,  எழுதினால் ஓரளவு நல்ல கவிதைகள் வரலாம் என்று எப்போதும் நினைப்பது.


                                                      என்னால் அப்படி எழுத முடியுமா என்பதே ஒரு பரிசோதனை முயட்சிதான். என்னோட இன்றைய வாழ்க்கைநிலை நிறைய நேரம் பிரயாணம் செய்யவும், திசைகள் இல்லாமல் அலையவும் இடைவெளிகள் தந்துள்ளது. அப்படியான சந்தர்ப்பம்தான் அதிகம் எழுத வைத்தது. என்ன இது ஒரு ஸ்கண்டிநேவிய என்ற வடக்கு  ஐரோப்பிய நாட்டின் அன்றாட வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட்து ,இங்குள்ள காலநிலை, மனிதர்கள், அவர்களின் பழக்கவழக்கம், கலாச்சாரம் இதுகள் அதிகம் தெரியாதவர்களுக்கு  கொஞ்சம் விளங்க  இலகுவாக இருக்காது. எப்படியோ மனித உணர்வுகள் நாடுகளின் எல்லை கடந்து ஒன்றேதான் . . .
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
.
விறைப்பாக
நகரத்தை ஊடறுத்து
படுத்துக்கிடக்கிறது நடைபாதை,
முட்டாக்குத்துணியால்
தைலையைச் சுற்றி இழுத்துவிட்ட ...
ரோமேனியா
நாடோடிப்போன பெண்
முகமெல்லாம் ஜோசிக்கிறாள்,
அவளருகில்
அவள் காதலனாய்தான் இருக்கவேண்டும்
ஆனந்தமாய்
எக்கோடியன் வாசிக்கிறான்,
ஊரோடு பஞ்சம்வந்ததென்றவள்
அப்பாபோலிருக்கும்
புஸ்திமீசைக் கிழவன்
குரலெடுத்துப் பாடுகிறார்,
விறைத்துப்போகிறது
மூக்கை நுழைக்கும்
ஆகஸ்ட்மாதக் குளிர்காற்று,
பிரியோஜசனமில்லாத மனிதர்கள்
பட்டனத்துப் பவுசுவில்
சாதாரணமாக ஓரமாகிறார்கள்,
தயங்கிநின்றபடி
அம்மச்சியாகுளத்தடிப்
பீநாறிமரத்தின்
பூவாசங்கள் சேர்ந்துகொள்ள
நான்தான்
அந்தப் பாடலின் மெட்டுப்பற்றி
அதிகமதிகமாய் மோப்பம் பிடித்தேன்
அது
தற்கொலைச்சிந்து போலிருந்தது. !

.
....................................................................
.
பெண்களின்
நவீன உள்ளாடைக்கடைக்
காட்சியறையில்
அந்தரங்க
அழகுப் பிரமிப்புக்களை
" ஆ " வெண்டுபார்த்து விரும்பி
விழுங்கியபடியே கடப்பவன்
சமநிலையிழந்து
அங்காடி முனையில்
திரும்ப மறந்து
வெள்ளைச் சுவரோடு
முகமோதுகிறான்
அவன்
நேராகத்தான் நடந்துபோனான்!
பிரமிப்பு
எண்ணமெல்லாம்
அந்தரங்கமாகக்
குறுக்குவழியில் போயிருக்கலாம் !
.

................................................................
.
எனக்கும்
அந்த இளையவளுக்குமிடையில்
நேருக்குநேர்
ஓரக்கண்பார்வைகள்
தர்ப்பூசனிப்பூ நிறக் கூந்தலைக் ...
கற்றை பிடித்து காதிலிருந்து
நிலவு முகமெல்லாம்
சடை விழுத்திவிடுகிறாள்
நீலக்கண்களில்
நீண்டு விரிந்த ஆயாசம்
நிலத்தடி ரெயில்
உறுமிக்கொண்டு வேகமெடுக்குது
பிறகு
அள்ளி முடித்துப் பின்னுக்கு
தள்ளிவிடுகிறாள்
பூர்விகக் கன்னங்களை
அநாதரவாக விட்டுவிட்டுச் செல்வதில்
குற்ற உணர்வு இல்லை
நிலத்தடி ரெயில்
தாகமாக வேகம்குறைக்குது
மறுபடியும்
வெண் நடுவகிடு கோதி
முகமெல்லாம் பரப்பிவிடுகிறாள்
போதாமையை உணரச்செய்யும்
நெற்றி அசைவின்றி உறைந்து கிடக்குது
நிலத்தடி ரெயில்
விக்கல் எடுத்தமாதிரி குத்துது
இப்போது
வாஞ்சையுடன் தழுவிக் கொள்கிற
சில கற்றைக் கூந்தலை
வாசனை முகர்ந்து பார்க்கிறாள்
அலைவுறுவதையே விரும்பி
கைவிட்டு புறப்படும் உக்கிரம் கொள்கிறது
அந்தக் கனதிநிமிடம்
நிலத்தடி ரெயில்
ஊஞ்சல் போல ஆடிக்கொண்டு அசையுது
மறுபடியும்
பின்னோக்கி தள்ளி விழுத்தி
மேகங்களைத் தொட்டுவிட முயல்கிறாள்.
அதை மகிழ்ச்சியாக மாற்றுகிறவள் .
எதையோ இணைத்துவிட்டதில் திளைக்கிறாள்
நிலத்தடி ரெயில்
நிறுத்தமொன்றை தேர்வுசெய்கிறது
நான்
என் இருக்கையிலிருந்து எழுந்து
நகரத் தொடங்குகிறேன்

.
........................................................................................
.
வயதானவர்
சுங்கான் புகைத்தபடி
அலைபேசும் இளம்பெண்னில்
இச்சைகளை அவிட்டுவிட்டு
தன்
இளமைக்காலத்தோடு
மீள் ஒப்பீடுசெய்கின்றார்
இறுக்கிப்பிணைக்கப்பட்ட
நார்த்தடத்தின் இழுப்புமுனையில்
அவரின்
குட்டிநாய்க்குட்டி
மறைவான புதர் நுழைந்து
பின்னம் கால்களை அகட்டி
அடக்க ஒடுக்கமாக
மூத்திரம் பெய்கிறது !
.
...................................................................................
.
இருள் கடத்திவைத்திருக்கும்
ஒலிகள் அடைக்கப்பட்ட
மையமான உலகத்தில்
மிகச் சிறிய
செவ்வியல் அரங்கு , ...
அந்தோனியோ விவால்டியின்
நான்கு பருவங்களையும்
எக்கித் தள்ளிவிடும்
வயலின்களின் நரம்பிழுவை ,
நிசப்த நிறுத்தங்களில்
பெரிய ஜன்னலை
வேடிக்கை பார்க்கிறேன் ,
வெளியெல்லாம்
அத்துவான அம்பலத்தில்
நட்சத்திரங்களின் நடனம்,
பின்னர்
காற்றின் தொடராகவே
நாங்கு புல்லாங்குழக்கள்
செபாஸ்டியன் ஜொகானஸ் பாச்சின்
மறுக்கப்பட்ட தேவதைகளின்
கன்னிகழியாத
இசைக்கோலத்தை விடுவிக்கின்றன,
இழுபறியாக
மூன்று மணிநேரம்
எடுப்பெடுத்தே
நாதசுரக்கோலங்களை
வாரிபோட்டுக்கொண்டுபோய்விட்டது,
முடிவுவரையில்
பூத்திருந்தது காத்திருந்தேன்
ஏனோ
எங்கேயோவொன்று
நிம்மதியாக எழுந்துவரவில்லை,
அதில் பல ரகசியங்களும்
வெளிப்படுத்தப்படவில்லை !

.
.......................................................................................
.
சில்லறைகளில்
வாழ்வோட்டமிருப்பதால்
சுழட்சிமுறைக்கு
அலுமினியபேணி பொறுக்கும்
அதிஷ்டமில்லாதவன்
அதீத நம்பிக்கையோடு
குப்பைத்தொட்டியைத்
திறந்து பார்த்து
துலாவி ஏமாந்து
கழி(வு)விரக்கமில்லாத
பணக்காரர்களை வாரித்திட்டி
உமிழ்ந்துப்பி
அறைந்து மூடுகிறான் !
.
...............................................................................
.
நான்
பயண அனுபவங்களை
நிறுத்தங்களோடு பாதுகாப்பவனல்ல.
கலையாததேன்கூடு போலக்
கூட்டமில்லாத ...
மதியநேர கடுகதிரெயில்,
வயதானவொருவர்
எங்கேயோ பார்த்துக்கொண்டு
ஓரிடம்பற்றி
எங்கேயோ கேட்கிறார்!
நான்
”எங்கே இறங்கவேண்டும் ?”என்றேன்.
என்
குரலின் திசை சரியாகவிருந்தது!
” கடல் முடியுமிடம் ?”என்றார்
கறுப்புக்கண்ணாடியைச் சரிசெய்து
ரெயில் அமர்முடுகுவதை
சந்தேகமாக உற்று
"அரண்மனைப்பாலம் தாண்டியாச்சா " என்றார்
நான்
நிலைமாறும் ஜன்னலோடு
திசைக்கேற்பத் தலைதிருப்பினேன்,
ஒருபக்கம்
சமாந்தரமாக மலைகள் மறைய
மறுபக்கமெல்லாம்
வெயில்காய்ந்த வயல் வெளிகள்
தண்ணிகாட்டிய
ராஜஸ்தானப்பாலம் எங்கே ?
ரயில் ஆர்முடுகுவதுக்குள்
அலைக்கழிப்பில்லா அவசரங்களோடு
இறங்கிப்போய்விட்டார் !
நிதானமாகத்தான்
சிலநேரம்
பார்வையற்ற உரையாடல்களைச்
சேதாரமில்லாமல் கையாளவேண்டியிருக்கு !

.
..................................................................................
.
சேர்ந்தழுவத்துக்கு
யாரையோ
யாசித்தபடி
கை விரல்களை
மேல்நோக்கிப் பிராத்திக்குது
இலையுதிர்ந்தமரம் ,
ஒருமித்த ஒத்திசைவுகள்
கிடைத்ததுபோல்
விறைத்த கிளையில்
வந்திறங்கிய சாம்பல்ப்பறவையும்
இறக்கைகளை உள்ளிழுத்து
குற்றவுணவில்லாத குளிரை
மனமொருமித்துச்
சபிக்குது !
.

..................................................................
.
மேப்பிள் மரங்கள்
இலைகொட்டிக்கொண்டிருந்த
வெறிச்ச வீதியில்
தட்செயலாகப்
பேச்சுக்கொடுத்த மனிதன் ...
சுருக்கம் விழுந்தோடும்
நேற்றுவரையில்
இளமையைத் தேடியதாகச் சொன்னான்,
அவனுக்கு
நாளையென்பதில்லாததுபோலவே
கால்களில் களைப்பு,
நெற்றியெலாம் வரைகோடுகள்,
தீப்பந்தங்கள் பற்றவைத்து
அவனருகிலொரு இளம்பெண்
அவள் கண்களில்
இரத்த சலனம்
முகத்தில் கலவரமான கோபம்,
இன்றுவரையில்
காதலைத்தேடியதாக அவள் சொன்னாள்,
மூச்சுமுட்டி விழும்
நம் மூன்று பேரின்
உரையாடல் மவுனப்பரப்பில்
உட்காந்துகொள்ளக்
காற்று இடம்தேடிக்கொண்டிருந்தது,
அவன் புலம்பியதுக்கும்
அவள் விளம்பியதுக்கும்
நான் விளங்கியதுக்கும்
முடித்துவைக்கும் பிராத்தனைகளில்
ஒவ்வொரு வாய்க்கும்
ஒவ்வொரு பெயருண்டு !

.
........................................................................................
.
கை தவறிவிட்ட
பலூனை
திரும்பிவரும்படி
அப்பாவின்
கைப்பிடியை உதறிவிட்டு
கெஞ்சிகேட்டழுகிறாள்
குட்டிப்பெண்,
நெருக்கியடிக்கும்
வாடிக்கையாளர் கூட்டத்தில்
பலூன்
காற்றில் முகவரிதேடிபடியே
திசையிழந்த
தலைகளுக்குமேலாக
அங்காடியெங்கும்
அசைந்தாடியலைகிறது !
.
............................................................................
.
எல்லாருக்கும் இலவசமென
உள்நுழைவு அச்சடிக்கப்பட்டிருந்ததை
வாசித்துத் திகிலடைந்து
சட்டென்று
படிதாண்டி உள்வாங்கிவிட்டேன் ! ...
எனக்கு
ஏற்கனவே கொஞ்சமாதான்
அதுகள் பற்றித் தெரியும் !
விளக்கங்கள் மேலதிகமாய்த் தெளிவாக்க
விடேந்தியாக விடப்பட்ட
அழகான பெண்களும்
கையைப் பிடித்து இழுக்காத குறையாக
கந்தர்வ ரம்மியங்களைத்
திணித்துக் கொண்டிருந்தார்கள்.
துரிகைகளின் மயிர் அடர்த்தியை
ஆழமாக விசாரித்ததுபோல
மூலவர்ணக்கலவைகளை அடியொற்றி
மூன்று வெவ்வேறு அரங்குகள்,
1. வஸல்லி கண்டிஸ்கியின்
அலைக்கழிக்கும் அமைதி
2. லியனார்டோ டாவின்சியின்
எண்ணைவடிப்பு வழுவழுப்பு
3. வின்சென்ட் வான் கோவின்
செவ்வியல் நீரோவியங்கள்
உஊஊஊப்ப்ப்ப்பப்ஸ்ஸ்ஸ்ஸ்
நிறங்களின் நிலைமையை ஊகித்து
சட்டென்று சுதாரித்து
சடுதியாக வெளியேறிவிட்டேன் !
இனி
தேடலின் விடுபட்ட பக்கங்களை
நீண்ட நாட்களாகவே
நிழல்போல அரித்துக் கொண்டிருக்கும்
அந்தராத்மா !

.
..............................................................................
.
என்னோடு சேர்த்து
முந்நூறு சொச்சம்
அசந்துபோன ரயில்ப்பயணிகள் ,
எஞ்சின்வேகம்
காற்றைக் கோடுகிழிக்கும்போது
நிலமதிரும் சந்தங்கள்,
அவ்வப்போது
நிறுத்தங்கள் பற்றிய
சில்லறைத்தனமான
மவுனத்தில் இடைஞ்சல்கள் ,
எல்லோருக்கும் பொதுப்படையில்
தண்டவாளச் சில்லுரச
எண்ணெய் ஆவியாகப்போகும்
கிரீச்சிடல்கள் ,
கண்களை மூடியபடி
மஞ்சவண்ணாமரக் குயில்களோடு
நான் மட்டும்
தனியாகவிருந்தேன் !
.
.................................................................................
.
அடிப்படையில்
அவரின்
அந்தாதிக் கேள்விகள்
அவராகவே இருந்துமில்லாத போதும்
ஓரளவு எளிதாகிவிட்டது. ...
நான் பேச்சுத் தமிழில்ப் பறைஞ்சால்
அவரோ
இலக்கணத் தமிழில் சல்லாபித்தார் .
அவர்
விந்திவிந்தித் தொடங்கினாலும்
வேதாந்த சித்தாந்தம்
சொல்வதில் ஓர் ஒழுங்கு இருந்தது
நான்
தன்னையறிதல் பற்றி
ஏதாவது வினாவுவதட்குள்
என்
கண்களைபார்த்தே
உரையாடலைத் தொடங்கினார்
நான்
வாழ்க்கைக்குள் மீளமுடியாதவைகள்
கேட்பதற்குள்ளாகவே
என்னைத் துளைத்தெடுத்து
என்
பின்புலங்கள் சொல்லத்தொடங்கியபின்புதான்
நான்
கருத்துக்களுக்குள் சென்றேன்.
அங்குதான்
நான் யார் ?
என்பதிலுள்ள
அத்தனை பிரச்சினைகளும் தொடங்கியது !

.
......................................................................
.
ரெயில்டிக்கெட் அளவில்
மன்றாடமாகக்
கசங்கிய காகிதம்தான்
அவசரத்துக்குக்
கையில் கிடைத்தது,
நினைவசைவிலிருந்த
ஒரு
வேரறுந்த பட்டமரத்தைப்பற்றி
முகமிருக்கும்
நாலுவரியில் உயிர்ப்பித்துவிட்டு
நாலாய் மடித்துக்
காற்றில் வீசியெறிந்தேன்,
திருப்தியடைந்தது போலவே
விரிந்துபறந்தொரு
இளமரத்தைத் தேடிபிடித்து
ஈரமான இலையில்
ஒட்டிக்கொண்டது !
.

.................................................................................
.
எனக்கெனவே
வடிவமைக்கப்பட்டது போல
அதிகாலை
நடைபாதை நிழலில்களில்
குளிர்நாளின் ...
சலிப்புத்தரும் அயர்ச்சி !
இனியும்
ஏற்றுக்கொள்ள விரும்பாத
பொறுப்புக்களையெல்லாம்
இடம்மாற்றிவைத்துவிட்டது
மேப்பிள்மர இலைகளுக்கு
தங்க முலாம்பூசிக்கொண்டிருந்த
வெளிச்சப்பகல் !
பிரதிக்கப்பட்ட
திசையில்லா அலைச்சலில்
மிச்சங்களையெல்லாம் கடந்துவிடும்
கடைநிலை உத்தேசத்தில்
மாலைப்பொழுது !
தனிமனிதர்கள் போலவே
துணை தேடும் துடிப்பில்
தன்னை இன்னமும்
ரகசியமானவொண்றாகவே
கட்பனை செய்கிறது
நடுச்சாம இருட்டு !
ம்ஹூம்.!!!!!!!!!!
ஒன்றும் தேறவில்லை. !!!!!!!!!!
பலருக்கு
முழுமையில்லாத நாள்
இப்படித்தான் முடிந்துபோகிறது !

.
.......................................................................
.
திடுக்கிடலுடன்
அதிகாலை நடைவீதி,
சஞ்சலங்களோடு
முகத்தில் வெய்யில் ,
பாரபட்சமின்றிக் குத்திக்கிழிக்கும் ...
கார்திகைக் குளிர் ,
எல்லைகள் விரிந்துகொண்டிருக்கும்
புதிய பயணம்,
எந்நிலையிலும்
உந்தித் தள்ளுவது
அசட்டுத்தனமான தொடக்கம் தந்த
மௌனத்திலிருந்து பிரவாகிக்கும்
நம்பிக்கைதான்.

.
...........................................................................
.
எல்லாப்பொருத்தமும்
அமர்க்களமாக அமைத்திருக்கும்
அந்தப்பெண்ணுக்கு
பிசாசு பிடித்திருக்கவேண்டும் !
உரத்தகுரலில் கத்தி...
கைகளைத் திக்கில் பரப்புகிறாள்,
மூச்சுமுட்ட
மழைக்குள் ஓடிப்போகிறாள்,
காதலர்கள்
முத்தமிடுவதைக் கவனித்து
நிறையவே ஜோசிக்கிறாள் ,
தெருப்பிசைக்காரனின்
குளிர்தாங்காக் கந்தலுடைக்காகக்
பரிதவிக்கிறாள் ,
ஜவுளிக்கடை ஜன்னலில்
முகம் பார்க்கிறாள் ,
கைதவறி விழுந்த
முடிச்சுப் பொதிக்கும்
பரிகாசமாகச் சிரிக்கிறாள்,
இலைகொட்டிய
வெற்று மரக்கிளைகளுக்காய்
தலைகுனிகிறாள் ,
ஒவ்வொரு
அவசர வாகனங்களையும்
வெறுப்பாகவே நோக்குகிறாள்,
எதிர் வெட்டவெளிகளைக்
கண்ணில் ஒற்றிக்கொள்கிறாள்,
புறாக்களுக்குக்
எம்பிப் பறக்கச்சொல்லி
அகலக் கைவிசிறிக் காட்டுகிறாள்,
இதையெல்லாம்
திரும்பத் திரும்பவே நிரூபிப்பதில்
அவளுக்கு வருத்தமில்லை,!
நமக்குத்தான்
எதையோ கண்டுபிடித்தது போல
விசர் வருகுது! !

.
........................................................................
.
புதிய
சந்துப்பாதைகள்,
பழக்கமில்லாத
தட்காலிகத் தங்குமிடம் ,
தனித்தும் சோடியாகவும் ...
உள்ளிழுத்துக் கொள்கிற
உல்லாசப் பிரயாணிகள் ,
விழுந்துவிட்ட ஈர்ப்பைப்
புறந்தள்ள முடியாத
முகஸ்துதிகள் ,
ஆனாலும்
பிரியத்துடனேயே இருக்கிறது
வாசனைகள் !

.
..............................................................................
.
சொர்மலாந்து
புல்வெளிப்பிரதேசத்தில்
பாச்சல் குதிரைகள்
சோம்போறித்தனமாக
மேய்ந்துகொண்டிருக்கின்றன ,...
ச்ஜெர்ந்ஹோவ் நெடுங்சாலையில்
பேர்ச்பித்துளா மரங்கள்
இலையுதிர்குளிர் வருவதுபற்றி
விவாதம் செய்கின்றன
கேநேஸ்தா
வடிசாளைப் புறநகரம்
புழுதிக் காற்றில்
எந்தக் கனவுகளும் இடைப்புகாமல்
உறங்கிக்கொண்டிருக்கு
பிளேன்
அடைக்கல கிராமம்
என்னைப்போலவே
ஏதிலிகள் போலிறங்கும்
பிளிக்கன் பறவைகளுக்கு
திசைகள் காட்டி்ககொண்டிருக்கு
ஓரளவுக்கு எதிர்பார்த்தபடியே
எல்லாவிதமான முன்னசைவுகளிலும்
ஒரு மரணத்தின்
கடைசி ஒத்திகைகள் ,
ஸ்டேர்ன்ச்ட்டேர்
தேவாலயத்தின் சவக்காலையில்
ஒரு பெண்
பரமபிதாவின் பாவமன்னிப்புப்
போதனைகளோடு
மூன்றாம் நாள் எழுப்பப்பட்ட
சத்தியாமான தேவவார்த்தைகளோடு
அடக்கமாக இறக்கப்படுகிறாள்
அவளின் நிறம்
அவளின் குணம்
அவளின் வாசனை
அவளின் கோபம்
அவளின் சாபங்கள்
தனிப்பட எனக்கு நல்லாவே தெரியும்
நினைவுகளை நிறுத்தினாலும்
அவள் எழுந்துவரவே போவதில்லை
அவளின் பெயர்
இன்னும் சில மாதங்களில்
கல்லறையில் எழுதப்படும்
அதுவரையில்
அந்தப் பெயர் கொஞ்சநாளாவது
எனக்கே சொந்தமாகவிருக்கட்டும்

.
..............................................................................
.
தெருப்பாடகன்
கம்பளிக் கையுறை போட்ட
பத்து விரல்களிளும்
"ஸ்பானிஷ் லல்லபாய் "பாடலை
ஹார்மோனிக்காவில் வாசிக்கிறான் ...
அவன்
மனைவியாகவே இருக்கவேண்டும்
வெறுங்கையால்
" மெக்சிகன் பியான்கோ" தாளகதியில்
மத்தளம் அடிக்கிறாள்,
கால்நடை மனிதர்கள்
மணித்துளிகள் இடைவெளியில்
வேகமாகக் கடந்து போய்விடுகிறார்கள்,
உள்ளங்கையால்
சக்கரங்கள் உருட்டியபடியே
நடைதள்ளுவண்டியில்
அசவுகரியமாக வந்தவன்
மிகக்கிட்ட நெருங்கி வந்து
கைதட்டி
உடம்பெல்லாம் அசைத்து
இலவசமான இசை
பிடித்து அடைத்துவைத்திருந்த
சந்தோசங்களையெல்லாம்
வெளியேற்றிக்கொண்டிருக்கிறான்! 

.
......................................................................................
.
விண்மீன்கள் தூங்கியிருப்பதால்
ஜன்னல்களுக்குள்
நிலையெடுத்து நின்றுகொண்டு
வீதிவிளக்கோடு
முட்டிமோதிக்கொண்டிருக்கும்...
மின்மினிப்பூச்சிகளின்
பின்கோட்டு அழகோவியமெல்லாம்
சிதறிவழியும் நிழல்களைப் பற்றிக்
கவிதை எழுதுகிறாய் !
ஆழிக்கடலின் அமைதியோடு
இரவெல்லாம் ஒருவன்
மன அலைகளோடு ஒட்டாமல்
அந்தக் குறுமண் பாதையிலே
வெறுங்காலில்
நடந்தலைவதைப் பார்த்திருக்கிறீயா ?
கவித்துவ எண்ணங்கள்
கரையேறித் தவழ்ந்துமிழும்
பட்டாம்பூச்சி வார்த்தைகளோடே
வாழ்ந்துகொண்டிருக்கும்
நீயெங்கே
அதையெல்லாம் கவனிக்கப்போகிறாய் ,
சிலநேரம்
புகைமூட்டம் போலவே
அவன் அசைவுகளைக் கண்டிருப்பாய் ,
அவனின்
கொப்புளம்போட்ட பாதங்களின்
வலியுனக்குத்தெரியவர வாய்ப்புகளேயில்லை
அதைப்பற்றி
விபரமாகத் தகவலறிந்த
அதிகாலைத் துருவநட்ச்சத்திரம்
எத்தனைமுறை கண்கலங்கியதென்பது
மிகப்பிரபலமான உனக்குத்
தெரியவரவும் வாய்ப்புகளேயில்லை !

.
..............................................................................
.
கதகதப்பைப்
பாரக்கனதியாக்கும் ஆடை
விரல்களைத் தின்னும்
கடும்தோல்ச் சப்பாத்து
வியர்வை நாறும் ...
தடித்த கழுத்துப்பட்டி
தலை மயிர்களை
எண்ணிப் பிடுங்கும் குல்லாய்
இந்த
மரணத்தின்
விளையாட்டுதான்.
நம்பிக்
கையிழந்த
வடதுருவ மனிதர்களின்
குளிரைப் புறக்கணிக்கும்
கடைசி முயற்சி

.
.......................................................................
.
கொஞ்சம்போல
நனைத்தெடுக்கும்
சாத்தியங்கள் இருந்தது
திரண்ட முகில்களில்,
பிறகுதான் ...
பலவீனமான விடியிருளின்
திரைகளை விலக்கித்
துளிகளை அறிமுகப்படுத்தொடங்கியது
தூறல்கள் ,
பாதையோரம்
வீடில்லாதனையே அதுவும்
குறிவைத்ததுத் தாக்குகிறது,
அகலவீதிகளில்
அடித்துப் பிய்க்குது
வெள்ள வெள்ளோட்டம் ,
கவிஞ்சர்களின்
பிரியங்களை விதைக்கும்
ஆச்சரியங்களையெல்லாம்
வித்தையாக்கத் தெரிந்திருக்கிற
இந்த மழை
கூரையில்லாதவனின்
கதகதப்பான கனவில்
ஈரமாகப் பெய்து முடித்திருக்கலாம் ,
தனியொருவனைப்
பழிவேண்டிகொண்டுருக்கும்
மழையின்
இத்தனை தடுமாற்றங்களிலும்
பக்குவமின்மையிலும் கூட
அழகாகத்தானிருக்கிறது
அள்ளிக்குளித்த
நகரம் !

.
......................................................................
.



No comments :

Post a Comment