Thursday 14 December 2017

ஜோன்ஸன் .001

 வேலைத்தளத்துக்கு வந்த அன்று ஒரு கன்னங்கரேல் நிறத்தில் கவ்போய் குதிரைக்காரர் தொப்பி போட்டுக்கொண்டு வந்திருந்தார் ஜோன்சன், வேலைத்தளத்துக்கு உள்ளே வந்து ஒருமணித்தியாலத்துக்கு மேலாக நின்றும் அந்தக் க்வபோய் தொப்பியை அவர் கழட்டவேயில்லை . அந்த வேலைத்தளத்தை சுற்றிபார்த்தார். அவருக்கு அங்கே என்ன வேலை கொடுத்து மேலிடத்திலிருந்து அனுப்பினார்கள் எனறு எனக்குத் தெரியாது. அதைக் கேட்க்கும் அதிகாரமும் என்னிடம் இருக்கவில்லை. சிலநேரம் தட்காலிகமாக சிலரை மேலிடம் இப்படி அனுப்பும் என்று தெரியும் .


" இங்கே ரெண்டு திண்ணாக்கரசு வேலை செய்வதாக ஹெட்ஒபிஸில் ஜிஎம் பரன்சோதி ஐயா சொல்லி அனுப்பி இருக்கிறார், "


" ஓம், ஓம் ..இங்கே ரெண்டுபேரும் திண்ணாக்கரசுகள்தான் "


" , மானேஜர் திண்ணாக்கரசு அண்ணையை முதலே தெரியும்,,உமக்கும் பெயர் திண்ணாக்கரசுவா , அல்லது வேற ஏதும் பெயர் இருக்கா,,எப்படி உம்மைக் கூப்பிடுறது , "


" ஓம், ஓம், எப்படியும் கூப்பிடலாம்,,அரசு என்றுதான் இங்கே வேலை செய்யுறவை கூப்பிடுவினம் "


                           இதுதான் ஆரம்ப அறிமுக தொடக்கம். அவர் பெயர் ஜோன்சன் என்பதை அவர் சொல்லவில்லை. மேலிடத்தில் இருந்து கொடுத்தனுப்பிய இடமாற்றக் கடிதம் மடித்து வைத்திருந்தார். அதை எனக்கு காட்டவில்லை . அதை எனக்கு காட்டவேண்டிய அவசியமும் இல்லை. இப்பிடி யாரும் இடமாற்றத்தில் வந்தால் அந்தக் கடிதத்தை மனேஜர்தான் வாங்கி எப்பவும் பைலில் வைப்பார்.


                                        ஜோன்சன் கொஞ்சம் எங்கள் பாண் பேக்கரியின் " பிராண்ட் நேம் " போல இருந்த பிராண்டல் எண்ணெய் வாசம் ,ஈஸ்ட்டில் கோதுமை மா புளிக்கிற மணம் போன்ற வாசனைகள் அதிசயமாக முகர்ந்துகொண்டிருந்தார் . அவரோட ஸ்டைலுக்கு அந்த இடம் தெருவில துண்டைப்போட்டு பிச்சை எடுப்பது போலிருந்தது போல இருந்திருக்கலாம் .


                                        முடங்கப் பாய் இல்லை எண்டு சடங்கை நிறுத்தினவன் கதை போல தெரியாமல் குழப்பமான இடத்துக்கே வந்து மாட்டிப் போட்டனோ என்று நினைத்தாரோ தெரியவில்லை . கொஞ்சம் அமைதியாக இருந்தார். பிறகு,


" என்னோட பெயர் ஜோன்சன், நாவாந்துறை ஊர் , எஸ்கேயோடு பெரிய ஸ்டோர்ல வேலை செய்துகொண்டு இருந்தேன் ,,இப்ப இங்க பிடிச்சு அனுப்பி இருக்கினம் "


" அப்படியா,,இது பேக்கரி,,மாவும், பாணும் ,பணிசும் தான் இங்கே,,எனக்கு படிவம் செய்யுற வேலை "


                                                    என்று சொன்னேன், ஏனென்றால் பாண் பேக்கரி அரசாங்க சார்பான எம்பிசிஎஸ் நடத்தினாலும் அதில பாண் போடுற பாஸ், அவனுக்கு ரெண்டு உதவி பாஸ், அவர்களுக்கு கீழே ரெண்டு கைவேலை, ஒரு தட்டு துடைக்கிற உதவியாள், ஒரு விறகு பிளக்கிறவன் இவர்கள் எல்லாம் அன்றாடம் சம்பளம் கையில எடுக்கும் வெளி ஆட்கள். அவர்களை வைத்து வேலை வேண்டுறது குருடனை ஆடு மேய்க்க விட்டுப்போட்டு அதைத் தேட எட்டுப் பேரை அனுப்புறது போல ,


                                                  
பலவருடம் எம்பிசிஎஸ் இல் பிரான்ச் மனேஜர் ஆக இருந்து பலநோக்கு நெளிவு சுளிவுகளில் மூச்சைப் பிடிச்சு முத்துக் குளிச்சு சுழி ஓடியவர் வயதான திண்ணாக்காரசு மனேஜர் , அவர்தான் பேக்கரி மனேஜர், அதனாலோ தெரியவில்லை அவரைப்பற்றி என்னோடு உரையாடலை ஆரம்பித்தார். அது அவருக்கும் இயல்பாக ஒரு புது இடத்தில பழக்கத்தைக் கொண்டுவர உதவியாக இருந்தது,அதிகம் யாருடனும் கதைக்க விரும்பாத எனக்கும் தான் ,


" அப்பிடியே, செபமாலை மாதாவே , திண்ணாக்கரசு அண்ணை நல்ல கலகலப்பான ஆளே,,அவரோடு வேலை செய்து இருக்கிறேன்,,"


" ஓம், ஓம்,,,கலகலப்பும்தான், அங்,,,ங்,,,ங்க் ,,,,கலகமும்தான் "


" ஆள் நாட்டுக்கூத்து அண்ணாவியும் , ஒரு நாடக நடிகரும் என்று தெரியுமோ "


" ஓம், ஓம்,, சொல்லி இருக்கிறார் "


" , திண்ணாக்கரசு அண்ணை, எங்கட ஊர்ல வந்து இலங்கைவேந்தன் என்ற நாடகம் போட்டு இருக்கிறார், "


" ஓம், ஓம்,,"


"செபமாலை மாதாவே , அதில ராவணன் வேஷத்தில ஆள் சரியான கலாதி,,நடிப்பு அந்தாளுக்கு ஒட்டிப் பிறந்த கலை "


." ஓம், ஓம்,,"


" கொழும்புத்துறை குஞ்சிதபாதத்தின் அடங்காபிடாரி நாடகத்தில நடிச்சவர் எண்டும் சொல்லி இருக்கிறார், ,,ஒரே எகத்தாளமாதான் இருந்து இருக்கும் அந்த நாடகம் ."
" ஓம், ஓம்,,"


" திண்ணாக்கரசு அண்ணை நல்ல கலகலப்பான நாடக நடிகர் , செபமாலைமாதாவே , அந்தாள் சும்மா வயதிறந்தாலே முசுப்பாத்தி கதைகள் தானே,,எப்ப வருவார் இங்கே,,அவருக்கு வேலை நேரம் ஸ்டார்ட் ஆகிறது எத்திணைமணிக்கு,,"


                                                  என்று நிறுத்தாமல் ,சிரிச்சுக்கொண்டு சொன்னார். நான் எல்லாத்துக்கும் " ஓம், ஓம்,," என்று தலையை ஆட்டிக்கொண்டிருந்தேன் .ஜோன்ஸன் கலகலப்பான பேச்சு துணை என்று ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது . ஆனாலும் அதிகம் யாரோடும் கதைக்க விரும்பாத என்னிடமிருந்து அவர் எதையும் அதிகம் அறிய முயட்சிக்கவில்லை , பதிலாக நான் எப்பவும் நிறைய விசயங்களை கேட்டுக்கொண்டே இருப்பேன், அவர் சலிப்பு அடையாமல் சொல்லிக்கொண்டே இருப்பார்.
.
................................நமக்கு தெரிந்தவர்கள் இறந்துவிடும் போதுதான் அவர்கள் நினைவுகளை மீட்டும் போதுதான் காலமும் இன்னொருமுறை எழுந்து முன்னுக்கு வந்து பல சம்பவங்களை இன்னொருமுறை வாழ்ந்துவிடு என்பதுபோலத் தருகிறது.அப்படி அந்த நினைவுகள் மட்டுமே நம்மளால திரும்பிக்பாக்கமுடியும்படியாகத்தானே உயிர் வாழ்தல் என்பது வரையப்பட்டு இருக்கிறதே .....................


                                                   ஜோன்ஸன் இலகுவாக எல்லோரோடும் பழகிற ஆள் மாதிரி தெரியவில்லை. அவருக்கு மானேஜர் திண்ணாக்கரசு பற்றி தெரிந்ததெல்லாம் சொல்லி முடிய, ஒரு கதிரையை எனக்கு அருகில் இழுத்துப் போட்டு , அந்த க்வபோய் தொப்பியைக் கழட்டி கையில வைச்சு திரிசூலம் போல கொஞ்ச நேரம் சுத்திப்போட்டு , அதை மடியில வைச்சுப்போட்டு நான் நிரப்பிக்கொண்டு இருந்த F 15. 9 B . படிவங்களை பார்த்துக்கொண்டிருந்தார்.


                                             
அந்த வேலைத்தளம் தூய்மையான தமிழில் சொன்னால் ஒரு வெதுப்பகம். அப்படித்தான் அப்போது அந்தப் பெயர் பாவனையில் இருந்தது. அல்லது பாவனைப்படுத்தும்படி கட்டளை இடப்பட்டிருந்தது. அத எங்கள் ஊர் பேச்சு மொழியில் சொல்வதென்றால் பாண் பேக்கரி என்று சொல்லுவார்கள். எம்பிசியேஸ் என்ற பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமானது அந்த வெதுப்பக்கம், நான் அங்கே கணக்கு வழக்குப் பார்க்கும் கிளார்க் வேலை செய்துகொண்டிருந்தேன்.


                                   அந்த வெதுப்பக்கம். இருந்தது ஒரு கிராமப்புறத்தில். நாயன்மார்கட்டுக்குளத்துக்கும் மாம்பழம்சந்திக்கும் நடுவில் தவிட்டுத் துரையன்னை கடைச் சந்தியில் இருந்தது . காலையில் எல்லாரும் அரசாங்க வேலைக்கு டவுனுக்கு போவார்கள், நான் கொஞ்சம் இடைச்செருகல் கிராமநகரமாக இருந்த என் ஊரில் இருந்து சைக்கிளை மிதிச்சுக்கொண்டு பின்தங்கிய கிராமத்துக்கு வேலைக்கு போவேன். பின்னேரமும் அதுபோல அவர்கள் களைச்சு விழுந்து வர நானும் மாறிப் போகும் ஒரு குளறுபடி நடக்கும்.


                                      ஜோன்சன், இருட்டைப் போட்டோகொப்பி அடிச்ச மாதிரி கறுப்பு நிறம், கழுத்தில ஒரு மொத்த உருளை சங்கிலி, கை மணிக்கட்டில ஒரு உருளை கைச்செயின் , அஞ்சு விரலிலும் சவரக்கல்லு சைசில் இனிஷியல் எழுதிய மோதிரம், கோல்டன் செயின் ரோலெக்ஸ் கைக்கடிகாரம். அதன் டயலும் தங்கப்பவுன் போலிருந்தது. புத்திசாலித்தனத்தை மறைக்க முடியாத காந்தப்பார்வைக் கண்கள், வழுவழுப்பான அகல் வெளிச்ச முகம், சுத்தி வளைக்காத நேர்மையான சிரிப்பு, அன்றுதான் ஜோன்சனை முதல் முதலில் சந்தித்தேன்.


                            இவளவு நகை நட்டு நாட்டுக்கோட்டை செட்டியார் வீட்டுப் பெண்கள் போல அள்ளிப் போட்டுக்கொண்டு வேலைக்கு வருகிறாரே இதை எல்லாம் எங்கிருந்து சம்பாரித்தார் என்ற டவுட் எனக்கு எப்பவுமே இருந்தது. அந்த வெதுப்பக்கத்தில் வேலை செய்த வெளிஆட்களுக்கும் இருந்தது, யாரும் என்ன ஏது என்று சங்கதி கேட்ட்தில்லை.


                                முயல் பிடிக்கிறவன் முண்டாசை அவிட்டு விட்டு அதை ஆட்டிக் காட்ட சொந்த வாழ்க்கைக்கு ஆப்பு விழுந்த மாதிரி ஒருவரின் பெர்சனாலிட்டி என்பது அவர் அவர் விரும்பியபடியே அமைத்துக்கொள்வதுதானே. அதில அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள் என்றால் அது அவர்களைப்பொறுத்தவரையில் பொசிடிவ் ஆன மனநிலையை ஏட்படுத்தலாம் தானே .


..................வாழ்க்கையில் கதைகள், அதில வரும் ஒரு கற்பனை, அது ஒரு முழுக் கற்பனை , கட்பனையின் பெயர்கள் என்னைப் போலவே உண்மை இல்லை. என்பதுபோல வயதும் ஓடிப்போக . இவளவு கால தொடர்புகள் அறுந்துபோன இடம்பெயர், புலம்பெயர், தலைமறைவு, கால இடைவெளியில் ஜோன்சன் பற்றி பலமுறை ஜோசித்து இருக்கிறேன். கண்டியில் செமினரியில் வேலை செய்கிறார் என்று எங்கயோ கேள்விப்பட்டேன் . அவளவுதான்.......................


                                            
எம்பிசீயெஸ் என்ற பலநோக்குக்கூட்டுறவுசங்கம் அலிபாபாவும் நாட்பது திருடர்களும் கதை போல ஒரு மர்மஜோக மூடுமந்திரம் . அது ஒரு அரசாங்க நிறுவனமாக இருந்தாலும், அதில போதிய சம்பளம் கொடுப்பதில்லை. அதில் வேலைசெய்பவர்கள் அவர்களின் சொந்த புத்திசாலித்தனத்தால் மேலதிக வரும்படிகளை ஏட்படுத்திக்கொள்ள முடியும். ஜோன்சன் சிலவேளை மத்தியகிழக்கு நாடுகளில் வேலைசெய்திருக்கலாம் என்பதுதான் பொதுவான அனுமானமாக இருந்தது .


                                         ஜோன்சன் நாவாந்துறையில் இருந்து வருவதாகச் சொன்னார். ஆனால் அவரின் எடுப்பைப் பார்த்தால் வெளிநாட்டில் இருந்து நேரா வந்து பேக்கரிக்க குதிச்ச மாதிரி இருந்தது. அவரோட அணுகு முறைகளில் கொஞ்சம் இல்லை அதிகமாகவே ஒருவிதமான தன்னுணர்வுக் கட்டுப்பாடு இருந்தது . வெளிநாட்டில் வசித்து இருக்கலாம் போலிருந்தது பேச்சு முறையில் இருந்த கண்ணியத்தில். அது எந்தவகை நாடாக இருக்கும் என்று மட்டுப்பிடிக்க முடியவில்லை


" நாவாந்துறையில் பாலச்சந்திரனைத் தெரியுமா,"


" யார் அவர்,,, "


" நாவாந்துறைதான் அவரும்,,அவரும் இரவு பகல் எண்டு இல்லாமல் எப்பவும் ஒரு பாலுமகேந்திரா தொப்பி போட்டு இருப்பார், "


" ஹஹஹஹஹ்,.. அட.,,தாலியக்கட்டு.,,, ,என்னோட தொப்பி நல்லா கிண்டுது போல இருக்கே "


" அந்த் தொப்பி வருஷக்கணக்கில வெய்யிலில போட்டு வாங்கி நல்ல வெளிறின நிறத்தில இருக்கும் ,"


" ஹாஹாஹா...இந்த திணாக்கராசுவும் வாயில வெடிச் சிரிப்பு வைக்கிற திண்ணாக்கரசு போல இருக்கே "


" ஹ்ம்ம் ,,,நான் சும்மா வெங்காய வெடி,,மனேஜர் திண்ணாக்கரசு அண்ணை வரமிளகாய் சரவெடி "


" பிறகென்ன,,அரசுவுக்கும் ஏடாகூடமா எகத்தாளம் வருக்குதே "


" இல்லை,,நீங்க நட்பான ஆள் போல இருக்கு அதால சொல்லுறேன் "


" வேற என்னவும் பெயர் சொல்லுவினமா நீர் கேட்ட அவருக்கு ,,அல்லது சென் மேரிஸ் கோவிலடியா ,அல்லது ,சென் நிக்லஸ் கோவிலடியா ? "


"அவர் நான் பேஸ் கிட்டார் வாசிக்கிற எங்கட ம்யூசிக் குரூப்புக்கு ஈகுலைசர் மிக்ஸர், பாபர் பொக்ஸ், மைக் செட், எல்லாம் கொண்டுவருவார் "


" , அட.,,தாலியக்கட்டு..... தொம்சன் சவுண்ட்ஸ்... .நம்மளிண்ட ,, சவுண்ட்ஸ் பாலா ,அவர்தானே" ,


" ஓம், "


" சவுண்ட்ஸ் பாலா, தெரியும், அட.,,தாலியக்கட்டு.... அவர் எங்கட சொந்தம், சவுண்ட்ஸ் பாலா சென் நிக்கல்ஸ சேர்ச்க்கு பக்கத்தில வீடு ,,, நாங்கள் சென் மேரிஸ் சேர்ச் பங்கில இருக்கிறம் "


என்று சொன்னார், அதில இருந்து என்ன தாலியக்கட்டோ தெரியவில்லை நீண்ட நாள் பழக்கம் போல பிலாப்பழப் பால்போல பசை போட்டு ஒட்டிவிட்டார். இப்பிடித்தான் மனிதர்களுக்கு இடையில் உள்ள அவர்களுக்கே உரிய தட்ப்பாதுகாப்பு வெளிஇடைவெளிகளை நிரப்ப இன்னொரு பரஸ்பரம் அறிமுகமான மனிதர் தேவையாக இருக்கு,



முக்கியமாக எங்களின் ஊரில் லேசில் யாரும் யாருடனும் ராமனா, சீதையா, லட்ச்சுமணனா என்று தொடக்க விழுந்தேன் முடிச்சுக் கவிழ்ந்தேன் என்று ராமாயணம் போலக் கதைக்கமாட்ட்டார்கள். அதுவே ஒரு எட்டுப் பத்து மணித்தியாலம் ஒன்றாக இயங்க வேண்டிய தேவை இருக்கும் வேலைத்தளமாக இருந்தால் கொஞ்சம் இலகுவாக பழகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான்செய்யும் .


...........................அண்மையில், கிட்டத்தட்ட இருவது வருடங்களின் பின் வில்சன் ஒரு பதிவில் ஜோன்சன் அண்ணா என்று சொல்லி ஒரு படம் போட்டு இருந்தார். அந்தப் படம் ஜோன்சன் வெளிநாட்டில் இருந்தபோது எடுத்த படம். அது எனக்கு நல்ல நினைவாக இருந்தது , .....................


                                                ஜோன்சன் என்னோடு சில மாதங்களே அந்த வெதுப்பக்கத்தில் வேலை செய்தார்.ஆடிப்பாடி வேலை செய்யாட்டியும் இருவருக்கும் அலுப்பில்லாமல் வேலை செய்தோம். கொஞ்சம் அந்நியோன்னியமாக கொசப்புக் கதைகள் கதைச்சு பழகத் தொடங்க, என்னிடம் இருந்த இவர் எந்த நாட்டில வசித்தார் இவளவு தங்கப் பவுன் அங்கமெல்லாம் அள்ளிக்கட்ட என்ற நீண்டநாள் சந்தேகத்தைக் கேட்டேன்


" ஓம், கன வருஷம் இருந்தனான் ,


" ஓ ,,நான் நினைசேன் அப்படிதான் இருக்கவேண்டும் என்று "


" ஒரு கட்டதுக்கு மேலே பிடிக்கவில்லை,,வேற சில காரணங்களும் தான். மருகா திரும்பி வந்திடன் "


" மிடில் ஈஸ்ட் ??   எந்த நாடு,,சவூதியா,?,குவைத்,?,,,டோகாகட்டார் ?"

" இல்லை இல்லை,,,மிடில் ஈஸ்ட் எந்தப் பக்கம் இருக்கெண்டே தெரியாது, அரசு"

"அப்ப ஓமான் ? ,,அந்த நாடா ?"


" ஓமானோ????? ,,அட தாலியக்கட்டு... அது என்ன சாமான் எண்டே எனக்கு தெரியாது "


" மலேசியா பாக்டரி வேலை ?,,"

" இல்லை, அரசு " 

" சிங்கப்பூர் டொலர் எக்சேஞ் பிசினஸ் ? "


" அட.,,தாலியக்கட்டு.,,, இல்லை,...,இதுக இல்லை,,இதுக என்க இருக்கெண்டே தெரியாது "


" அல்லது கிரீஸ் கப்பலா ? "


"கப்பலோ,?,, நம்மட அராலி கடல்ல தொழில்செய்யிறவங்க வைச்சிருக்கிற நீல்மரைன் கொம்பனி அடிச்சு விட்டானே மல்டிடே பைபர்கிளாஸ் போட்டைத்தவிர வேற ,,ஒன்றுமே தெரியாது,,கப்பலோ!!!!! ,,ஹாஹாஹா "


" அப்ப வேற எங்க இருந்திங்க "


" சுவிஸ் "


" என்னது,,சுவிச் ,,அதுவா "


" லைட் போட அமத்துற சுவிச் இல்லை,, இது சுவிஸ் எண்டுறது சுருக்கமா,,சுவிஸ்ஸர்லாண்ட் ,,,"


" அப்படியா "


" டொச்சில சுவைட்ஸ் , அந்த நாட்டின் மிகப்பழைய காலத்துப் பெயர் ஹெல்வெட்ச்சியா என்று சொல்லுவாங்க அரசு "


"அப்படியா "


" ஓம்,,,சுவிஸ் .கையில கட்டுற மணிக்கூடு,, பிளாக்மணி காசுகள் பதுக்கி வைச்சிருக்கிற சுவிஸ்பாங் எல்லாம் நல்ல பேமஸ்ஸே "


" அட சுவிஸ் ,   ஆ...ல்...ல்...ல்ப்ஸ் ...   எண்டு ஒரு பனிச்சறுக்கு மலை "


"ஓம். ஆல்ப்ஸ்.....   அல்பாய்ன்ஸ் ,,..என்னெண்டு தெரியும்? ,ஆல்ப்ஸ் ..,,அதுதான் வின்டர் காலத்தில பேமஸான விளையாட்டு இடம், டூரிஸ்ட் வார இடம்  ஆல்ப்ஸ் "


" ஆ...ல்ப்...... எண்டு ஒரு பனிச்சறுக்கு மலை இருக்கெண்டு மேப்பில காட்டி சோசல்ஸ்டடி மாஸ்டர் படிப்பிச்ச நினைவு இருக்கு ,


" லுசான்ல சில வருடம்,,பிறகு சூரிச்,,,"


" பெயரைக்கேக்கவே இங்க நிக்கவே காது நுனி குளிருது ".


" பிறகு கடைசியில் செயின்ட்காளன்ல ,,,இடையில கொஞ்சகாலம் பிரஞ்சு கதைக்கிற லவுசாணியிலயும் இருந்தேன்,"


" அதுதான் பார்த்தேன் உங்களிடம் ஒருவித நளினமான நாகரீக ஸ்டைல் இருக்கு "


" அட.,,தாலியக்கட்டு.அப்படி ஒரு பளாயும் இல்லை,,,"


" என்னது,,"


" இங்கிலீஸ்,,டொச்,,கதைக்க கொஞ்சம் தெரியும், நல்லா நேரம் காலம் இல்லாமல் தும்படி அடிச்சு உழைச்சன் ,...வேற ஒரு ,தாலியக்கட்டுமில்லை ."


" சரி ஏன் திரும்பி வந்திங்க,,அவன் அவன் இங்க இருந்து தலையக் குடுதெண்டாலும்அங்கெபோக காணி பூமியை வித்து அடகுவைச்சு ஓடித்தப்பி போக இந்தா அந்தா எண்டு குதிகாலில கெம்பி குதிச்சு போக நிக்குறாங்கள் "


" அட.,,தாலியக்கட்டு.,,அதுதானே சொல்லுறேன் ..ஒரு கட்டதுக்கு மேலே பிடிக்கவில்லை..மணிக்கூடு போல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை,,,வீடு,,,,வேலை,,,வீடு..,வாழ்க்கை,,,,வீடு...,வேலை..."


" அட,,இங்க மட்டும் என்னவாம் அதுதானே இங்கே. யும் ,,ஜோன்சன் என்ன சொல்லுறீங்க."
.
.....................வில்சன் பதிந்த அந்த ஜோன்சனின் படத்தைக் கிளிக் செய்தபோது , அது ஜோன்சனின் முகநூல் கணக்குக்கு கொண்டுபோய் விட்ட்து. ஆச்சரியமாக அந்தப் படத்தின் கீழே நிறைய அவரோடு ,நண்பர்கள் உறவினர்,May he rest in peace ,So sad to see leaving so early., என்று ஆங்கிலத்திலும் கடவுள் நித்திய இளைப்பாற்ரியை அவருக்கு அருள் வாராக! என்று தமிழிலும் எழுதி இருந்தார்கள்.......................... .


" ஹாஹாஹா...அட.,,தாலியக்கட்டு.,,அரசு,,அரசு,,உமக்கு தெரியாது அப்பனே ,"


" எனக்கு வெளிநாட்டு அனுபவம் சுத்தமாகவே இல்லை, ஜோன்சன் "


" இங்க வேலை அரைவாசி வாழ்கை அரைவாசி இருக்கே,,,,மற்றது நம்மளிட நாடு,,நம்மட சனங்கள்,,நம்மட சாப்பாடு,,,இதுபோல சுவிஸில வருமே ,,சொல்லும்பார்ப்பம் "


" உள்நாட்டிலேயே உழுதுகொண்டு இருப்பதால் உண்மையாகவே எனக்கு வெளிநாட்டு அனுபவம் இல்லை,,ஆனால் நீங்க சொல்லுறதை நம்புறேன் "


" பொறும் வாறன்,,நாளைக்கு ஒரு பெரிய ஆல்பம் கொண்டுவந்து காட்டுறேன்,,"


" அட, "


" நான் வேலை செய்த குசினி...பிறகு சாப்பாடு கொண்டுபோய் விநியோகிக்கும் ம்யூசிக் காளியாடடம் நடக்கிற இடம்,, டொச் படிப்பிச்ச டீச்சர் . ஆல்ப்ஸ் மலையில பனிச் சறுக்கி விழுந்து எழும்பினது .... என்னோட பொஸ் ,,அவன் ஒரு ஜெர்மன்காரன் ,,மரங்களால ஒரு பாக்கில மணிக்கூடு செய்து வைச்சு இருக்கிற இடம்.... லவுசான் ரிவர்..எல்லாம் காட்டுறேன் ..


" சரி ,,கொண்டுவாங்க ,,வெளிநாட்ட போட்டோ அல்பத்திலே என்றாலும் தொட்டு தடவி வாசனையை முகர்ந்து பார்த்து மனச்சாந்தி அடைவம் "


.......................ஜோன்சன் .வில்சன் பதிந்த அந்த படத்தில் ஆங்கிலப் பாடகர் லயனல் ரிச்சி போல ஜோன்சன் நீண்ட சுருள் முடி அடிக் கழுத்துவரை நீண்டு தொங்க, வெளிநாட்டு சுவாத்தியதில் முகமெல்லாம் செல்லச் சதைகள் மினுக்கு மினுக்கு என்று பளிச்சிட இளமையாக சிரித்துக்கொண்டிருந்தார்.........


" ஹாஹாஹா ......அட.,,தாலியக்கட்டு,,,அப்படி ஒண்டும் அங்கெ இல்லை,,"


" சுவிஸ் பணக்காரநாடு ,கார், வீடு எல்லாம் சும்மா கிடைக்கும் அது இது என்று இங்கே கதைகளை அவிட்டு விடுகிறார்களே,,அது உண்மையா,,அல்லது சும்மா காதில பூ சுத்துறாங்களா ? "


" .அட.,,தாலியக்கட்டு,,,அப்படி ஒண்டும் அங்கெ இல்லை,,"


" அப்ப இங்கே சொல்லுறாங்களே ,,சும்மா பொட்டனி கட்டி அள்ளி அடையலாம் எண்டு "


" ஹாஹாஹா ......அட.,,தாலியக்கட்டு, துண்டைக்காணோம் துணியக்காணோம் என்று வேலை செய்தால் தான் கார்,,வீடு வேண்டலாம் "


" அப்ப வேற என்னதான் ஓசியில இருக்கு ஜோன்சன் "


"ஓசியில மூச்சு விடுற காத்துதான் இருக்கு ,, பாத்ரூமில குளிக்கிற தண்ணிக்கும் மீட்டர் வைச்சு காசு,,குளிச்சு முடிய போற கழிவுதண்ணிக்கும் மீட்டர் ஓடக் காசு,,அரசு "


" வேற என்ன இருக்கு ஜோன்சன் "


" என்ன சின்ன நாடு சுவிஸ்,, நல்ல அமைதியான துப்பரவு சுவிஸ்ஸர்லாண்ட் ..அந்த நாட்டுக் காத்தை சுவாசித்துக்கொண்டிருந்தாலே தொன்னூறு வயசுக்கும் சுவாத்தியமா இருக்கலாம்,,,"
.
.                   ............ஜோன்சனின் நினைவுகளில் ஒரு காலத்தில் முடிவில்லாத ஒளி உயிர்ப் பிடிப்புகள் மீது ஒளிர்ந்து சமதானத்தில் இளைப்பாறிவிடும் வாழ்க்கையை இன்னொருமுறை சமாந்தரமாக பார்க்க முடியும் போலிருக்கு.......................


                                         அடுத்த நாள் அல்ல அதுக்கு அடுத்தநாள்தான் சொன்ன மாதிரியே ஜோன்சன் ஆல்பம் கொண்டுவந்தார். அதில அவர் சொன்னதுபோலவும் அதுக்கு மேலேயும் நிறைய அவரோட சுவிஸ் வாழ்க்கை பற்றிய டாக்குமெண்டரி போல நிறைய கலர் படங்கள் இருந்தது. எல்லாமே மிகச் சிறப்பாக இருப்பது போலிருந்தது அந்த ஆல்பத்தில் .


                                                          சாம்பல் வாழைக்காய் நிறத்தில மாலைநேர பனிப்பொழிவுகளும் ,
பெயர் தெரியாத மலர்களும், அழகான வீதிகளும், வைட்சுவான் தேவதைக்கதைகளில் வருவதுபோல உயரமான சமயலறைச் சிம்மினி வைச்ச சுண்ணாம்புக்கல் வீடுகளும் , வெளிச்சமான கோடைகாலமும் , ஆறுகளும் ஏரிகளும், வெள்ளை மனிதர்களும் ஏகப்பட்ட நிறங்களில் பூலோக சுவர்க்கம் போலவே இருந்தது சுவிஸ்ஸர்லாண்ட்.


                                           ஜோன்சன் பிளாஸ்டிக் போலியெத்திலீன் போன்ற ஒரு உடுப்பால தலையில் இருந்து கால்வரையில் மூடிக் கட்டிக்கொண்டு ஸ்டைன்லெஸ் ஸ்டீல் அண்டா குண்டா பாத்திரங்களில் ச்பக்கத்தி நூடில்ஸ்க்குள்ளே தக்காளி ஸோஸ் போட்டு கிண்டிக்கொண்டு சமைக்கும் படங்களும், பின்னர் அதை ஒரு வானில இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு கொண்டுபோய் விட்பனை செய்யும் படங்களும் இருக்க, அவரோட பொஸ் அந்த ஜெர்மன்காரனைப் படங்களில் காட்டி அவனைப் புகழ்ந்து விபரங்கள் சொல்லிக்கொண்டிருந்தார் ஜோன்சன்.


                                                   
நமக்கெல்லாம் அப்போது வெளிநாடு என்பது கதைப்புத்தகங்களில் வாசிக்கும் போதோ, அல்லது டவுனில் தியடரில் ஓடும் இங்கிலீசு படம் பார்க்கும் போதோ, அல்லது இப்படி வெளிநாடு போட்டு வந்தவர்கள் விமானமேறி வந்து சொல்லும் விவரணங்களில் இருந்தோதான் ஒரு விதமான கண்ணா பின்னா என்று பிக்காஸோவின் தி லேடிஸ் ஒப் அவிக்னன் ஓவியதில நிக்கிற பெண்களில் எதையுமே உருப்படியாக கண்டுபிடுக்க முடியாதது போலத்தான் இருக்கும்.


                                           அப்படி இருந்தாலும் வெள்ளைக்காரர்களை ஓரளவு கிட்டவே நெருங்கி வாசனையே பார்க்கும் அளவுக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்து இருக்கு. எங்க ஊர் நல்லூர் திருவிழா பார்க்க வெள்ளைக்கார டூரிஸ்ட்கள் சுவிங்கம் சப்பிகொண்டு பெரிய பெய்ய ஏசி பஸ்ஸில் வந்து எங்கள் வீட்டுக்கு முன்னால் நிட்பாட்டி போட்டு , பிறகு கோவிலடிக்கு அதிலிருந்து வெறுங்காலில் இறங்கித்தான் போவார்கள். .எங்க அயலட்டை தெரு நாய்கள் தலைக்கு தோயாத அவர்கள் மணத்தில் கவரப்பட்டு ஓடிப்போக அதுகளுக்கு பிஸ்கெட் போட்டு அதுகளோடு இங்கிலீஷில் கதைப்பார்கள்.


                                                        ஜோன்சன், சுவிஸில் அவரோட வேலை வைன் கொடுத்த மணிக்கூடு போல உணர்ச்சி இல்லாத மெஷின் போல என்று சொன்னார். அவர் வேலைசெய்தபோது எடுத்த படங்களை பார்க்கவே கடைந்த மோரைத் தூளியில திருகி நெய் எடுக்கிற மாதிரித்தான் இருந்தது. . அதுதான் ஒரு கட்டத்துக்கு மேலே தாக்குப்பிடிக்க முடியாதவாறு வெறுக்கவைத்தது என்றும், அவரோட காதலி அப்போது இலங்கையில் இருந்ததாலும், ஒரு முடிவோடு சுவிஸ் வாழ்க்கைய மூட்டை கட்டி வைச்சுப்போட்டு அப்போது யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த போதும் ஊருக்கே வந்துவிட்ட்தாகச் சொன்னார்.


..............................தெரிந்தவர்கள் இறந்தது பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் ஏனோ கவலை வருவதில்லை. எனக்கு வயதாகிக்கொண்டிருப்பதாலா ,,,அல்லது எல்லாருக்கும் போல எனக்கும் முடிவுக் காலமென்பது ஏற்கனவே மிகக் கச்சிதமாக வடிமைக்கப்பட்ட ஒன்று என்பதால தெரியவில்லை ................


                                        ஜோன்சன் அதுக்கு பிறகு ஒரு சில மாதங்களே வெதுப்பக்கத்தில் வேலை செய்தார். பின்னர் இடம்மாறிப் போய்விட்டார். ஆனால் அவர் சுவிஸில் செய்த அவரோட வேலை வைன் கொடுத்த மணிக்கூடு போல உணர்ச்சி இல்லாத மெஷின் போல என்று சொன்னார் அல்லவா அதை இன்னொருமுறை கேட்க்கும் சந்தர்ப்பம் வன்னியிலே கிடைத்தது. அதுவும் அப்போது அவர் ஸ்டோர்கீப்பர் ஆக அவர் வன்னியில் இடம்பெயர்ந்து வேலைசெய்தபோது,,
.
......................................ஒருநாள் அவரைச் சந்திக்கப் போனபோது, ஒரு மணிக்கூடுதான் அதுக்கு காரணமாய் இருந்தது..............


                                                   
ஜோன்சன் வெதுப்பகத்தை விட்டு போன கையோடு வலிகாமம் வடக்கில் இலங்கை ராணுவம் ரிவரிச சூரியகதிர் ராணுவ நடவடிக்கை தொடங்கியது. ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுற்றி ஐந்தில் அது டிசம்பர் பருவ மழையோடு , அகோர செல் மழையும் சேர்ந்து குடாநாட்டைப் பிடித்த போது, குடாநாடு முழுவதும் இயல்பாக வாழ்ந்த மக்கள் இஸ்ரேலியர்கள் ஜோர்டான் நதியைக் கடந்து எகிப்துக்குப் போன எஸ்சோடாஸ் போன்று நாவற்குழி பாலம் தாண்டி தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய சோகமான வரலாற்றுச் சம்பவம் நடந்தது ,


                                                                                      பின்னர் கொஞ்சநாள் கொடிகாமதில குந்தி இருந்து இந்தா விடமாடாங்கள் அந்தா விடமாடாங்கள் என்று நம்பி ஏமாற ஒருநாள் காலை புகையிலைத் தோட்டப் பனிப்புகாருக்கு ஊடாக எதிர்ப்பு சமரோ,,முறியடிப்பு சமரோ எதுவும் இல்லாமல் இலங்கை ராணுவம் வாரத்வத்தை சரசாலை முனையால் உடைச்சுக்கொண்டு மீசாலைவரை பிடிக்க, பலர் திரும்பி ராணுவம் பிடித்த இடங்களுக்கு சென்றார்கள். அப்படிப் போவதில் சிக்கல்கள் உள்ளவர்கள் பலர் வள்ளத்தில் ஏறி கிளாலி கடலால் வன்னிக்கு போகவேண்டிய நிலைமை வந்திட்டுது.


                                                     எம்பிசீஸ் தென்மராட்சியை ராணுவம் பிடிக்கலாம் என்று நினைத்தோ தெரியவில்லை , கொஞ்ச ஊழியர்களை வன்னிக்கு அனுப்பி , அங்கெ இடம்பெயர்ந்துள்ள குடாநாட்டு மக்களுக்கு அரசாங்க நிவாரணம் வழங்கும் வேலைகளைத் தொடங்க அதில வேலை செய்த பலரை வன்னிக்கு போய் வேலைசெய்யும் விருப்பம் இருந்தால் போகும்படி அறிவுறுத்தினார்கள்.


                                                  ஆர்வக்கோளாறில் வன்னிப்பெருநிலப் பரப்பில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றதிலும், தனியாக ராணுவம் விடுவித்த ஊருக்கு திரும்பி போவதில் ஆபத்து இருந்ததாலும் , நான் வன்னிக்கு போனேன். ஜோன்சன் ஆரம்பத்திலேயே வன்னிக்கு போய்விட்டார். அப்படிதான் பின்னர் அவரைப் பரவிப்பாஞ்சான் கிளிநொச்சியில் சந்தித்த போது சொன்னபோது அறியமுடிந்தது. பரவிப்பாஞ்சான் ஸ்டோர் ஒபிஸில் அவர் வேலைசெய்தார் என்று நினைக்கிறன். சரியாக சொல்லமுடியவில்லை.


                                                                 அதுவும் கொஞ்சநாள்தான், இலங்கை ராணுவம் கிளிநொச்சியையும், தாண்டிக்குளத்தையும் நெடுஞ்சாலை ஊடாக இணைக்க A 9 பாதையில் வன்னிவிக்கிரம சண்டை தொடக்கிபரந்தன் கெமிக்கல் பக்ட்ரீயில் நின்ற ராணுவம் முன்னேறி கிளிநொச்சி நகரையே பிடிக்க, மீண்டும் ஒரு இடப்பெயர்வு வன்னிக்கு உள்ளேயே நடந்தது. எங்கள் இடம்பெயர்ந்த எம்பிசியெஸ் தலைமை அலுவலகம்
ஸ்கந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது


                                                             அங்கே இயங்கிய கிளைகளுக்கு விநியோகிக்கும் மையமாக,கரும்புத்தோட்டமும் ,வாய்க்கால்ப் பிள்ளையார் கோவிலும், நஞ்சுண்டகாட்டு வயல்களும் , ஆணைமுறிப்புக் காடும், அக்கராயன் குளமும், கோணல்த் தென்னை மரங்களும் நிறைந்த அழகான இரண்டாம் வாய்க்கால் ஸ்கந்தபுரத்தில் ஜோன்சன் ஸ்டோர்கீப்பாராக வேலை செய்தார். அவருக்கு கிளார்க் ஆக வில்சன் வேலை செய்துகொண்டிருந்தார்.


            .........................ஜோன்சன் நல்ல இதயமுள்ள அன்பான மனிதர் .இருந்துமென்ன எல்லாமே மிகச் சிறப்பாக இயங்குவது போலிருக்கும் ஒரு வாழ்வோட்டம் ஒரு சின்ன அதிர்வோடு அடங்கிவிடுகிறது . அதுபோலத்தான் வளைவுகள் இல்லாத பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் நதியும்தான் ஒரு வெள்ளம் வரும்போது சுழித்து விடுகிறதே ...............


                                                                            
ஒருநாள் அவரைச் சந்திக்கப் போனபோது, ஒரு உறவினர் லண்டனில் இருந்து வன்னிக்கு வந்தபோது எனக்குக் கொண்டுவந்து தந்த ஒரு மணிக்கூடுதான் அதுக்கு காரணமாய் இருந்தது. நான் கட்டியிருந்த அந்த வெளிநாட்டு மணிகூட்டை ஜோன்சன் கேட்டார். எனக்கு அந்த மணிக்கூடு பற்றிய பெறுமதியான விசயங்கள் ஒன்றுமே தெரியாது. ஜோன்சன் அதை வேண்டிப்பார்த்திட்டு நிறைய விசியம் சொன்னார். அதனால அவருக்கே அந்த மணிகூட்டை அவரிடமே கொடுத்திட்டேன்........


                                                                          அந்தக் கடிகாரம் ஒரு காந்தக் கடிகாரம் . அதில திசை எல்லாம் கொம்பாஸ் போல பார்க்கலாம், அது மூடி போட்டு மூடி இருந்தது. மூடியைத் திறந்துதான் டயல் பார்க்க வேண்டும். மூடிக்கு மேலே வெளியே கிரேசி கோர்ஸ் செவ்விந்தியத் தலைவன் குதிரையில் இருக்கும் படம் வெட்டி இருந்தது. அதன் இணைப்பு வார்களில் ஸ்பிரிங்ஸ் இணைப்புகள் இணைக்கப்பட்டு இருந்தன. ஜோன்சன் தான் அதை பார்த்திட்டு இந்த விபரங்களோடு இது பெரிய பெரிய ஹார்ஸ் பவர் உள்ள ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள் ஓடித்திரியும் ஹெல் ஏஞ்செல்ஸ் என்ற ஒரு கும்பல் அணிவது என்று சொன்னார்.


                                                                                 இதுவரைக்கும் அறியப்படாத வன்னிப் பெருநிலப்பரப்பில் சில வருடங்கள் ஜோன்சனுடன் ஒரு நடுக்காட்டுப் பகுதியில் ஒன்றாக தங்கி வசிக்கவேண்டிய சம்பவம்தான் அவரைப்பற்றி இன்னும் நிறைய விசயங்கள் அறியக் காரணமாக இருந்தது .


.....அந்த வாழ்க்கை துன்பங்களோடே இன்பமாகக் கடந்துபோன கனவு...அந்த நினைவுகள் .தொடர்ந்து வரும் .....
.
This  pics was taken by  dear friend  Thevaraja Wison,  thanks wilson.   

2 comments :

  1. Pleasure to read your writing arasan, neat narrative

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா அந்த லொள்ளு தனமான கிண்டல், நக்கல் சிரிக்க வைக்கிறது ,வெதுப்பகம் என்ற சொல்லை ஞாபகம் படுத்தியத்துக்கு நன்றி.அருமை

      Delete