Sunday 25 June 2017

காதல்............!


கருங்கல்வெட்டில்

பனை  ஓலைச் சுவடிகளில்  
எழுத்தாணி மைபூசிக் காகிதத்தில்,
தேடி  வடித்துவைத்த 

ஆழமுள்ள
அழியாக்  காவியங்களை விடவும்,
நிமிடங்களில் அழிந்தாலும்
வெண்கடல்க்கரை மணலில்  

விரல்மொண்டு  நீ  கிறுக்கிய
நிஜமான
இரண்டு கோணல்வரி

என் 
இதயக் கணனியைத் 
திறக்க வைத்த 
கடவுச்சொல்,
என்னைப்பொருத்தவரை

அதுவே
எப்போதுமேயெனக்கு

விலைமதிப்பற்ற 
காலமில்லாக்  கவிதை!
..........................................................
ஒரு புள்ளியில்
உன் கடைசி
வார்த்தையோட
இதுவரை எல்லாருமே 
எழுதிக் கவிழ்த 
காதல் மொழி
மவுனமானது,
கடைசிப் பார்வையோட
கண் இருட்டாக
கடைசி இஸ்பரிசதோட
உணர்ச்சி
இழந்துபோனது,
வாசல்ப் படி இல்லாத
வீட்டில்
வசிக்கும் படி
வட்டம் கீறிப்போட்டு
வாழ்கைக்கு
வரவேற்புரை குடுக்கின்றாய்..
இதுக்குப் பிறகும்
நான் விட்ட இடத்திலேயே
இன்னும்
நீயும் தேடிக்கொண்டிருப்பாய்
என்பதை
இன்னும்
நம்பிக்கொண்டிருக்க
இன்னும்
ஒரு வாழ்க்கை
முழுவதுமே
தேவை என்பதை
நிரூபித்து விட்டாயேடி!!!

............................................................................
உன்
நினைவுகள் 
கண்ட கனவுக்கும், 
என் 
கனவுகள் கண்ட 
நினைவுக்கும்,

டை
யி
ல்
ஒருநாள்
திட்டமிட்டபடியே
சண்டை வந்தது!
மவுனம் ஆர்ப்பரித்து
பொறுப்பில்லாமல்
கட்டவிழ்ந்து
கலவரப்பட்டு ,
கடைசியில்
உன் கனவுகள்
வென்றபோது
நீ அழுதாய்,
என் நினைவுகள்
தோற்றபோது
நான் சிரித்தேன்,
எப்போதும் போல
பொறுப்போடு
மனசாட்சி
மறுபடியும் மவுனமானது ..

.....................................................................
உன்னோடு
நானாகி, 
என்னோடு 
நீயாகி, 
ஒற்றுமையில், 
கொடுத்து,
வாங்கத்,
தெரியாமல்
சில்லறைத்தனமாய்
சிதைக்கப்பட்ட
சின்ன சின்ன
சந்தோஷங்கள்,
வேற்றுமையின்,
பிரிவின் வதையில்
ஒவ்வொருமுறையும்
கனமான
ஏதோவொன்றை
கற்றுகொடுக்கிறது!

................................................................................
வரட்டுக்
கவுரவத்துக்கு
வக்காளத்து வாங்கி,
நினைவுகளை
நிப்பாட்டி வைக்க 
ஒரு கிழமை (அ)கால அவகாசம்!
வேறு வழியின்றி,
கனவுகளைக்
கழட்டி வைத்து
உனக்கும் - எனக்கும்
இடையே
அநாதையான அந்த
நினைவுகளே
சொல்லுதடி ,
"காலமே இல்லாதா
ஒரு காலத்திலும்
தளும்பாமல்
தாக்குப் பிடிக்குமாம்
உண்மைக் காதல் "!

...........................................................................
காணாமல்போன 
என் பெயரைக் 
கண்டுபிடிக்க முயற்சிக்க 
அதுவுன் இதயவாசலில் 
தலைகீழா 
தொங்கிகொண்டிருந்தது !
கொஞ்சம் உற்றுப்பார்க்க
அது
ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது!
வாசலுக்கு
அந்தப்பக்கம்
ஒய்யாரமானின்று
விதி வில்லங்கமாக சிரிக்க,
இந்தப்பக்கம்
ஒதுங்கியிருந்து
அறிவு அலங்கோலமாக அழ,
நடுவில
அசந்தபாட்டுக்கு
அனுபவம்
அமுங்கிப்போய் இருக்க,
கனவழிந்து விழித்தெழுந்து
கடைசியில்
"காதலில்விழுந்து காணாமல்போனவர் "
பட்டியலில்
என்பெயரையும் கண்டுபிடித்தேன்....!
.........................................................................................

வார்த்தையில்லாத 
ஒரு 
மொழியில் பேச,
குரல் இல்லாமலே 
சங்கீதம் பாட,
சம்பவங்களே இல்லாமல்
ஒரு
கதை எழுத ,
உணர்ச்சி இல்லாமலே
ஒரு
கவிதை இயற்ற ,
தூக்கம் வராமலே
கனவு காண ,
சிறகில்லாமலே
ஒரு
பறவையால் பறக்க ,
இதயம் இல்லாமலே
நினைக்க ,
இதெல்லாம்
முடியும் என்றால்.....
உனக்கும்
எனக்கும்
பிரியமில்லாத
அந்தப் பிரிவும் சாத்தியமே!

....................................................................
பார்த்தவரை
படம் வரைந்து 
நினைத்திருந்தேன்
முகம் தான் 
மறக்கமுடியவில்லை என்று ,
கேட்ட வரை
இன்று முதல்
தெரிகிறது
குரலும் கூட
கேட்காமல்
இருக்கமுடியவில்லை என்று ,
நேற்று வரையாகிலும்
நீ  நடந்த பாதச்சுவடுகள்
இன்றைக்கும்
கடல் மணலில்
காத்திருக்க
வேண்டுமாமென்று
அலைக்கும் கரைக்கும் சண்டை
இதையெல்லாம்
எழுதிக்கொண்டு
இப்படியே போனால்
மறப்பதுக்கு
இறப்புக் கூட
உதவாது போல  இருக்குதடி!

................................................................................
பகலில் 
கறுப்பு தார் ரோடில
சிவப்பு நிற அடையாளத்தைக்
காணும் போதெல்லாம்
நினைவு வருகுது,
தடயம் இல்லாமல்
ஒரு இரவில்
காணமல்போன
சின்னப் பூனைக்குட்டியும், 

நிறைவான கனவுகளை 
நிராகரித்துவிட்டுப் போன 
உன்  
பயிற்ரம்பூவிலும்  மென்மையான
வளர்பிறை நெற்றியிலிருக்கும்   
சின்னதான 
சிவப்புநிற சாந்துப்பொட்டும் !
...............................................................................
கடற்கரை மணலில்
என்
பெயரெழுதிக் 
காதல் சொன்னவளே,
பயமா இருக்குதடி
எந்த நிமிடத்திலும்
ஒரு 

அலை வரலாம்!
.............................................................................
உன்னை  நானோ,
என்னை நீயோ இப்பிறப்பில்
தற்செயலாகவும்
சந்திக்கப் போவதில்லை, 
அப்படி இருக்க ,
மொழியிருந்தும்
வசனம் பேசாமல்,
விழியிருந்தும்
திரும்பிப் பார்க்காமல் ,
மனமிருந்தும் சேர்த்து வைக்க
இடமில்லாமல்,
வெட்கத்தை
விட்டுச் சொன்னால்
நினைவிருந்தும்
கனவில்லாமல்,
அப்புறம்
எப்படி,
முழங்கினால்
மழை பெய்தும் ,
நெருப்பிருந்தால்
புகை கிளம்பியுமாக வேண்டுமென்று
அடித்துச் சொல்லுகிறாய் ?

....................................................................................
என்னை நினைத்து
நீ என்ன எழுதினாலும் 
அதில் எப்பவுமே 
ஒரு 
தரம் இருக்கு என்கின்றாய்
எத்தனை தரம் தூக்கம் இழந்து,
எத்தனை தரம் உணவை மறந்து,
எத்தனை தரம் மதி கலங்கி,
எத்தனை தரம் விழி பிதுங்கி,
எத்தனை தரம் சாகத் துணிந்து,
தன்னளவில் தரம் கெட்டு
அவையனதையும்
அவன் எழுதியிருப்பான்
என்பதை அறியாமல்!

............................................................................
சந்திக்காமலே
இருக்கும் 
வார்த்தைகளுடன் 
மவுனம் 
சண்டை போட்டு,
சொல்லாமல் சொல்லி,
சிந்திக்காமலே
வருவது
கவிதை
ஒன்றுதான் எனக்
கடைசி வரை
நினைத்திருந்தேன்,
தற்செயலாக
கடற்கரையில்
உன்னையும்
உன்
காதலையும்
சந்திக்கும் வரை!
..............................................................................

முகமற்ற மனிதருக்கு
எழுதிய
முகவரியில்லாக் 
கடிதம் போல,
காணமல்போய்
திரும்பிவந்து,
தொலைபேசி
சற்று தாமதித்து
அலைபபேசியதுக்காக
"இனிக் கதைக்கவேமாட்டேன் "
என்கின்றாய்,
ஒரு நிமிடம் உன்னை
அசந்து மறந்தாலும்
சொந்த மனசாட்ச்சியிடமே

மன்னிப்புக் கேட்பவனிடம்!.
.....................................................................
இதுவரை எழுதப்படாத
ஒரு கவிதைபோல
இதுவும் 
ஒரு 
அறியப்படாமலே அநாதையான 
கவிதையா தெரியாது,
ஒருசமயம்
கவிதையாக இருந்தால்,
காதோடு வார்த்தைகளும்
மனதோடு நினைவுகளும்
விழியோடு கனவுகளும்
அழிவதற்கு முன்
இதை எழுதவைத்த
அந்த 

யாரோ ஒருவரோட
கவிதையாகவும்
இருக்கலாம் .......!

.....................................................................
போகிற போக்கில
சிரித்துக்கொண்டே
"முடிவெடுக்க 
இன்னும் 
மூன்று இதயம் வேண்டும்" என்கிறாய்
இருந்த 
ஒரு 
இதயத்தையே
தொலைத்துவிட்டு
அது 

தொலைந்த இடத்தைத்
தேடுபவனிடம்!

............................................................................
கறுப்பு வெள்ளையில
கண்ணா பின்னாவெண்டு
வந்த
கனவுகளே,
காதல் வந்தபின் 
சுய கட்டுப்பாட்டில்,(!)
கவுரமா,
கண்ணியமா,
கலர் கலரா வேற
வருகுதேடி!.

........................................................................
சிறுகச் சிறுக 
சிக்கனமாய் 
சேமித்து 
வைராக்கியமாய் 
வேண்டிய 
வைரம் பதித்த
மோதிரத்தை
வாய் நிறையப்
புன்னகைத்து...
நளினமாக
நெளிந்து
வானவில்லாய்
வளைந்து
பனிபோலக்
குழைந்து
உலக மகா
அதிசயமாக்கி
பெருமையாகக் காட்டி...
"அழகா இருக்கு ,
இல்லையா ?"
என்கிறாய்
விலைமதிப்பற்ற
உன் விரல்களை
மட்டும்
உயிருக்கு உயிராய்
அளவுக்கு அதிகமாக
நேசிப்பவனிடம்!

............................................................................
சொல்வதையெல்லாம்
கேட்டுக்கொண்டு
காது வெளியே இருக்கிறது,
நடப்பதெல்லாம்
பார்த்துக்கொண்டு
கண்கள் அது பாட்டுக்கு ,
பதில் சொல்ல மட்டும் திறக்க
வாய் இருந்தும்,
திசை மாறி வழி மாறி
அலை பாயும் மனம் எங்கும் ,
கேட்பதற்கும் ,
சொல்வதுக்கும்
யாருமில்லாமல்
காதல் மட்டும் இன்னும்
இதயத்தின்
உள்ளே இருக்கிறது!.
................................................................
ஆரம்பதில்
ஆர்வமில்லாமல் பார்க்க 
சுமாராகத் தெரிந்தாள்!
அப்புறம்
போனாப் போகுதெண்டு பார்க்க 
அழகா தெரிந்தாள்!
பின்னர்
கொஞ்சம் வடிவாப் பார்க்க
வண்ணமாகத் தெரிந்தாள்!
ஒரு கட்டத்தில்
கவனித்துப் பார்க்க
காதலாய்த் தெரிந்தாள் !
கடைசியில்
காதலே வந்த பின்னர்
கண்ணை மூடிக்கொண்டு
நினைக்கவே
பேரழகியா தெரிகிறாளே!!!

........................................................................................
யாருமே எழுதாத  
ஒரு கவிதையெழுத, 
கண்ணா பின்னாவென்று கிறுக்கி,
வார்த்தைகளை வளைத்து ,
மொழிக்கு வலி கொடுத்து,
உவமைகளை உதறவைத்து,
படிமங்களைப் பதறவைத்து ,
சிலேடைகளை சிரிக்கவைத்து,
இலக்கணத்தை இளிக்கவைத்து,
தோல்வியிடமே தோற்றபின்னும் ,
ஒத்துக்கொள்ளவே
மனம் வருகுதில்லையடி,
இந்த உலகத்தில
எழுதவே முடியாத
ஒரு கவிதையே
நீ 

ஒருத்தி மட்டும்தான் என்று!.
...........................................................................
கடவுளே!!!!!!!
அதிகபட்சம் 
உன் நடைபாதைகளில்   மிதிபடும் 
இந்தச் செருப்பாக 
என்னைப்
படைத்திருக்கலாம்,
அப்படியாவது
உன்
தடயங்களைச் சேகரிக்கும் 

கால்களைச் சந்திக்கவொரு
சந்தர்பம்
கிடைத்திருக்குமே!

...............................................................................
வெட்கம் இல்லாமல்
இளகி வழிந்து
கூனிக் குறுகி
குனிஞ்சு வளைஞ்சு,
விழுந்து கும்பிட்டு 
விட்டுக்கொடுத்து,
ஒவ்வொறு முறை
தோற்றுப் போயும் ,
அவளேதான் வேண்டுமென்று அடம் பிடிக்குறாயே,
வெட்கமாக இல்லையா ?
இப்படிக்கு
என்றென்றும் ரோசமுள்ள
- இதயம் -

........................................................
பனை 
வடலிப் பாதை,
தென்னை
மரத் தோப்பு ,
பச்சை வயல் வரம்பு ,
தரவைக் கடல் வெளி ,
தாமரைக் குளத்தடி ,
ஆலமர அரசமரத்தடி ,
பூவரசமரக் குச்சு ஒழுங்கை,
கோவில் திரு விழா,
திருவெம்பா பயனை ,
சனிக்கிழமை ரியூடரி ,
இல்ல விளையாட்டுப் போட்டி ,
இதில்
ஏதோ ஒன்றில்
சொல்லத் துணிவில்லாமல் ,
மவுனமாகிப்போன
காதல்,
கனவிலையும்,
நினைவிலையும் மட்டும்
இன்னுமின்னும்  

காதலிக்கப்படுகிறது.......



                                             .............. 2013 இல் முகநூலில் ..............  



1 comment :