Thursday 27 April 2017

வஸந்தியக்கா !

 எங்களின் ஊர்ல எப்பவும் சொல்லுவார்கள் மனநிலை சரியில்லாத ஒரு ஆணுக்கு கலியாண வயது வரும்போது ஒரு பெடிச்சியைப் பிடிச்சு சடங்கு செய்து வைத்தால், ரெண்டு பிள்ளை பெற்றவுடன் ஆசா பாசம் காட்டி  அவனை எப்படியும் அவள் நோர்மல் நிலைமைக்கு கொண்டு வந்து  சரியாக்கி விடுவாள் என்றும். அதைவிட என்னோட பாட்டி எப்பவும் சொல்லுவா,  கலியாணம் செய்து வைப்பது  நூறு வருடம் ஏழைகளுக்கு வயிறாற  அன்னதானம் போட்ட கோபுரங்கள் தரிசித்த  கோடி புண்ணியம் எண்டும் சொல்லுவா. 

                                                இது ரெண்டையும்  நம்பித்தான் அத்தானுக்கு வஸந்தியக்காவுக்கும் கலியாணம் செய்து வைத்தேன் .


                                          
நல்ல மனநிலையில் திடகாத்திட்டமாய்  உள்ள  ஆண்களே  கலியாணம் கட்டினவுடனே  பல இடங்களில் மனப்பிறழ்வாகி  இருக்கிறார்கள். அல்லது வாற  குடும்பக் குத்துவிளக்குகள் பல ஆண்களை சிக்கவைத்தே சின்னாபின்னம் ஆக்கியும் இருக்கிறார்கள். 

                                                       இதுக்குள்ள     மனநிலை சரியில்லாத ஒரு ஆணுக்கு ..... இந்தமாதிரியான கோணங்கிகளின் கோட்பாடு  நடைமுறைக்கு உதவாது என்று தெரிந்தாலும் , வாலறுந்த பட்டங்களும் பறக்கலாம்  என்பது தானே வாழ்வின் நம்பிக்கை,  என்ன செய்வது பரீட்சித்துப் பார்க்கலாம் என்றுதான் எப்போதும்  நினைப்பது,
                                  
                                               அது நாலாம் நாளே பிசகி சொதப்பும் என்று நான் நினைக்கவேயில்லை. 

அத்தான் நோர்வேயில் இருந்தார். நானும் அப்போது நோர்வேயில் இருந்தேன். வஸந்தியக்க என்னோட நண்பன் முசக்குதிக்காட்டு நேரடி வழிமறிப்பு  மோதலில்........ என்ற இயக்கத்தில் இருந்த போது வலதுகாலை இழந்த கொழுவிக் குமாரின் மூத்த சகோதரி. 

                                               கொழுவிக் குமார் ஜெய்ப்பூர் செயட்கை பிளாஸ்டிக் கால் போட்டுக்கொண்டு, விடுதலைப் போராட்டத்தைத் தூஷணத்தில் திட்டியபடி இப்பவும் ஊர்ல இருக்கிறான்,


                                                             
அன்றாடம்  சில்லறைகளையோடு அல்லாடும்  சைக்கிள் திருத்தும் கடைவைச்சுக்கொண்டிருக்கிறான். தனியாத்தான் இருக்கிறான். அவன் பருத்தியடைப்புமுனையில்  வள்ளம் ஏறி இந்தியாவுக்கு ட்ரைனிங் எடுக்கப் போகும் வரையில் உயிருக்கு உயிராகக் காதலித்த அவன் காதலி அவன் கடைசியில் தோற்றுப்போய் வந்த போது வேறு ஒருவரைக்  கலியாணம் கட்டி ஹோலன்டுக்குப் போய் போய்விட்டாள் . 

                                                   எல்லாக் கவலைகளும் விழுங்கியபடி இப்பவும் தனியாத்தான் இருக்கிறான் கொழுவிக் குமார் . இந்தக் கதை கொழுவிக் குமார் பற்றியது இல்லை. ஆனால் அவன் நிலைமைக்கு இரங்கி அவனின் அக்கா , வஸந்தியாவுக்கு கலியாணம் செய்துவைக்கப் போனதோடு முள்ளில் பாதம் வைத்து  நடந்து போனவைகள்


 வஸந்தியக்க தொண்டர் ஆசிரியர் என்ற பஸலிட்டி டீச்சர் என்ற வேலையில்  ஆரம்பப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மாதாந்த வசதிப் பணத்தில் மாதம் மாதம் தொங்கிக்கொண்டிருந்தா  . சுமாரான நிறமுடைய அழகான பெண் . கே ஆர் விஜயா போல அழகா சிரிப்பா. மேட்படிப்பு படிக்க வசதியில்லாமேல் போன வறுமை  ஏக்கம் கண்களில் எப்பவுமே பாரமாக இருக்கும்.  

                                                              எப்பவுமே எதையும் அலடிக்கொலாமல் தன் தன்னம்பிக்கையைத் பின் தொடர்ந்து கொண்டு  மெல்ல நடப்பா. உபசரிப்பில்  கரிசனையை அழியாத செல்வமாக்கி  மிகவும் நெகிழ்ந்து போக வைக்கும்  அன்பானவா. 

                                                    இதெல்லாம் அந்த நேரமே. நானும் குமாரும் நண்பர்களாக இருந்த அந்த நாட்களில் தெரிந்து கொண்டவைகள்.
                     
                                                                   
முப்பத்தியைந்து வயதுவரை சீதனம் கொடுத்துக் கலியாணம் செய்துவைக்க வசதியில்லாத அல்லல் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த கும்பத்தில் வஸந்தியாக்க இருந்ததால்  நோர்வே வந்தால் பொருளாதார ரீதியாகவும், அதைவிட அவாவுக்கு என்றென்றும் கங்கை வழியும் கண்களில் அன்பு நிறைந்த  பொன் வண்ணங்கள் வீசும்  ஒரு குடும்ப வாழ்க்கை அமைக்கலாம் என்பதுதான் என்னோட பிளான் ஆக அப்போது இருந்தது. 

                                                   ரெண்டுமே கடைசியில் எங்கெங்கோ சென்ற எண்ணங்கள்  நினைத்தபடி  ஒரு புள்ளியில் சேரவேயில்லை . 

                                            நினைப்பதெல்லாம் நிறைவேறாத ஒரு வாழ்க்கையின் புதிர் தானே  நேரான பாதைகளை விலத்தி இன்றைக்கும் விதியை வளைந்த கோட்டில் எழுதிக்கொண்டு செல்கிறது  


                                                                
நோர்வேயில் சமூக உதவியில் இருப்பவர்கள் ஸ்பான்சர் செய்வது கஷ்டம் . அத்தான் சமூக  நலஉதவித் திட்டத்தில் இருந்தபடியால்  என்னோட ஷகி சிசிலியாவை  கேட்டு அவளையும் இதுக்குள்ள இழுத்து  வைச்சு  குத்தி முறிச்சு குத்துக்கரனம் அடிச்சு ஓட்டுமாத்து செய்தும் அத்தானுக்கு ஸ்பான்சர் செய்ய முடியவில்லை. 

                                                 பிறகு   ஒரு சைக்காட்ரிஸ் டாக்டரை அவருக்கென்று ஒரு வாழ்க்கைத்துணை  வேண்டும்  என்று  சிபாரிசு செய்துதான் அந்த ஸ்பொன்சரே நடந்தது !

                                                             
                                                     
இந்தக் கதையின் முடிவில்  வரவேண்டிய முடிவுவரிகளை  நோர்வேயில் வசித்த அத்தானிடமிருந்தும் , இலங்கைக்குத் திரும்பிப் போன வஸந்தியக்காவிடமும் இருந்து   நானே ஒரு ஒருகிழமை இடைவெளியில்  கேட்கவேண்டிய விதி என் தலையில் எழுதிவைக்கப்பட்டிருக்கு என்றுதான் நினைக்கிறேன் . 

                                                        ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் நானே திருமணம் பேசி முடித்து வஸந்தியக்காவை  நோர்வேக்கு அத்தான் ஸ்பொன்சர் செய்து எடுக்கும் வரையில் முண்டுகொடுத்து வேலை செய்த ஆள் . கடைசியில்  அத்தான் இப்படித்தான் சொன்னார்                      
                             
                                 " அப்பேக்க அவா  வந்த நாலாம்நாளே என்னை நிமிர்த்தி எடுக்க , என்னை முழுசா என்னமோ சேத்துக்குள்ள புதைஞ்சுபோன ஆளப்போல நினைச்சு  திருத்த வெளிக்கிட்டுட்டா , எனக்கு அது ஐஸே பிடிக்கவில்லை,  அதால திரும்பிப்போகச் சொல்லிபோட்டன். அதால உடன ரிட்டர்ன் டிக்கெட் போட்டுக் கொடுத்தேன் , அப்பேக்க இதைவிட  நான் வேற  என்ன முடிவு எடுக்கிறது நீரே சொல்லும் பார்ப்பம் ஐசே "



                                                 இதுதான் அத்தான் எனக்குச் சொன்ன விளக்கம் , 

ஆனால் வஸந்தியக்க சொன்ன பதில் வேற, பதில் சின்னப் பதில் தான். ஆனால் வாழ்க்கை முழுவத்துக்குமான வலிகளை ஒன்றுசேர்த்து வைத்துள்ள பதில் , வஸந்தியக்கா சொன்ன பதில் ,இதுதான்

                                     " அந்தாள் திருத்த முடியாத   கேஸ்   "



ஏன் இப்படி நடந்தது என்றால் மேட்கொண்டு கதையை வாசியுங்க.



திண்ணையில  விழுந்தவளுக்கு திட்டுக்கெண்டு வந்திச்சாம் கலியாணம்  என்று ஒரு பழங்கதை இருக்கு. அது பழையகால மனிதர்கள் பழையகால மனிதர்களுக்கு சொன்னது என்பது போல இருந்தாலும் அதில வாற அபத்த சம்பவங்கள் போலவே நிஜ வாழ்க்கையிலையும் பல சம்பவங்கள் நிகழும். 

                                                  அதில் அச்சுறுத்தல் போலவே பதுங்கி இருக்கும் சின்னத் திருப்பங்கள் ஒரு முழுமையான  மனிதனின்  உணர்வோடு விளையாடி கடைநிலைக்கும்  இறக்கிவிடும் , கொஞ்சம் கஷ்டமான நிலைமைதான் அப்படி எதிர்கொள்ள நிகழும்போது


நோர்வேயில் மனநிலைகளை இலகுவாகப் பிரட்டிப் போடும் சமநிலை அற்ற வாழ்க்கைமுறை  நிறையவே இருக்கு. வாழ்க்கைத் தரத்தை நிலத்தில இருந்து பத்தடி உயர்த்தி வைத்திருக்கும் பணக்காரா  நாடு வேறையா அதனால மனநிலை குழம்பியவர்களை கவனமாகப் பராமரிக்கும் சமூக உதவித் திட்டங்கள் சிறப்பாக செய்து வைத்திருக்க்கிறார்கள். 

                                                  இந்த   தலையைப் பிடிக்காமல் வாலை வைச்சு உருவும் முரண்பாட்டின் பல அபத்தமான கலாச்சாரக் குழப்பம் அதன் முகத்தில் இருந்தாலும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள நோர்வே ஒரு அழகான  நாடுதான்  .



இந்தக் கதைக்கு நோர்வேயை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை,  நாலு காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் அது நாலுபக்கமும்  காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும் என்ற  காதலில்  எதிர்ப்பார்ப்புக்கள்  பொய்த்துப் போகும்போது அந்த வீழ்ச்சியத் தாங்கும்  சக்தி எல்லாருக்கும்  இருப்பதில்லை. 

                                                      சிலர் அடியோடு மாறி விடுவார்கள். அந்த  அன்பின் அடியில்  இருந்து எழும்பிவராமல் , அல்லது  எழும்பிவர  விருப்பம்  இல்லாமல் கிடைத்த  ஒரேயொரு  வாழ்கையைத்  தாங்களாவே திசை திருப்பிவிடுவார்கள். அதுக்கு  முக்கியகாரணம் காதல்தான் .


அத்தான்  இப்ப  எப்படி இருப்பார் ?,  முன்னர் இருந்ததை விடவும்  முன்னேற்றமாய்  இருப்பாரா ?, அல்லது அதைவிடவும் வாழ்க்கையைச்  சிக்கலாக்கி  சின்னாபின்னமாகிய மனநிலையில் இருப்பாரா ?, அல்லது அதிஸ்டமாக மீண்டு  பழைய மிடுக்கோடு உயிர்தெழுந்துவிட்டாரா ?,  அல்லது உயிரோடுதான் இருப்பாரா ?  என்று எனக்குத் தெரியவில்லை. 

                                     கடைசி வரியை எழுதும்போது சாவு பற்றிய பயன்கள் இல்லாத போதும் மனது கனக்கத்தான்  செய்கிறது !!!!!

                                                     
வாழ்க்கைப்பாதை ஒரு வட்டம்போல தொடங்கிய  இடத்தில்  அல்லது ஏதோவொரு சந்தர்ப்பத்தில்  சந்தித்த இடத்தை இன்னொருமுறை தொட்டுச்செல்லும் சாத்தியங்கள் எப்போதும் நாங்கள்  நினைத்தபடி தட்செயலாகவும்  நடப்பதில்லை. அப்படி நடந்தால் அதுக்குப் பெயர் வாழ்கையும் இல்லை. 

                                                   அப்படித்தான் ஊரில  புண்ணியக்குஞ்சி எப்பவும்  கோடாப் போட்ட வழக்கம்பரை  சுருட்டுப் பத்திக்கொண்டு சொல்லுவார். அப்படியான ஒரு திசையில்தான் அத்தானின் வாழ்க்கை திசை மாறியது

                                                              
எல்லாரும் அவரை அத்தான்  என்று சொல்வதால்தான் நானும் அத்தான் என்று சொல்வது. மற்றப்படி அவர் என் கூடப்பிறந்த அக்காவின் கணவரோ,  ஒன்றுவிட்ட அக்காவின் கணவரோ, அல்லது  தூரத்து  உறவுமுறையான அக்காவின் கணவரோ   இல்லை. 

                                                     எங்கள் ஊரைச் சேர்ந்தவரும் இல்லை. ஏதோவொரு உரைச் சேர்ந்த   எல்லாருக்கும் பொதுவான  அத்தான். அத்தான் அந்த உறவுமுறை சொல்லும்  பெயர் , அந்த அன்பின்  அழைப்பு   எவ்வளவு  அன்பான நெருக்கத்தின்  பெயர் சொல்லும் வார்த்தை. அத்தானும் அப்பிடித்தான் அன்பானவர்.



நோர்வேயில் அவர் வசித்த காலத்தில் எனக்குத்  தெரிந்து அவர் கலியாணமே  கட்டியதில்லை. தனியாகத்தான்  இருந்தார். அதுவும்   நோர்வேயில் இருந்தார். ஆனால் ஒரேயொரு முறைதான்  காதலித்தார். அதுவும் இந்த நோர்வேயில். அதுவும் நோர்வே நாட்டு வெள்ளைப் பெண்ணை. 

                                                       அந்த ஒருதலைப்பட்சமான காதலில்தான் அவருக்கு ஒருநாள்  நடந்த ஒரு  சம்பவத்தில் எதிர்பாராத நேரத்தில் கரண்ட் சோர்ட்சேர்க்கிட்டில்  பிசகி அடிக்குமே  அதே  மாதிரி மண்டையில்   பியூஸ் போனது !

                                                            
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம் போல அவரோடு பலவருடம்  பழகியிருக்கிறேன் . ஒருநாளும் அவர் வாயால் எதற்காக அவருக்குப்  பியூஸ்  போனது என்று சொன்னதேயில்லை. அதைவிட அவர்  தனக்கு  மண்டைக்குள்  குழப்பம்  குடியிருக்கு என்று அவராக ஒத்துக்கொண்டதில்லை. 

                                                  மனநிலை பிறழ்வான மனிதர்கள் ஒருபோதும் அப்படி  உண்மையை நாலு பேருக்கு தெரியும்படி ஒத்துக்கொள்வதில்லை. அல்லது ஒத்துக்கொள்ளும் தைரியம் இருப்பதில்லை. இப்பிடி அடாத்தாக இருப்பதால் மருத்துவ உதவியும் பெற விரும்பமாடார்கள்

                              
முப்பது சொச்சம் வருடங்களின் முன் நோர்வேயிட்குப் படிக்க வந்த   அத்தான் வேலை  செய்யமுடியாத நிலையில் உள்ளவர்கள் வசிக்கும்   ஒரு சமூக உதவித்திட்டத்தில் கொடுக்கப்பட்ட தனியான  அப்பார்ட்மெண்ட்டில்  மிகத்  தனிமையாக  புரநகர  ஒஸ்லோவில்   வசித்தார்.  

                                                        அவர்  என்ன  படித்தார்  என்று  எனக்குத்  தெரியாது. பலருக்கும்  தெரியாது. காரணம் அவர் படித்த போது  வசித்த  நகரம் தென்மேற்கு நோர்வேயில் உள்ள ஒரு தனிமையான நகரம். இலங்கைத்  தமிழர் அந்த நகரத்தில் ஒருசிலரே வசித்ததாகக்  கேள்விப்பட்டிருக்கிறேன் .



அத்தான் ஊரில எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று சொல்வதுக்கு  ஒரேயொரு வார்த்தைப் பிரயோகபமே  பிடிமானமே இருக்கு. அவர் எப்பவும் இலங்கைத் தமிழர்  முன்னம், அல்லது அப்போது என்று சொல்வார்களே  அப்படிச் சொல்வதுக்குப் பதிலாக அத்தான்  " அப்பேக்க,, அப்பேக்க " என்றுதான் சொல்லுவார். 

                                                   இப்படி ஊர்ல ஒரு குறிப்பிட்ட ஊரில் வசிப்பவர்கள்தான் சொல்லுவார்கள். அது எந்த ஊர் என்று அப்பேக்க அந்த ஊர்ல இருந்து போட்டு இப்பேக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெருங்குடி மக்களுக்கு தெரியும்.



பல  வருடங்களின்  முன் வேலை இல்லாத  ஓய்வு நாட்களில் அவரின் வீட்டுக்குப்  போவேன்.  அவர் வீட்டுக்கு  வேற யாருமே காளாஞ்சி கையில  கொடுத்துக் கெஞ்சிக் கேட்டாலும் போவதில்லை, வருவதில்லை. நானும் அங்கே  போவதுக்கு  விஷேடமான காரணம் என்றும் சொல்வதுக்கு  ஒன்றைத்  தவிர வேற ஒரு  காரணமென்று  ஒன்றுமில்லை . 

                                             வேறென்ன  கிடக்கிறபடி கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை எண்டது  போலத்  தண்ணி அடிக்கத்தான் போறது !!!!!!!!!!!!!

                                            
அத்தான் தனியாகக்  குடிக்க மாட்டார்.  நான்  போனால்தான் வசந்தமண்டப பூசை ஆரம்பிக்கிறது. அவர் குடிச்சாலும் நல்ல தெளிவாகக்  கதைப்பார். நான்தான் வெறி ஏற  ஏற விசர்க்குனமும் சேர்ந்து ஏறி ஒரு கட்டத்தில் முழு விசரன் ஆகிவிடுவேன் . ஆனால் ரெண்டு பேரும் பல விசியங்கள் அப்போதுதான் மனம் விட்டுக் கதைப்போம். 

                                                       அத்தான்  மற்ற நேரங்களில் அநாவசியமாகக்  கதைக்க மாட்டார். கவலையாகவும்  இருக்க மாட்டார்.  சந்தோஷமாயும் இருக்க மாட்டார்   ஆனால் ஆதாரமான  எந்த உலக உணர்ச்சியும் இல்லாத மாதிரி  இருப்பார்.



அந்த அப்பார்ட்மெண்ட் மாரிகால மருதனாமடம் சந்தை போலக் கச கச எண்டு இருக்கும். கதவைத்திறந்து உள்ளே போனால் முதலில் மயக்க வைக்கும் சோம்போறித்தனமான வருடங்கள் சேர்த்து வைச்ச  வாசங்கள் மூக்கைத் திணறடிக்கும்.   

                                                       எதுக்குள்ளே எது கிடக்குது  என்று தோண்டிக் கிளறிப்பார்த்தால்தான் எதிர்பார்க்காத  திசையில் இருந்து   அலாவுதீன்  பூதம் கிளம்பும். குசினியில் அவர் சமைப்பதேயில்லை.   இதுக்குள்ள ஹோலின் ஒரு மூலையில் பெரிய கம்பிக் கூட்டில் முயல் வளர்த்தார்.

                                                                   
சில நாட்களில் அத்தானை வெளிய அழைத்துக்கொண்டு நடக்கப்போவேன்,வேண்டா வெறுப்பாக வருவார். ஆனால் எப்பவும் அவர் எப்பவும் சோபாவில் அருகில் வைத்திருக்கும்  ஒரு டெடிபியர் கரடிப் பொம்மையை நோகாமல் கைக்குழந்தை போல வாரி அணைத்து எடுத்து  ஜக்கட்டுக்குள் செருகிக்கொண்டு வருவார். 

                                             அவருக்கு குழந்தைகள் மேலே விருப்பமாக இருக்கலாம். அல்லது கலியாணம் கட்டி பிள்ளைகள் பெற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கலாம் என்று நினைப்பது. ஆனால் ஏன் அப்படி என்று கேட்டதில்லை.

                                                அத்தான் அவர் வீட்டு ஜன்னல் திரைச் சீலைகளை இழுத்து மூடி அவர் வசிக்கும் இடத்தை இருடாகவே வைத்திருப்பார், ஏன் அப்படி செய்யுறீங்க எண்டு கேட்டா .
                   
                                                      " அதைசே ,,அப்பேக்க  அமெரிக்க CIA என்னைத் தேடி சட்டலைட் விட்டு இருக்கிறாங்கள் ,,"

                                                    என்றும். தன்னை அவர்கள் கண்காணிப்பதாகவும் சொல்லுவார் . ஜன்னலுக்கு கிட்ட போய் எட்டிப்பார்த்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும் எண்டு சொல்லுவார்

                                                                 
ஒரு நடுக்கோடையில் ஒரு நாள் அவரைக் கடைசியாக சந்தித்தது நினைவிருக்கு. 

                                                      நோர்வேயில் கோடைகாலம் மட்டுமே ஒரு விதமான அலாதியான அலங்கரிப்பு வெய்யிலில் மிகையாக அள்ளிக்கொட்டும் பருவகாலம். மற்ற இலையுதிர், இலைதளிர், உறைபனி பருவகாலத்தில் இந்த நாடு செத்த வீட்டில ஒப்பாரி வைப்பது போலவே அழுதுவடியும். இரவுகளில் தெளிந்த வானத்தில் நட்ச்சத்திரங்களையே தனித்தனியாக  எண்ண முடியும்

                                                     அத்தான் எப்பவுமே ஹென்னெஸி என்ற விஸ்கிதான் குடிப்பார். அதுவும் நான் போனால் மட்டுமே குடிப்பார். ஏனென்றால் நான்தான் அதை வேண்டிக்கொண்டு போக வேண்டும். மேசையில் அதை வைச்சுப்போட்டு போத்திலைப் பார்த்து

                                     " உன்னிடம் மயங்குகிறேன் ,,உள்ளத்தால் நெருங்குகிறேன் ,, உன்னிடம் மயங்குகிறேன் ,,உள்ளத்தால் நெருங்குகிறேன் .........."

                                                                என்று பாட்டுப் படிப்பார். ராகு காலம் பார்ப்பது போல  மூடிய திறக்கமாட்டார் . எனக்கு புண்ணியகாலம் முடியப்போறது போல அவதியா இருக்கும். அதனால் எப்பவுமே நாலு டியூர்பெர்க் பிரீமியம் எஸ்ப்போர்ட்  பியர் கொண்டு போறது. அதிகமாக நான் நாலும் இழுத்து முடியத்தான். அத்தான் முதல் சொட் நாக்கில படாமல் அண்ணாந்து விடுவார். 

                                                 அவர்  ஏன் எல்லாரையும் போல  அப்படி விஸ்கியை சொண்டில  சுவைக்காமல் பம்ப்பு செட் வைச்சு இறைக்கிற மாதிரி உள்ளே விடுறார் எண்டதுக்கு காரணம் தெரியாது. ஹ்ம்ம். விசித்திரமான குடிகாரர்.

                                                        
அத்தான் வெறி ஏறத்தான் கதையை தொடங்குவார், அல்லது என்னோட கேள்விகளுக்கு பதில் சொல்லுவார், நானும் காத்திருந்து

                                       "    ஏன் அத்தான் இப்படி இருக்குரிங்க "

                                     " இப்படி என்றால் என்ன ஐஸே "


                                      " இப்படி குளிப்பு முழுக்கு இல்லாமால்  தாடி மீசையோடு ,  தவயோக சுவாமிகள் போல  உலகத்தோடு வெறுத்துப்போய் தனியாக இருக்குறீங்க "


                                               "எனக்கென்ன பிரச்சினை இப்ப "


                                            " இல்லை  எப்பாவது  உங்களை  நீங்களே  பார்த்து இருக்குறீங்களா "

                                                        " இல்லையே "


                                             " எங்களை நாங்களே நேரடியாய் பார்க்க முடியாதுதான் அதுதானே எங்கள் எல்லாருக்குமுள்ள பிரச்சினை "


                                      "   இப்ப என்ன செய்ய சொல்லுறீர் "


                           "  ஒருக்கா  உங்களை  நீங்களே  கண்ணாடியில்  பாருங்கோ "

                                      " எங்க போய் பார்க்க சொல்லுரீர் ,இங்க தானே  முகம் பார்க்கிற  கண்ணாடியே இல்லையே "

                                   " பாத்ரூமில ஒன்று  இருக்கே அத்தான் "

                                          " பாத்ரூமுக்குள்ள  நான் லைட் எல்லாம் ஒப் பண்ணிப்போட்டு எல்லோ உள்ளிடுறனான் "

                                     " அடிடா  சக்கை  எண்டானாம் ,,ஏன்  அங்கேயும்  அமெரிக்கன் சட்டலைட் விட்டு தேடுறாங்களோ அத்தான் "

                           " இல்லை ஐஸே,,எனக்கு  இருட்டுதான்  பயமில்லாத  இடம் "
  
                             " அட  குட்டி இளவரசன் கதையில  உசார் மடையன் வின்ஞானி வார  மாதிரி இது மிகவும்  சுவாரசியமா இருக்கே "

                                " அதார் அந்த வின்ஞானி ,,சொல்லும்  ஐஸே  கேட்பம் "

                                          " ஒரு வின்ஞானி உங்களைப்போலவே  குளிப்பு முழுக்கு இல்லாமல் இருந்தார்,, ஆனால் அவர் இரவில தொலைநோக்கி வைச்சு இருட்டில ஒரு கிரகம் தேடிக்கொண்டிருந்தார் "

                                             " ஹிஹிஹி ,,அப்படியே,,சொல்லும்,,பிறகு  அவர் கண்டுபிடிச்சாரோ  "


                                      " ஓம்  கண்டுபிடிச்சு  அதை அறிவிச்சார்   ஆனால்  அவர் சொன்ன விதம் எடுபடவில்லை "

                                                    "ஏன்  அப்படி நடந்தது "

                                                            " அதுதானே சொன்னேன்  அவரும் உங்களைப்போல  குளிப்பு முழுக்கு இல்லாமல் தாடி மீசையோடு  தவத்திரு தவயோகசாமிகள்  இருந்தார் "

                                             "ஹிஹிஹிஹி  பிறகு என்ன நடந்தது "

                                              " குட்டி இளவரசன் அவருக்கு உதவி செய்து அவரின் கண்டுபிடிப்பைப் பிரபலமாக்க ஒரு ஐடியா கொடுத்தான் "

                                                " ஹிஹிஹிஹி  அதென்ன "

                                      " அதை நீங்களே  அந்தப்புத்தகத்தை  எடுத்து  வாசித்து அறியுங்க "

                            "  ம்,..உலகத்தோடு வெறுத்துப்போய் என்றால் என்ன ஐஸே "



                        " இப்படி உலகத்தோடு வெறுத்துப்போய் தனியாக "



                                " அதைசே ,,அப்பேக்க ,,ரெபேக்கா ஒருநாள் சொன்னதுபடி  வந்தாள் எல்வோ,,"
 
                                          "  ,,ஹ்ம்ம் "


                                        "  ஆனால் அப்பேக்க அவள்தானே  தனியா வரவில்லையே "

                           "  சொல்லுங்க அத்தான் பிறகு  என்ன நடந்தது "

                               "   அதைசே ,,அப்பேக்க ,,ரெபேக்கா ஒருநாள் சொன்னதுபடி  வந்தாள் எல்வோ,,ஹ்ம்ம்,,,ஆனால் அப்பேக்க அவள்தானே  தனியா வரவில்லையே "

                                         " அட கோதண்டராம...மிச்சத்தை சொல்லுங்கோ  அத்தான் ,,ரெபேக்கா வந்து "

                                   " அதைசே ,,அப்பேக்க ,,ரெபேக்கா ஒருநாள் சொன்னதுபடி  வந்தாள் எல்வோ,,ஹ்ம்ம்,,,ஆனால் அப்பேக்க அவள்தானே  தனியா வரவில்லையே "

                                               இதைத்தான் அத்தான் திருப்பி திருப்பி சொல்லுவார். ரெபேக்கா வந்ததோடு கதை நிக்கும். மேட்கொண்டு சொல்லவே மாடடார். 

                                                         கொஞ்சம் விஸ்கி உள்ளுக்குப்போய் வாய் உளறிக்கொட்டி சிலநேரம் உண்மைகள் வரவைக்க  வேலையக் காட்டும் என்று காத்திருந்தா அதுவும் நடக்காது. நேரம் செல்லச் செல்ல அத்தான் அளவுக்கு அதிகமான மவுனமாகி இன்னொரு உலகத்துக்குள் நிர்மலமாக நுழைந்துவிடுவார் .

                                           அந்தநேரம்  மூடி  திறக்காத ஒரு கவனியெர் செவாலியே  பிரெஞ்ச்  றோஸ்  வைன் போத்தலை  எடுத்துக்கொண்டு வந்து மேசையில் வைச்சுப்போட்டு அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்.

                                                           
ஆனால் இந்த ரெபேக்கா சம்பவம்  அது தான் அத்தானின்  வாழ்க்கையோடு உள்ளிறங்கி விளையாடிக் கலவரங்களை உண்டுபண்ணிப்போட்டு கடைசியில் அவருக்கு இப்படியான ஒரு விட்டேந்தியான நிலமைக்குள் விட்டுச் சென்றது. 

 அதில ரெபேக்கா என்ற பெண்னின் பக்கத்தில் பிழைகள்  இல்லை.  அத்தானோடு  அந்தக் காலத்தில் நோர்வேயிட்க்கு வந்த சிலருக்கு தெரியும், அதில ஒருவர் அதை எனக்கு  ஒஸ்லோவில் வைத்து விடிகாலை வரையில் விழித்திருந்த  ஒரு தண்ணிச் சாப்பாடு சங்காபிஷேகத்தில்  சாடைமாடையா சொல்லி இருக்கிறார்.

                                                             
அத்தான் வடமேட்கு  நோர்வேயிட்க்கு வந்த புதிதில் ரெபேக்கா அவர் வாசித்த தொலைதூர நகரத்தில் அறிமுகமாகி இருக்கிறாள். சாதாரண நண்பியாகப்  பழகி இருக்கிறாள். கிராமப் புறங்களில் வசிக்கும் நோர்வே மக்கள் இதயத்தை நனைக்க வைக்கும் அன்பு காட்டும்  நல்ல மனிதர்கள் . 

                                             அத்தானுக்கு அவள் நிறைய மொழிபெயர்ப்பு உதவிகளையும் வேறுபல உதவிகளையும் செய்துகொடுத்திருக்கிறாள். எப்படியோ சில மாதங்களிலேயே அத்தான் ரெபேக்காவை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தது ரெபெக்காவுக்கு தெரியாது

                                                                    
ஈஸ்ட்டர்  வார இறுதி  விடுமுறை நாளில்   ஒரு சனிக்கிழமை   துணிந்து தன்  காதலை அவளிடம் சொல்ல வேண்டும் என நினைத்து  ஒரு கவனியெர் செவாலியே  பிரெஞ்ச்  றோஸ்  வைன் போத்தலும், நெதர்லேண்ட்  போஸ்க்கே  டுலிப் லில்லி  மலர்ககொத்தும் வாங்கி வைச்சுக்கொண்டு  அவர் வசித்த அப்பார்ட்மென்டுக்கு வரச்சொல்லி இருக்கிறார். 
                                          அவளும்  சனிக்கிழமை வந்திருக்கிறாள். அன்றைக்குத்தான் அத்தானுக்கு சனியனும் காலைச் சுத்திப் பிடிச்சது !!!!

                                                   காரணம் ரெபேக்கா  அவளோட ஆபிரிக்கா   காணா நாட்டுக் காப்பிலிக்   கணவனோடும் ரெண்டு சின்னப் பிள்ளைகளோடும் வந்தாள்.   

                                                   அன்றைக்கு இரவு  எதிர்பாராத நேரத்தில் கரண்ட் சோர்ட்சேர்க்கிட்டில்  பிசகி அடிக்குமே  அதே  மாதிரி மண்டையில்   பியூஸ் போட்டுது !!!

                                                                       
முதலியார் முத்தின வாழைக்காய்க்கு விலைபேசிய வீணாப்போன மாதிரி சில நேரம் எதுவும் நடக்கலாம் என்று நல்லாவே தெரியும் ,தெரிந்தும், இதெல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி நான் அத்தானுக்கு ஒரு கலியாணம் செய்து வைச்சுப் பார்ப்பம் சிலநேரம் ஆள் பழைய நிலைமைக்கு திரும்பி வரலாம் என்றுதான் நினைச்சேன். 

                                                     வாழ்க்கையே நிலையாமை நோக்கிய பயமொன்றில்  அடுத்த கடடத்துக்கு ஆங்காங்கே தைரியங்களை வரவழைத்துக்கொண்டு தீர்த்தயாத்திரை போவதுதானே , அதில ரிஸ்க்  எடுப்பது ஒரு விதமான திரில் தானே, இல்லையா சொல்லுங்க பார்ப்பம்,

                                                 "  அத்தான் நீங்க இப்பிடி தனியா இருக்குறீங்க,,உங்களுக்கு ஒரு  தமிழ்  பெண்ணொன்று வாழ்க்கைத்துணையா  உங்களோடு இருந்தால் நல்லம் தானே "

                                                     " ஹ்ம்ம்,,,,அப்பேக்க  சின்ன வயசில அம்மாவும் இப்பிடித்தான் சொல்லுவா,,சடங்கு செய்யிற வயசில கலியாணம் கட்டிப்போட வேண்டும் எண்டு "

                                    " அதுதான் நானும் கேட்க்கிறேன் ,,உங்களுக்கு விருப்பமா,,விருப்பம் என்றா எப்படியா ஒரு பெண்ணை நீங்க எதிர்பார்க்குறீங்க "

                                                " ஹ்ம்ம்,, அப்பேக்க  ஸ்டாண்லி கொளிச்சில படிக்கேக்க  வதனரூபி என்று ஒருத்தி என்னோட படிச்சவள் ,,மாம்பழம் சந்தியில் இருந்து வருவாள், நல்ல வடிவான பெட்டை , "

                                                   " ஹ்ம்ம்,,நல்லாத்தான்  சைக்கிள் டயர் தேய்த் தேய ரவுண்ட் அடிச்சு  சைட் அடிச்சு இருக்குறீங்க  போல இருக்கே,,"

                                               " அப்பேக்க நினைக்கிறது  பின்னடிக்கு கலியாணம் கட்டின்னா இவளைப்போல ஒருத்தியத்தான் வைபோசா கடத்திக்கொண்டு  போய் என்றாலும்  கட்ட வேணும்  எண்டு ,"

                                          " பிறகு ,,  "

                             " ,அதெல்லாம்  அப்பேக்க  நடந்த கதையல்லோ "

                                " ஹ்ம்ம்,, எனக்கு வதனரூபி எப்படி இருந்தால் எண்டு தெரியாதே அத்தான்  ,, நீங்களே  உங்க  போர்வெண்தனிங்  எதிர்ப்பார்ப்பு  டிமாண்டிங் ஒப்சனை சொல்லுங்களேன் "

                                    " ஹ்ம்ம்  நல்ல வெள்ளையா இல்லாட்டியும் பரவாயில்லை..சுமாரான நிறமாய்  இருக்கவேணும் "

                           " என்னது,,,நிறத்துக்கே கலியாணம் கட்டப்போறிங்க "

                            " ஹ்ம்ம்,,இல்லை ஐஸே,,பிறகு எங்கட ஆக்களிண்ட நல்லது கெட்டதுக்கு மனுசி எண்டு அவளைக் கூட்டிக்கொண்டு பேக்கேக்க  கொஞ்சம் எழுப்பமா  இருக்குமெல்லோ "

                                 " அட,,அட,,,பிறகு  வேற என்ன  போர்வெண்தனிங் ,,அதுகளையும்  சொல்லுங்கோ "

                                  " ஹ்ம்ம்,,மெல்லிசா  இருக்க  வேணும் ,," 

                                        " பிறகு ,, வேற என்ன "

                                  " எனக்கு குண்டுப் பெண்களைக் கண்ணில காட்டப்படாது ,," 

                                                " பிறகு ,, வேற என்ன "

                                         " அப்பேக்க  ஊர்ல எங்கட வீட்டு ஒழுங்கை முடக்கில  ஒருத்தி இருந்தால் அவளும் என்னோட படிச்சாள் ,,சகடை போல வண்டியத் தள்ளிக்கொண்டு வருவாள் , "

                               " அட,,,அதென்னதுக்கு மெல்லிசு..ட்ரெயின்  பஸ்ஸில போறதக்கு  டிக்கெட்  எடுக்கிறது  செலவு எண்டுப்போட்டு  தூக்கிக்கொண்டு திரியப்போறிங்களோ"

                                " ஹ்ம்ம்...அப்பேக்க  ஊர்ல எங்கட வீட்டு ஒழுங்கை முடக்கில  ஒருத்தி இருந்தால் அவளும் என்னோட படிச்சாள் ,,சகடை போல வண்டியத் தள்ளிக்கொண்டு வருவாள் , "

                                 " சரி  விடுங்க ..பிறகு  வேற என்ன  போர்வெண்தனிங் ,,அதுகளையும்  சொல்லுங்கோ "

                                     " நல்லா சமைக்க வேணும்,,அப்பேக்க  அம்மா ஊர்ல  அடுப்புக்குள்ள நிண்டு  சமைச்சு  சமைச்சுக்  கொட்டுவா,,"

                                       " பிறகு ,, வேற என்ன "

                             " அதுபோல,, உடுப்பு துணிமணி நேரத்து நேரம்  பிழிஞ்சு துவைச்சு போடக்கூடிய ஆளா  இருக்கவேண்டும்,"

                           " பிறகு ,, வேற என்ன "

                         " ,வீடு வாசலை ஒவ்வொருநாளும் கழுவி துடைக்க வேணும்.," 

                               பிறகு ,, வேற என்ன "

                            " உமக்கு தெரியும் தானே நோர்வே வாய் பொத்தி  சுத்தம் பேணுற  கன்றி எண்டு "

                                  " ஓம்  ஓம்..உங்கட அப்பார்ட்மெண்டை  பார்த்தாலே தெரியுதே "

                                     " அது  நான் இப்படி இருக்கிறபடியா சிலம்பாய்ய்  போல இருக்கு..." 

                                     " பிறகு ,, வேற என்ன "

                                       " தாலி கட்டி பொஞ்சாதி எண்டு ஒருத்தி வந்தா  இதெல்லாம் செய்யத்தானே  வேணும் "

                              " அத்தான்,,இதெல்லாம் செய்ய  தாலி கட்டி பொஞ்சாதி தேவையில்லை,பேசாம  மாதக் கொன்ராக்கில  ஒரு போலந்து வேலைக்காரியை  பிடிச்சு  வையுங்கோ..அவளுகளுக்கு  தாலியும்  தேவையில்லை,, வேலியும்  தேவையில்லை ,அதில்லாமல் காசு கொடுத்தா கலியாணமும் அப்பப்ப  அவசரத்துக்கு  டெம்பிரேரியாக் கட்டலாம்  "  

                                    " ஹ்ம்ம்,,இல்லை,,இப்ப நீர் தானே தமிழ் பெண்  இருக்கு எண்டு சொன்நீர் ,,அதால என்னோட  போர்வெண்தனிங்களை சொன்னேன் ஐஸே ,," 

                                " ஹ்ம்ம்,, அதுதான் நானும் ஜோசிக்கிறேன் "

                                        " நீர்  ஐஸே  சிலநேரம் இங்காலையும்  அங்காலையும் கிள்ளிவிடுற வேலை பார்க்கிரியிற் போல இருக்கு,,இப்படித்தான் அப்பேக்க ஊர்ல உப்புக்குளம் பிள்ளையார்கோவிலடியில  இருந்து ஒரு பொம்பிளை அம்மாவுக்கு வீட்டில மா இடிக்க  அப்பேக்க வருவா,,அவாவும் உம்மை  மாதிரித்தான்  சல்லாபி  சலாபி கதைக்கிறது  "

                                 " சரி  விடுங்க,,முதலில்  பொம்புளை தேடுவம்,,அதே இன்னும் தொடங்கவில்லை. "

                                       " என்னவோ என்னோட  போர்வெண்தனிங்களையும்  மறக்காதையும் "

                                    " ஓம்,,ஓம்,,மறக்கவே  மாடடேன்,,மறக்கிற  மாதிரி சிம்பிளாவா  சொல்லி இருக்குறீங்க "

                                              
அதோட அந்த பூசை முடிஞ்சுது. நான் அன்றைக்கே ஜோசித்துப்பார்த்தேன் இந்தமாதிரியான கோணங்கிகளின் கோட்பாடு  நடைமுறைக்கு உதவாது என்று தெரிந்தாலும் , என்னோட பாட்டி எப்பவும் சொல்லுவா  வாலறுந்த பட்டங்களும் பறக்கலாம்  என்பது தானே வாழ்வின் நம்பிக்கை,  என்ன செய்வது பரீட்சித்துப் பார்க்கலாம் என்றுதான் எப்போதும்  நினைப்பது .  

                                            ஆண்கள் எவ்ளவு மட்டமாக இருந்தாலும் கலியாணம் கட்டிட நினைக்கும் போது கொஞ்சம்   எடுப்பாத்தானே ஜோசிக்கிறார்கள்!!!!!!

                              எதுக்கும் ட்ரை ஒன்று குடுத்துப் பார்க்கலாம்  என்று நினைக்கும் போதுதான் வஸந்தியக்கா  டக்கென்று  நினைவுக்கு வந்தா..!

................தொடரும் ..............



                                                     

Wednesday 26 April 2017


திண்ணையில  விழுந்தவளுக்கு திட்டுக்கெண்டு வந்திச்சாம் கலியாணம்  என்று ஒரு பழங்கதை இருக்கு. அது பழையகால மனிதர்கள் பழையகால மனிதர்களுக்கு சொன்னது என்பது போல இருந்தாலும் அதில வாற அபத்த சம்பவங்கள் போலவே நிஜ வாழ்க்கையிலையும் பல சம்பவங்கள் நிகழும். அதில் அச்சுறுத்தல் போலவே பதுங்கி இருக்கும் சின்னத் திருப்பங்கள் ஒரு முழுமையான  மனிதனின்  உணர்வோடு விளையாடி கடைநிலைக்கும்  இறக்கிவிடும் , கொஞ்சம் கஷ்டமான நிலைமைதான் அப்படி எதிர்கொள்ள நிகழும்போது

                                      நோர்வேயில் மனநிலைகளை இலகுவாகப் பிரட்டிப் போடும் சமநிலை அற்ற வாழ்க்கைமுறை  நிறையவே இருக்கு. வாழ்க்கைத் தரத்தை நிலத்தில இருந்து பத்தடி உயர்த்தி வைத்திருக்கும் பணக்காரா  நாடு வேறையா அதனால மனநிலை குழம்பியவர்களை கவனமாகப் பராமரிக்கும் சமூக உதவித் திட்டங்கள் சிறப்பாக செய்து வைத்திருக்க்கிறார்கள். இந்த   தலையைப் பிடிக்காமல் வாலை வைச்சு உருவும் முரண்பாட்டின் பல அபத்தமான கலாச்சாரக் குழப்பம் அதன் முகத்தில் இருந்தாலும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள நோர்வே ஒரு அழகான  நாடுதான்  .

                                            இந்தக் கதைக்கு நோர்வேயை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை,  நாலு காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் அது நாலுபக்கமும்  காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும் என்ற  காதலில்  எதிர்ப்பார்ப்புக்கள்  பொய்த்துப் போகும்போது அந்த வீழ்ச்சியத் தாங்கும்  சக்தி எல்லாருக்கும்  இருப்பதில்லை. சிலர் அடியோடு மாறி விடுவார்கள். அந்த  அன்பின் அடியில்  இருந்து எழும்பிவராமல் , அல்லது  எழும்பிவர  விருப்பம்  இல்லாமல் கிடைத்த  ஒரேயொரு  வாழ்கையைத்  தாங்களாவே திசை திருப்பிவிடுவார்கள். அதுக்கு  முக்கியகாரணம் காதல்தான் .

                                            அத்தான்  இப்ப  எப்படி இருப்பார் ?,  முன்னர் இருந்ததை விடவும்  முன்னேற்றமாய்  இருப்பாரா ?, அல்லது அதைவிடவும் வாழ்க்கையைச்  சிக்கலாக்கி  சின்னாபின்னமாகிய மனநிலையில் இருப்பாரா ?, அல்லது அதிஸ்டமாக மீண்டு  பழைய மிடுக்கோடு உயிர்தெழுந்துவிட்டாரா ?,  அல்லது உயிரோடுதான் இருப்பாரா ?  என்று எனக்குத் தெரியவில்லை. கடைசி வரியை எழுதும்போது சாவு பற்றிய பயன்கள் இல்லாத போதும் மனது கனக்கத்தான்  செய்கிறது.

                                                      வாழ்க்கைப் பாதை ஒரு வட்டம்போல தொடங்கிய  இடத்தில்  அல்லது ஏதோவொரு சந்தர்ப்பத்தில்  சந்தித்த இடத்தை இன்னொருமுறை தொட்டுச்செல்லும் சாத்தியங்கள் எப்போதும் நாங்கள்  நினைத்தபடி தட்செயலாகவும்  நடப்பதில்லை. அப்படி நடந்தால் அதுக்குப் பெயர் வாழ்கையும் இல்லை. அப்படித்தான் ஊரில  புண்ணியக்குஞ்சி எப்பவும்  கோடாப் போட்ட வழக்கம்பரை  சுருட்டுப் பத்திக்கொண்டு சொல்லுவார். அப்படியான ஒரு திசையில் தான் அத்தானின் வாழ்க்கை திசை மாறியது


                                   எல்லாரும் அவரை அத்தான்  என்று சொல்வதால்தான் நானும் அத்தான் என்று சொல்வது. மற்றப்படி அவர் என் கூடப்பிறந்த அக்காவின் கணவரோ,  ஒன்றுவிட்ட அக்காவின் கணவரோ, அல்லது  தூரத்து  உறவுமுறையான அக்காவின் கணவரோ   இல்லை. எங்கள் ஊரைச் சேர்ந்தவரும் இல்லை. ஏதோவொரு உரைச் சேர்ந்த   எல்லாருக்கும் பொதுவான  அத்தான். அத்தான் அந்த உறவுமுறை சொல்லும்  பெயர் , அந்த அன்பின்  அழைப்பு   எவ்வளவு  அன்பான நெருக்கத்தின்  பெயர் சொல்லும் வார்த்தை. அத்தானும் அப்பிடித்தான் அன்பானவர்.

                                          நோர்வேயில் அவர் வசித்த காலத்தில் எனக்குத்  தெரிந்து அவர் கலியாணமே  கட்டியதில்லை. தனியாகத்தான்  இருந்தார். அதுவும்   நோர்வேயில் இருந்தார். ஆனால் ஒரேயொரு முறைதான்  காதலித்தார். அதுவும் இந்த நோர்வேயில். அதுவும் நோர்வே நாட்டு வெள்ளைப் பெண்ணை. அந்த ஒருதலைப்பட்சமான காதலில்தான் அவருக்கு ஒருநாள்  நடந்த ஒரு  சம்பவத்தில் எதிர்பாராத நேரத்தில் கரண்ட் சோர்ட்சேர்க்கிட்டில்  பிசகி அடிக்குமே  அதே  மாதிரி மண்டையில்   பியூஸ் போனது.

                                          கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம் போல அவரோடு பலவருடம்  பழகியிருக்கிறேன் . ஒருநாளும் அவர் வாயால் எதற்காக அவருக்குப்  பியூஸ்  போனது என்று சொன்னதேயில்லை. அதைவிட அவர்  தனக்கு  மண்டைக்குள்  குழப்பம்  குடியிருக்கு என்று அவராக ஒத்துக்கொண்டதில்லை. மனநிலை பிறழ்வான மனிதர்கள் ஒருபோதும் அப்படி  உண்மையை நாலு பேருக்கு தெரியும்படி ஒத்துக்கொள்வதில்லை. அல்லது ஒத்துக்கொள்ளும் தைரியம் இருப்பதில்லை. இப்பிடி அடாத்தாக இருப்பதால் மருத்துவ உதவியும் பெற விரும்பமாடார்கள்

                                          முப்பது சொச்சம் வருடங்களின் முன் நோர்வேயிட்குப் படிக்க வந்த   அத்தான் வேலை  செய்யமுடியாத நிலையில் உள்ளவர்கள் வசிக்கும்   ஒரு சமூக உதவித்திட்டத்தில் கொடுக்கப்பட்ட தனியான  அப்பார்ட்மெண்ட்டில்  மிகத்  தனிமையாக  புரநகர  ஒஸ்லோவில்   வசித்தார்.  அவர்  என்ன  படித்தார்  என்று  எனக்குத்  தெரியாது. பலருக்கும்  தெரியாது. காரணம் அவர் படித்த போது  வசித்த  நகரம் தென் மேற்கு நோர்வேயில் உள்ள ஒரு தனிமையான நகரம். இலங்கைத்  தமிழர் அந்த நகரத்தில் ஒருசிலரே வசித்ததாகக்  கேள்விப்பட்டிருக்கிறேன் .

                                                       பல  வருடங்களின்  முன் வேலை இல்லாத  ஓய்வு நாட்களில் அவரின் வீட்டுக்குப்  போவேன்.  அவர் வீட்டுக்கு  வேற யாருமே காளாஞ்சி கையில  கொடுத்துக் கெஞ்சிக் கேட்டாலும் போவதில்லை, வருவதில்லை. நானும் அங்கே  போவதுக்கு  விஷேடமான காரணம் என்றும் சொல்வதுக்கு  ஒன்றைத்  தவிர வேற ஒரு  காரணமென்று  ஒன்றுமில்லை . வேறென்ன  கிடக்கிறபடி கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை எண்டது  போலத்  தண்ணி அடிக்கத்தான் போறது.

                                            அத்தான் தனியாகக்  குடிக்க மாட்டார். நான்  போனால்தால் வசந்தமண்டபத் பூசை ஆரம்பிக்கிறது. அவர் குடிச்சாலும் நல்ல தெளிவாகக்  கதைப்பார். நான்தான் வெறி ஏற  ஏற விசர்க்குனமும் சேர்ந்து ஏறி ஒரு கட்டத்தில் முழு விசரன் ஆகிவிடுவேன் . ஆனால் ரெண்டு பேரும் பல விசியங்கள் அப்போதுதான் மனம் விட்டுக் கதைப்போம். அத்தான்  மற்ற நேரங்களில் அநாவசியமாகக்  கதைக்க மாட்டார். கவலையாகவும்  இருக்க மாட்டார்.  சந்தோஷமாயும் இருக்க மாட்டார்   ஆனால் ஆதாரமான  எந்த உலக உணர்ச்சியும் இல்லாத மாதிரி  இருப்பார். 

                                                    அந்த அப்பார்ட்மெண்ட் மாரிகால மருதனாமடம் சந்தை போலக் கச கச எண்டு இருக்கும். கதவைத்திறந்து உள்ளே போனால் முதலில் மயக்க வைக்கும் சோம்போறித்தனமான வருடங்கள் சேர்த்து வைச்ச  வாசங்கள் மூக்கைத் திணறடிக்கும்.   எதுக்குள்ளே எது கிடக்குது  என்று தோண்டிக் கிளறிப்பார்த்தால்தான் எதிர்பார்க்காத  திசையில் இருந்து   அலாவுதீன்  பூதம் கிளம்பும். குசினியில் அவர் சமைப்பதேயில்லை.   இதுக்குள்ள ஹோலின் ஒரு மூலையில் பெரிய கம்பிக் கூட்டில் முயல் வளர்த்தார்.

                                 ஒரு நடுக்கோடையில் ஒரு நாள் அவரைக் கடைசியாக சந்தித்தது நினைவிருக்கு. நோர்வேயில் கோடைகாலம் மட்டுமே ஒரு விதமான அலாதியான அலங்கரிப்பு வெய்யிலில் மிகையாக அள்ளிக்கொட்டும் பருவகாலம். மற்ற இலையுதிர், இலைதளிர், உறைபனி பருவகாலத்தில் இந்த நாடு செத்த வீட்டில ஒப்பாரி வைப்பது போலவே அழுதுவடியும். இரவுகளில் தெளிந்த வானத்தில் நட்ச்சத்திரங்களையே தனித்தனியாக  எண்ண முடியும் ..

Tuesday 25 April 2017

மனப்பிறழ்வுக்கவிவலிகள் ..

மனப்பிறழ்வுக்கவிதைகள் ஒருவிதமான தனிமனித உணர்வுகளோடு பேசிக்கொண்டிருக்கும் வகை. அப்படியான ஸ்டைலில் பல கவிதைகள் சில வருடங்கள் முன்னர் எழுதியிருக்கிறேன். அவை எவ்வளவுதூரம் தரமானவை என்று சொல்ல முடியவில்லை. எனக்கே ஒரு கட்டிடத்தில் அலுப்பு அடிச்சதால் அப்படி எழுதுவதை நிறுத்திவிட்டேன். பதிலாக  வேறு சில வடிவங்களில் புது முயட்சிகள் செய்தேன். 

                                                    பலநேரங்களில் கவிதை ஒரு கட்டுக்குள் அடங்காமல் நதிபோல ஓடிக்கொண்டிருக்கும், அதை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவந்து சேர்ப்பது அவ்வளவு இலகுவல்ல. ஒரு நல்ல கவிதை கமண்டலத்தில் இருக்கும் கங்கைத்  தீர்த்தம் போல என்று எப்பவுமே நான்  நினைப்பது , ஏன்  என்றால் அவ்வளவு  பெறுமதி அந்தக் கவிதையின்   " conceptual framework "." writing style " , " manner of expressing ", " specific contex thoughts," " language characteristic ", " way of approaching ", " reflection of personality, " " Word choice ", " sentence fluency " இவற்றில் உள்வாங்கப்பட்டிருக்கலாம்
                                                              
ஒரு
மோசமான கவிஞனை
ஒரு சிறந்த கவிதை
எழுத வைத்தது
எதுவாக இருக்கும்
அவன் மனைவி
அகாலமாக இறந்து போனதோ,
பெற்ற பிள்ளைகள்
அக்கறையில்லாமல்
இருந்ததோ,
நல்ல நண்பர்கள்
தோற்றபோது ஒடிப் போனதோ,
உறவினர்கள்
மறுபடியும் வென்றபோது
திரும்பி வந்ததோ,
அயல் வீட்டுக்காரர்
அவனின்
இயலாமையைப் பரிகசித்ததிலோ,
மேலதிகாரி
பதவி உயர்வு கொடுக்காததிலோ,
மோட்டு எதிரிகள்
குருட்டுத்தனமா விமர்சித்ததோ,
வசதியான பெற்றோர்
வேண்டுமென்றே
ஒதுக்கி வைத்ததோ ,
கூடப்பிறந்தவர்கள்
அவன் கூடப்பிறந்ததை
கேவலமாக நினைத்தோ,
வசித்த தெருக்கள்
திருட்டுத்தனமா
உண்மைகளை மறைத்ததோ.
வாழ்ந்த நகரம்
வாழ்க்கையை நேசிக்கக்
கற்றுக்குடுக்காததோ
வளர்த்த நாய்க்குட்டி மட்டும்
கடைசிவரை அளவில்லா
அன்பு காடியதோ,
இதில் எதோ ஒன்று,
அல்லது
இது எல்லாமே
காரணமா இருக்கலாம்
அவன் எழுதிய
அந்தச் சிறந்த கவிதைக்கு!.
.............................................................................

தொலைந்த
கனவைத் தேடி,
திடமாகத் திட்டமிட்டு,
நிதானமாக ஜோசித்து,
நின்று ஓய்வெடுத்து,
நிமிர்ந்து பார்த்து ரசித்து
ரகசிய  சந்திப்புகளுடன்,
புதுப்பிக்கும்
சிநேகிதங்களுடன்,
தளாராத
தன்னம்பிக்கையுடன்
தொடரும் உன்
நேரான பயணத்தின்
குறுக்குப் பாதையை
பயத்தோடு பரிதாபமாகப்
பார்த்துக்கொண்டு
நான்...
மூளையை கசக்கிக்
கஷ்டப்படாமல்
எழுதுவதுக்கு விசியங்கள்
அதில் இருந்தாலும்,
இப்போதைக்கு
எழுதப் போவதில்லை
நீ
நீயாகவே
திரும்பி வந்து
இயல்பாகக் கேட்கப்போகும்
முதல் கேள்வி
சந்தர்ப்பமாகவே
சிதறாமல் வருமென்ற நம்பிக்கை
வேதனையுடன்
சேர்த்து வைத்து
நீ  சொல்லப்போகும்
முதல் பதிலில்
மறுபடியும் தொடங்கலாம்,
அல்லது
நிரந்தரமாய் நின்று விடலாம்
ஒரு கவிதை !

........................................................................


குடியிருக்க ஒழுங்கான
வீடில்லாத போதும் ,
உன்
வாக்குறுதிகளை நம்பி
ஒரு கோவில் கட்டினேன் ,
அதுக்கு ராஜ கோபுரம்
கட்டி சிலைகள் வைத்தேன்,
அதன் மாட வீதிகளில்
வண்ண விளக்குகள் பொருத்தினேன்,
உன்
அழகுக்கு அழகு சேர்க்க
ஆயிரம்கால் மண்டபம் நிர்மானித்தேன்,
உன் குரல் போலவே
ஆலயமணி அலங்காரமா அமைத்தேன்,
நீ
தீர்த்த நீராடவே
செங்கழுநீர்க் குளம் வெட்டி
அதில்
தாமரைகள் தழைக்க விட்டேன் ,
நீ
பந்தா போட்டு பவனிவர
சித்திர தேரும் வடிவமைத்தேன் ,
அந்த
இதயக் கோவிலுக்கு
கும்பாவிசேகம் செய்து,
அதன்
கருவறையில் உன்னை
காலமெல்லாம் வைக்க நினைக்கக்,
கடைசி காலம் வரை
கங்கைக் கரையில்
காத்திருக்க வைத்துவிட்டு,
" கனவுகள் வெறும்
கனவுகளே....."என்று
காற்றுக்கு சொல்லியனுப்பிக்
கடவுள் போலக்
காணாமலே போயிட்டாய்
.
................................................................


நடுச்சாம ஒஸ்லோவில்
வெளிறிய குளிர்காற்று
திகில்படம் வீசியடிக்க,
கடைசி இரவு ரெயிலில
கடைசியாக ஏற
தூக்கம்,
தள்ளிக்கொண்டுபோய்
ஜன்னலோர இருக்கையில்
விழுத்தியது
முன்சீடில முகத்தைக்
குனிந்து கொண்டிருந்து
விரல்களில் நாட்களை
எண்ணிக்கொண்டிருந்த
பெண்ணை,
அமைதியாக
முகத்துக்கு முகம்
முழிஞ்சு பார்க்க
சக்தியிருக்கவில்லை .
நேர்மையாகவே
நேராகவே நெற்றியில்
நிமிர்ந்து பார்க்கப்
பயந்து
துணிவோடு
நிமிடங்களுக்கு
ஆசைவரவில்லை
கடைகண்ணால
களவாகப் பார்க்க
கவுரவம் விடாமல்
ஒரு கட்டத்தில்
பேச்சோடு பேச்சா
பேசிப்பார்க்க முடிவெடுத்து
"உன் பெயர் என்ன?" என்று தொடங்கினேன்
அவள் சடார் எண்டு
நிமிர்ந்து பார்க்காமலே எழுந்து
கால்கள் இரண்டும்
பூமியோடு முட்டாமல்
" மரண தேவதை "
என்றவள்
மிதந்து மிதந்து போய்க்கொண்டே
"உன்னை மறுபடியும் ஒருநாள்
சரியான தருணத்தில் சந்திப்பேன் " என்றவள்
சத்தியம் போலச் சொல்ல,
நான்
பதறியடிச்சு எழுந்தோட
என் கால்களும்
மிதந்து மிதந்து மிதக்கத் தொடங்கியது!


.....................................................................

கதைத்துக்கொண்டிருந்த
கனிவான குரலொன்று
கொஞ்சநாளாய்க்
காணாமல்ப் போய்விட்டது ...
வெளிப்படையாகச்
சொல்லமுடியாத
அதன் காரணங்கள்
கனதியாக இருந்தாலும் ,
கடும் கோபத்தின் விளிம்பிலும்
கருணை காட்டிய,
ஆத்திரத்தை அடக்கமுடியாமல்
அழுது வடித்த,
சின்னதாகச் சிரித்து சிரித்தே
சிந்திக்க வைத்த,
மகிழ்ச்சியில்  மறந்து
மனம் திறந்து மகிழ்ந்த ,
எல்லா எதிர்மறைகளையும்
 எதிர்த்து
எதிர்பார்ப்பு எப்போதும் தந்த,
நடக்கப்போறதெல்லாம்
 நடக்குமென
நம்பிக்கைகளை நம்ப வைத்த,
சின்ன சின்ன நன்றிகளில்
மறக்கமுடியாமல்
சித்திரவதை செய்த,
மவுனத்திலும் மயங்க
மொழிகள் அர்த்தத்துடன் பேசிய
அந்தக்
கனிவான குரல்,
இல்லாமலே இருந்துகொண்டு
இதயத்தை இயங்க
மனம் ம் எதிரொலித்து
மணிக்கணக்கில்
கதைத்துக் கொண்டேயிருக்கும்
மரணம்வரை.......

......................................................................


அவள்
பேசத்தொடங்கிய
முதல் வரியில்
எதற்காகவோ ஏங்கும்
இதயமிருந்தது,
இரண்டாவது வரியில்
அந்த
இதயத்தைத் திறந்தாள்,
மூன்றாவது வரியில்
முக்கியமானவைகளைத்
தொடங்க
மனதை விழுத்தும்
அதில்க் கோபமிருக்க
நான்
கேட்டுக்கொண்டுருந்தேன் ....
அவள் சொன்ன
நியாயங்களின்
நின்மதியைக் குலைக்காமல் ,
முறைப்பாடுகளோடு
முரண்டு பிடிக்காமல் ,
குற்றசாட்டுக்களோடு
குற்றவுணர்வாகி,
அவள் அழுத
கண்ணீரோடு கருணையாக
அப்பவும் நான்
கேட்டுக்கொண்டுருந்தேன் ....
"இனிக் கதைக்க ஒண்டுமில்லை ,
நீ உன் கதையைச் சொல்லு ..... "
என்ற போதும்
பேசாமல்க்
கேட்டுக் கொண்டிருந்தேன்..
அவள் பேசத்தொடங்கிய
முதல் வரியில்
இருந்தது போலவே
அந்தக் கடைசி வரியிலும் இருந்தது
அன்புக்காக ஏங்கும்
இதயம் !.

...........................................................


வெற்றிகள்
வாசல்ப்படியோடு
நின்றன
உள்ளுக்கு வரவேயில்லை,
அதிஸ்டங்கள்
அழைப்பு மணிகளை
அமுக்கியபோதும்
அசட்டையாகவே இருந்தேன்,
சந்தர்ப்பங்கள்
ஜன்னல் வழியாக
சைகை காட்டிய போது
சரியாகக் கவனிக்கவேயில்லை,
இலட்சியங்கள்
இன்று வரை
இதயத்தில் தன்னும்
இருந்ததே இல்லை ,
எழுந்து
ஓடவேண்டிய நேரம்
மெதுவாக
நடந்து போனேன் ,
பாடவேண்டிய நேரம்
மவுனமாக
வார்த்தை தேடினேன்,
துணியவேண்டிய
நேரம்
தூங்கிக்கொண்டுடிருந்தேன்,
சிரிக்க வேண்டிய
நேரம்
சிந்தித்துக் கொண்டிருந்தேன் ,
இருந்தாலும்
இன்றைவரை ஏதாவது
உருப்படியாச் செய்ய
உதவிக்கொண்டிருப்பது
விழுந்த போதெல்லாம்
வலியோடு பாடம் நடத்திய
என்தோல்விகள்.
.
.........................................................

நீ
போனபோது சொன்னதை
சொல்லாமலே
ரகசியாமாகக்
கொண்டு போயிருக்கலாம்,
நீ
இல்லாமலப் போனபின்
நானும்
இல்லாமல்ப்
போய்கொண்டிருந்தபோது,
திடீரெண்டு
திரும்பி வந்து
நூறு கேள்வி கேட்டாய்
என்னிடம்
பொருத்தமாக
ஒரு பதிலும் இருக்கவில்லை
" நீ போன போது சொன்னதை
நன்றாகச் செய்தாயா ? " என்று
ஒரேயொரு
கேள்வி கேட்டேன்
நீ சடுதியாகச் சமாதியானாய்.
பின்ன என்ன
விட்ட இடத்தில இருந்து
தொடங்காமல்
வேறு எங்கிருந்து தொடங்கிறது ?
.
........................................................

உங்களைப் போலவே எனக்கும்
ஒரு வீடு
அதிலக் கூரை,
ஒரு குடும்பம்
அதில் சந்தோசம் ,
ஒரு வாழ்க்கை
அதில் நம்பிக்கை,
ஒரு கனவு
அதிலக் காட்சிகள்,
உங்களைப் போலவே எனக்கும்
ஒருகாலத்தில்.......
இன்றெனக்கு
யாசிக்க வாழ்நாள் முழுவதுமே இருக்க
உங்களுக்கு
ஜோசிக்கவே நேரம் இல்லை.
இன்றோடு
நினைவுகளே நம்பிக்கையற்று
தவறிப்போகும்போலிருக்க,
நீங்களோ
கனவுகளை நம்பிக்கையோடு
துரத்துகிறீர்கள்.
இங்கே
வசதியில்லாமல் மண்டியிடிருப்பது
என் வயதான
முழங்கால்கள் மட்டுமில்லை
என் வாழ்கையின்
வசதியான சுயகவுரமும்தான்,
இருந்தாலும்
சில சமயம்
மனசாட்சியை
நேருக்கு நேர் பார்க்க
கட்டாயம் தேவையாய் இருக்கிறது
ஒரு
இளகிய இதயம் !

..............................................................

உனக்கும் எனக்கும்
இடையில்
அடிக்கடி நடக்கும்
"நீயா நானா " சண்டைகளில்
என் கேள்விகளும்
அதற்கு
உன் பதில்களும்,
என் பிடிவாதமும்
அதில்
உன் தற்பெருமையும்,
என் விளக்கமும்
அதில்
உன் நிராகரிப்பும்,
என் ஏக்கமும்
அதில்
உன் நம்பிக்கையும்,
என் சமாளிப்பும்
அறுதியா
உன் சமாதானமும் ,
எப்போதுமே
சின்ன சேதாரத்துடன்
தப்பினாலும் ,
உண்மையில்
அதிகம்
அடிவேண்டிக் காயப்படுகுது
உண்மையானவைகளின்
ஆழமான அன்பு !

.....................................................

மறந்து போனதுக்கும்
அதற்காகக் கேட்கப்பட்ட
மன்னிப்பிட்கும்
மறைவில்
ஒரு
குற்றவுணர்வும்
நடந்து முடிந்ததுக்கும்
இனிமேல்
நடக்கப் போறதுக்கும்
நடுவிலொரு
நம்பிக்கையும்
திருப்பிக் கிடைக்குமென்று
கொடுத்ததுக்கும்
அதுவே கிடைக்காமல்
போனதுக்கு
அருகில்
ஒரு இயலாமையும்
எல்லாம் இருந்தும்
ஒண்டும் இல்லாதவர்களுக்காய்
இரங்காத இதயத்தின்
இடையே
ஒரு பேராசையும்
வெறுத்து
வெளியேற வழியின்றி
நசுங்கிக்கொண்டே
பொறுத்து வாழ்வதுக்கு விளக்கமாக
ஒரு தியாகமும்
எங்கேயும்,
எப்போதும்,
யாரோ ஒருவருக்கு ,
ஏதோ ஒரு கணத்தில்
நிகழத்தான் செய்கின்றது!


...............................................................................

எதிர்காலக் கனவில்
இதமாக மிதந்த
ஒரு குளிர் மாலைப்பொழுது,
என்
நிழலான கடந்தகாலம்,
சாடாரெனக் குறுக்கிட்டு
கழுத்தில கத்தி வைச்சமாதிரி
ஒரே ஒரே கேள்வி கேட்டது!
திடுக்கிட்டு,
திமிராக அதுக்கு நான்
முதலில்
சிரித்து சமாளித்தேன்
,பிறகு
வழக்கம்போல மழுப்பினேன்,
பிறகு
தர்க்கரீதியா தர்க்கித்தேன்,
பிறகு
தெரிந்தே மனசாட்சியை
மறக்கடிசேன்,
பிறகு
தெரியாமல் விளக்கமா
விளக்கப்படுத்தினேன்
பிறகு
கடவுள் கண்மூடி விட்ட
பிழையெண்டேன்,
பிறகு
முற்பிறப்பு வினையெண்டு
முறுக்கினேன்,
பிறகு
வழியில்லாமல் விதியில
பழியப்போட்டேன்,
பிறகு
வெறுத்துப்போய் வெருட்டினேன்,
கடைசியில்
மடையனாகி,
மவுனமாகி மண்டியிட்டு
உண்மையை
ஒத்துக்கொண்டேன்!.

..............................................................


நெருக்கமான
மாலைநேர ஒஸ்லோ
சென்ட்ரல் ஸ்டேசன்
முதலாவது
நிலத்தடி ட்ரெயின்
வந்திறங்கிய
நிமிர்ந்து பார்க்க
நேரமில்லாதவர்களை
அவசரம்
இடது கோடியில் இருந்து
வலது கோடிக்கு தள்ளியது
அவர்கள் கடந்த
பாதையின் நடுவே,
உடைந்து போன
வாத்தியத்துடன்,
அதில்
அறுந்துபோன தந்திகள் தொங்க,
அழுக்கான
கிழிந்துபோன ஜக்கட்
சகிக்க முடியாத வாசத்துடன்
தலையைக் குனிந்துகொண்டு
இரண்டாவது
நிலத்தடி ட்ரெயின்
வந்திறங்கிய
நின்றுபார்க்க நேரமில்லாதவர்களை
அலங்கோலம்
வலது கோடியில் இருந்து
இடது கோடிக்கு தள்ளியது
கடந்த
விரைந்தவர்களின்
கவனிப்பில்
தலை குனிவதைத் தவிர
செய்வதுக்கு வேற
ஒண்டுமில்லை என்பதுபோலஅவன்
நான்
நிதானித்து
அவனுக்கு சில்லறை
எடுக்கமுன்
மூன்றாவது
நிலத்தடி ட்ரைன்னுக்குள்ள
என் மனசாட்சியை
இடிச்சு விழுத்திப்போட்டு
என்னை மட்டும்
தள்ளி ஏற்றியது  வாழ்க்கை !

...................................................................


ஒருநாள்
உருக்கமான சம்பவமொன்று
என் காலைப்பிடிச்சு
கண்ணீர்விட்டு,
அதன் அவலத்தைக்
கவிதையாக்கச் சொல்லி
சுருக்கமாக சொல்ல தொடங்க,
என் காதிரண்டும்
கழண்டு போயிட்டுது,
"எந்தக் கவிதையும்
இதுக்கு உயிர்கொடுக்க
முடியாதென்றேன்,"
சம்பவம் சடாரெண்டு
வலியுள்ள மொழியைத் தேர்ந்தெடு,
அதில்
பிழியவைக்கும்
வரிகளை வசனமாக்கு,
அதையே
கண்ணீரில் நனைத்து ,
கசப்பில் கரைத்து
பெருமூசில் காயவைத்து,
கோபத்தில் சூடாக்கி
அறுதியாக
நெஞ்சைத் திறந்து
மானத்தை விட்டு
எழுதடா மூதேசியெண்டு திட்ட,
அவமானம் தாங்காமல்
அதை
".ஒருநாள்
உருக்கமான சம்பவமொன்று
என் காலைப்பிடிச்சு
கண்ணீர்விட்டு....."
எண்டு
எழுதத் தொடங்க
முன்னமே
எழுத்தெல்லாம்
ஓடி ஒளிஞ்சிட்டுது!.

............................................................


நியாயத்
தீர்ப்பு நாளில்
பாவங்கள்
பட்டியலிடப்பட்டு,
மன்னிப்பு மறுக்கப்பட்டு,
நரகத்தின் முகவரிக்கு
கடைசியாகாக்
காத்திருந்தவர்களை
கண் திறந்து பார்க்க
கடவுள் வந்தார்
சந்தேகங்களில்
சந்தோசங்களை
தொலைத்தவர்கள்
கதறியழ,
விரும்பியே
சோரம் போனவர்கள்
விம்மியழ,
துணிந்தே
துரோகம்செயதவர்கள்
துக்கித்தழ,
அந்தப்
பெண்ணாகப்
பிறந்தவர்களுக்கு நடுவே
ஒருத்தி மட்டும்
விழுந்து விழுந்து
சிரித்துக்கொண்டிருந்தாள்...
படைத்துப் பார்த்த கடவுள்
காதருகே வந்து
காரணம் கேட்க
அவள் அப்பவும்
இளித்துக்கொண்டே
"விரும்பியே
மனதளவில்
சபலமானேன் " என்றாள்
குழம்பிப் போன கடவுள்
குனிந்து கேட்ட
" ........ ........ ...... ........."
என்ற கேள்விக்கு
"......... ......... ...... ............"
என்ற பதில் வரக்
கடவுளுக்கு
மூச்சு நிண்டு போச்சு!!!

................................................................


எப்பவுமே முடிகிறது
வளர்ந்தவர்களின்
முதிர்ந்த உலகத்தில்,
ஒரு சில நிமிடமாவது
ஒரு
சர்வாதிகாரியை
நிபந்தனையின்றி
சரணடைய வைக்க,
ஒரு
பணக்காரனை சிந்திக்க வைத்து
ஒன்றுமில்லாதவனாக்க,
ஒரு
ஏழையை ஒன்றும் இல்லாமலே
கோடிஸ்வரணாக்க,
ஒரு
நாத்திகனை நம்பவைத்து
ஆத்திகன் ஆக மாற்ற,
ஒரு
பாதகனை சில கணங்கள்
புனிதமான புத்தணாக்க,
ஒரு
அறியாமை அலங்கோலத்தை
அறியாமலே அழகாக்க,
ஒரு
இருட்டை சில நொடிகள்
சந்தோஷ வெளிச்சமாக்க ,
ஒரு
பிறப்பின் ரகசியத்தை
வழிப்படுத்தி வெளிப்படுத்த,
ஒரு
அன்பின் அடையாளத்தை
அர்த்தமுள்ளதாக்க,
ஒரு
சின்னக் குழந்தைகளின்
சின்னச் சிரிப்பால்
எப்பவுமே முடிகிறது.......

............................................................................

உங்களை நானோ,
என்னை நீங்களோ,
இப்பிறப்பில்
தற்செயலாகவும்
சந்திக்கப் போவதில்லை,
அப்படி இருக்க ,
மொழியிருந்தும்
வசனம் பேசாமல்,
விழியிருந்தும்
திரும்பிப் பார்க்காமல் ,
மனமிருந்தும்
சேர்த்து வைக்க
இடமில்லாமல்,
வெட்கத்தை
விட்டுச் சொன்னால்
நினைவிருந்தும்
கனவில்லாமல்,
அப்புறம்
எப்படி,
முழங்கினால்
மழை பெய்தும் ,
நெருப்பிருந்தால்
புகை கிளம்பியும் ,
அழுத பிள்ளை
பால் குடித்தும்
ஆக வேண்டும்,
என்று
அடித்துச் சொல்லுறீங்கள்?

...............................................................


இனிமேல்
கதைக்க போறதில்லை
என்று முடிவான
கசப்பான நிகழ்வை
அவன்
நேராக எழுதியபோது
எதுவுமே வரவில்லை
உணராமல்
எழுதிய போது
உரைநடை வந்தது
அதையே தர்க்கித்து எழுத
தத்துவம் வந்தது
கவலையா
எழுத தொடங்கவே
கண்ணீர்
அஞ்சலிபோல அழுதது,
புதுமையா ஜோசிக்க
புதுக்கவிதை பாய்ந்து
மரபோடு ஜோசிக்க
மரபுக் கவிதை மயங்கியது ,
முடிவாக
வேண்டுமென்றே உடைத்து
மனிதாபிமானத்தை
நிராகரித்து,
குற்றவுணவு இல்லமால் ,
குறுக்கு வழியில்
ஜோசிக்க,
சடார் எண்டு
அபத்தமான
சர் ரியலிஸ்டிக்
கவிதை வந்தது!
...............................................................................

ஒரு குளிர் கால
இருட்டு இரவில்,
ஒன்றுமே
எழுதாமல்,
பேசாமல் ,
உணராமல்,
பகிராமல் ,
நிர்ணயிக்காமல்,
ஒத்துக்கொள்ளாமல்,
சபிக்காமல்,
இயலாமையின்
இறுதிக்கணத்தில்
நடந்த
கடைசிப் பிரிவின்,
கசந்த வலிகளின்,
கடைசி வரிகளை,
நினைவுகொள்ளவே
நினைவு வருமா
என்ற
நம்பிக்கையில்லாத
சம்பவத்தை,
முடிந்தவரை
ஒரு கவிதையாக
எழுதச் சொல்லி
ஒரு
வெள்ளைப் பேப்பரும்,
ஒரு
கறுப்புப் பேனாவும்,
வருசங்களாய்
நம்பிக்கையோடு
காத்திருக்கிறது!




Friday 21 April 2017

நாடோடியின் நகரம் இரண்டாம் தொகுப்பு






நோர்வேயின் தலைநகரம்  ஒஸ்லோ ஒரு குஞ்சுண்டு  நகரம் ,அங்கே  வாசித்த காலத்தில் எழுதிய கவிதைகள் அலாதியானவை. அந்த நகரத்தின்  பிரத்தியேகங்களும் ,  சிசிலியாவின் வாசனையும் ,அனாமிக்காவின் சிந்தனைகளும், எப்போதும் மறப்பதுக்கில்லை. இப்போது சுவீடனில் ஸ்டோக்ஹோலாம் நகரத்தில் வசிக்கிறேன். நானொரு நாடோடி. என் சிந்தனைகள் காற்றைவிட சுதந்திரமானவை . அவை ஒவ்வொரு பொழுதில் உத்தரவாதமாக  இங்கிதம் தந்த உந்துதல்களால் பல வ்ருடங்கள் வார்த்தைகளையோடு முட்டி மோதியே  வாழ்ந்தே கடந்தேன்

பரபரப்பில்லாமல் உங்களுக்கு பிடித்தமானவரோடு கூடவே இருப்பது  போன்றது ஒரு  நகரத்தை  நாலுவிதமாக ரசிப்பது . சலிப்புக்கள்    எல்லாம் தாண்டி   சந்தோசமான  விசயங்கள் நிறைய இருக்கு ஒரு வாழ்கையில் என்று நாங்கள்  வாழுமிடம்  உத்தரவாதங்கள் தரலாம் .  இந்த உலகில் சந்தோசம் எங்கோ  பதுங்கி இருக்கு  என்பதை உணரும்போது நீங்கள் முழு மனிதராய் உணர்வீர்கள். உங்களுக்கும் இதுதான் தேவையாக இருக்கிறது. எனக்கும்தான் !

                                              ஒஸ்லோ ஒரு சின்ன நகரம். பழமையும் புதுமையும் அருகருகே ஒன்றுக்கு ஒன்று இடைஞ்சல் இல்லாமல் கிளிபோலப் பொஞ்சாதி  இருந்தாலும் குரங்குபோல  தொன்மையான அடையாளங்களை   வைப்பாட்டியாக  வைத்திருக்கும்  நளின நகரம். என்னோட மொபைல்போனில் அந்த நகரத்தை வேலைக்கு கடந்து போகும்போதும் வரும்போதும் கிளிக் செய்த படங்களை ஒவ்வொன்றாகப் போட்டுக் கவிதை எழுதியுள்ளேன் 

                                இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் போலவே  எழுதுவதுக்கு  இன்னமும் படங்களும் இடங்களும்  இருக்கு. ஒருவித சலிப்பில்  அதைப் படம் எடுப்பதையும் ,அதுக்கு கவிதை எழுதறேன் என்ற பிசத்தல்களை  ஒரு கட்டத்தில்  நிறுத்திவிட்டேன் . எதையுமே  அதிகமாய் எழுதினால் வாசிக்கும் உங்களுக்கும்  துன்பமாக இருக்கும். இல்லையா ?

                                                 சிலநேரம் இங்கே  என் மொபைல் போன்  மஹாலக்ஷ்மி எடுத்த   படங்களில் பிரமாண்டமாகப் பிரமிக்க வைத்தாலும் ஒஸ்லோ நோர்வேநாட்டுப் பெண்களின் கொடியிடை இடுப்புப் போல ஒரு அடக்கமான, அவர்களின் கண்கள்போலவே மையிட்ட கண்களில் மான் விளையாடும் நீலமான சின்ன நகரம்...


விரித்து வைக்கப்பட்டிருக்கும்
வானக் குடையின் கீழ்
அப்பாவியாக 
தனித்துக் கிடக்கிறது
ஒஸ்லோ நகரம்!

பகல்களையும்,
இரவுகளையும்,
பெளர்ணமிகளையும்,
உறைபனிக் குளிரையும்
தாண்டி
அணைக்கப்படாத
வெளிச்சத்தில்,
முடிவே இல்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
மனிதர்கள் ,

தவிர்க்க முடியாத
சல்லாபங்கள்,
தீர்க்க முடியாத
கணக்குகள்,
ஒத்துக்கொள்ளாத
தோல்விகள்,
கபடத்தனமான
வெற்றிகள்,
துரோகங்களின்
சாட்சிகள்

எல்லாமே
ஆவணமாக்கப்பட்டு
விரிக்கப்பட்டிருக்கும்
மனசாட்சியின்
கீழ்
குற்றவுனர்வோடு
தனித்துக் கிடக்கிறது
ஒஸ்லோ நகரம்!.



யூலை 22* கோடைநாளின்
பின்னேரம்
தனிப்பறவை ஒன்று
விட்டு விட்டு பாடல் ஒன்றை
சந்தோசமாக்கிக் கொண்டிருந்த
கருணையில்லாத
கடைசி நிமிடத்தில்,
வெடித்த அதிர்வின்
புகையடங்க முன்னரே,
இறந்தவர்கள் விழுந்த இடத்தை
சுற்றி இரத்தம் வட்டமிட்டது.
நான் நிற்குமிடத்தில்
அவர்கள்
விழுந்துகிடந்த இடத்தில்
உயிர் தடுமாற
இந்த மரங்களும்
பார்த்துக்கொண்டு இருந்தது.
அதன் பின்னர்
வெறிச்சோடிக் கிடந்த
வசந்தகாலத்தின் சாலைகளில்
வெள்ளைப் புறாக்கள் மட்டும்
பதடமில்லாமல் இருக்க ,
வந்தேறு குடிகளுக்கு எதிராக
தாறுமாறாய் தூசனத்தில்
கிறுக்கப்பட்டிருந்த
சுவர்களில்,
வழிந்து கொண்டிருந்தது
குடியேற்றத் துவேசம் !
தனிமையின் குளிரில்
வடதுருவக் காற்று
உத்தோயா* படுகொலைக்
கதைகளை சுமந்து
ஒப்பாரி பாடிய
ஒரு வாரத்தில்
இருந்து
இன்னொரு வருட
இடைவெளி வரை
அழுது வடிந்து
இறந்து பிறந்தது
ஒஸ்லோ நகரம் !

{ 2011 யூலை 22*- இந்த இடத்தில நடந்த அந்த குண்டு வெடிப்பு சமபவத்தில நானும் தப்பினேன், அன்ரிஸ் ப்ஜெர்விக் என்பவன் வெடிக்க நேரம்குறித்து விட்டுச்சென்ற சக்கைவான் வெடிக்க 8 பேர் கொல்லப்பட்டனர், அதே நாள் 2 மணிநேரத்தின் பின் உத்தோயா* என்ற தீவில் 69 இளம் " டீன்ஏஜ் " பிள்ளைகளை அதே அன்ரிஸ் ப்ஜெர்விக் துவக்கால சுட்டுக் கொன்றான்,கரணம் - இஸ்லாமோபோபியா என்ற இனமான மனவருத்தம்!}





யாரும் களவாட முடியாத
தனிமையும் கூட
பறவைகளை
அலுக்காமல்
அன்போடுதான் 
அரவணைக்கிறது

வண்ணங்களற்ற
சிறகுகளுடன்
வந்திறங்கும்
அவைகளின் குஞ்சுகள்
மீதும் ஆரம்பத்திலேயே
உயிர் நம்பிக்கையைப்
பூசிவிடுகின்றது....
சுற்றி நடக்கும்
மனிதர்களால்
அச்சமும் தயக்கமும் 
தெளிக்கப்படுகின்ற
நேரத்திலும்
நம்பிக்கைகளை
வாரி நாலுபக்கதுக்கும்
வழங்கிக்கொண்டேயிருக்கிறது
இரவெல்லாம்
அயராமல்
மெல்லிய ஒளியின்
விளிம்பு தெரியாத
கரையைத் தாலாட்டித்
துயரத்தைத்
துடைத்தெறிந்து
தூங்க வைக்கிறது....
நடு இரவில்
வெள்ளிகள் எண்னும்
மெலிதான நுரை அலை
பகலெல்லாம்
அணிந்துகொண்டிருக்கு
மேகம் வீசிய
நீலநிறச் சேலையை
பக்கச்சார்பற்ற
ஒரேயொரு
வெளிச்சமான தினம்
என்னைப் போலவே 
கொஞ்சம் நின்று பாருங்கள்
பறவைகளுக்கும்
ஏரிக்கரைக்கும்
மனதோட உறவான
உயிர் வாழ்தலின்
ரகசியத்தை
பிரஸ்தாபித்துவிடும்
ஆத்மா .

ஒரு வரியில்க் 
கவிதைக்கான 
சாத்தியங்கள் 
பெருவாரியாகச் 
சுற்றி வளைக்கும் 
ஒரு பழைய நகரத்தின்
பழைய பாதை வழியில்
வரலாறு நின்றுவிடுகிறது

வெய்யில் பிழியும்
மனிதர்களின்
வியர்வை வாசத்தில்
பெண்களின்
பிரத்தியேக வாசம்
சித்திரைக் காற்றை
ஈரமாக்குகிறது.....

இரவெல்லாம்
சிரித்தும் அழுதும்
களைத்துப்போன
நடைபாதைகளை
கவனமாக மிதித்துக்கொண்டே
உலாவவேண்டி நினையுங்கள்

வலி சுமந்த
மனிதர்களின்
கதைகளைக்
கேட்டுக்கொண்டு
நிழல் போல
அதிராமல்
எனது கால்த் தடம்
வழியெங்கும்
பதிந்துகொண்டேகிறது.....

நடக்க நடக்க
சிந்தனைகள்
தெளிவாகுமென்பது
தெரியும் மட்டும்
வலிக்கட்டும்....

எனது சுவடுகள்
இன்னோருவரின்
துன்பத்தின்
தாள கதியில்
இணைத்து அதிருமாயின்
இன்னுமின்னும்
பல மைல் தூரத்திற்கு
நடக்கலாம்..

எனக்கும்
என் முதுகுக்கும்
நன்றாகத் தெரியும்
பிழைக்கத்தெரியாத முட்டாளென்று
நீங்கள் ...
இயலாமையுடன்
பொருத்திப்பேசுவது

நான்
பார்க்கும் உலகம்
என்மண்ணில் விடுபட்டுப்போன
ஆத்மாவை உசுப்புகிறது
அதன்
அதிர்வலைகள்
உறைபனி நாட்டிலும்
வேப்பம்பூக்களை உலுப்புகிறது

அறியப்படாத
மூளை ஒரத்தில்
அலட்சியமாக
துருப்பிடித்திருந்த
எழுத்து
ஜன்னல்களைத்
அகலத் திறந்துவிடுகிறது

மழுங்கிக்கொண்டிக்கும்
தாய்மொழியின்
முனையை
கவிதையிலும்
கதையிலும்
உரசி உரசியே
பட்டைதீட்டுகிறேன்

முடிந்தவரை
கிளை கொம்புகள்
கொடியில்
பற்றிப்பிடித்துப் பேச
கைப்பிடித்து
திரும்பமுடியாத
விடிவெள்ளியின் திசையில்
அழைத்துச்செல்கிறேன்

இதற்காகத்தான்
தாகமெடுக்கும்
அற்புதமான தருணங்களிலும்
நேரத்தைக்
கடத்திக்கொண்டுபோய்க்
காவுகொடுத்து
எழுதிக்கொண்டேயிருக்கிறேன்
என்பதை மட்டும்
உறுதியாகச் சொல்கிறேன்.

.


ஆளுமைப்படுத்தும்
சின்ன அசைவுகளில்
தொடர்ச்சியாக
முரண்பட்டுக்கொண்டிருக்கும்
மைய நகரம்...
நகர்ந்துகொண்டிருந்தது
இதயவடிவில்
மலர்வளையங்கள் போலவே
அதன் நளினங்கள்
பின்தொடர்ந்துகொண்டிருக்க
கடவை விளக்குகள்
நிமிடத்தில் பாதியாகி
நிறம் மாறுகின்றது
தொட்டுப் பார்க்க
இடம் கொடுக்காத
குளிரை
முகத்திலறைந்துகொண்டு
மனிதர்கள்
குறுக்கமறுக்க கடந்து
நேற்றுத் தொலைத்த அவசரத்தை
இன்றும்தேடுகிறார்கள்
நான் நிற்குமிடமும்
நிராகரிக்க முடியாமல்
அதுவேதான்
ஒருசமயம்
வியப்புக் கொடுக்கும்
எல்லாக் காட்சிகளுமே
ஆழப்பதிந்து
குத்தி
உள்ளிறங்குவதில்லை
மறுசமயம்
உரையாடல் மனதில்
வார்த்தைகள்
தேடினாலும்கிடைப்பதில்லை
பிறகேன் கழுதை
அர்த்தமின்மையை
வரவேற்க யாருமில்லாத
சந்திவளைவில்
நின்று
சப்பாத்துக் கால்களைப்
பார்த்துக்கொண்டிருகிறாய்?
என்கிறது ஆத்மா.





நட்சத்திரங்களற்ற
நவீன நகரம்
வீம்புக்குக் குந்தியிருக்கும்
கும்மிருட்டு
வண்ணாத்திப்பூச்சியைத்...
திரத்தும் வெய்யில்
அலகு தீட்டும்
மொர்க்கோ பார்வை
வளைக்காப்புப் போட்ட
பேர்ச் மரங்கள்
வெள்ளைச் சருகில்
உறங்கும் உறைபனி
வெளிச்சங்களின் விலாசம்
சொங்ஸ்வான் ஏரிக்கரை
விம்மிக் கொண்டிருக்கும்
ஹோல்மன் குன்றுகள்
நச்சென்று குட்டும்
நடை பாதைகள்
நெளிப்புக்காட்டி ஓடும்
ஆர்கிஸ்எல்வா நதி
வயதில் பக்குவப்பட்ட
பைன் மரவீடுகள்
கடவுளின் மொழிபேசும்
வெள்ளைக் குழந்தைகள்
அவன்,அவள்,அது
இதெல்லாம்
நான்
பார்க்க மறந்தாலும்
ஒரு செக்கன் நிக்கவைத்து
தான்
பார்த்து ரசிப்பாள்
என்
மகாலக்ஸ்மி கலக்சி.


கால்களை
சில்லென்று நனைத்தபோது
தண்ணியில்...
மிகத்தெளிவாக
வழுக்குப் பாறைகள்
தெரிந்தது

என்
அளவுக்கதிகமான
மவுனம்
சருகுகளை மிதித்து
நடந்துகொண்டிருந்தவர்களின்
இரைச்சல்களுக்கு
இடைஞ்சலாக
இருந்திருக்கலாம்

நானே
ஒருகட்டத்தில்
ஓவெண்டு குரலெடுத்துக்
கத்த நினைத்தேன்
பார்வை இழந்தவனுக்கு
திசைகாட்டிகள்
உதவாதே

என் சத்தம்
என் குரல்வளையைவிட்டு
வெகுதூரம்
இறங்கிப்போய்விட்டதென்பதை
கிறங்கிக்கிடக்கும்
கரைகளில்
பறவைகளின் கும்மாளம்
தெளியவைத்தது.

முடிக்கப்படாத
பிரச்னைகளில் தான்
நேற்றுக்கும்,
நாளைக்கும்
அர்த்தமிருக்குது போலிருக்கு...



முடிக்கப்படாத
பிரச்னைகளில் தான்
நேற்றுக்கும்,
நாளைக்கும்
அர்த்தமிருக்குது போலிருக்கு...


நம்பமுடியாதவாறு
பின் வந்துதொடரும்
அனுபவத்தோடு
முரண்டுபிடிக்க விரும்பாமல்
என்பாட்டில்
போக எத்தனித்தேன்

பச்சை விளக்கை
நிறுத்த அவதியாகி
மஞ்சளில் கடக்க நினைத்தவன்
சறுக்கினான்

மூக்கு அழகான
கிழக்கு ஐரோப்பியப் பெண்
ஒவ்வொருவரிடமும்
பிச்சை கேட்டாள்

வெறித்து பார்த்த
ஜன்னலிலிருந்து
ஒருவன்
இருமித் துப்பிக்கொண்டிருந்தான்

பாதைக்குக் குறுக்காக
போலீஸ்காரன்
வெறித்துப்பார்க்கும் பார்வையில்
துவேஷத் தூவானம்

தோல்வியைப் பாடும்
தெருப்பாடகனின்
பூனைக் கண்களில்
நம்பிக்கை

பிரத்தியேக வாசனையோடு
கும்பலாகப் கடக்கும்
பதின்வயதினரிடம்
பொறுப்பற்ற சிரிப்பு.

புகைபிடிக்க
குடிவரவுக் கட்டிடடத்துக்கு
முன்னால் நின்ற
நிறைவேற்று அதிகாரி
என்னைவிட அகதிபோலிருந்தார்

என்னைச் சுற்றி
எனக்குத் தேவையான எதுவுமே
நடக்காததுபோல
ஒடுக்கமாக
நழுவிக்கொண்டிருக்கிறேன்.








காற்றுக்கு இன்று
என்னவிதமான
மனநிலையென்று தெரியவில்லை
வழமையாக எப்போதும்
எனக்காகத்...
தனியாக நுழைந்துவிடும்
அந்தத் தனிப்பறவையை
கூட்டத்திலிருந்து
வேறுபடுத்த முடியவில்லை

யாரோவொருவர்
வீசி எறியும்
உதிரி உணவுகளுக்குள்
அதன்
குரலாவது இருக்குமென்று
தேடிக் களைத்து விட்டேன்

ஒன்று போலவேயுள்ள
இறக்கைகள்
ஒவ்வொன்றும்
முட்டி மோதிக்கொள்ளாமல்
ஒரு மிருதுவான
தனியுலகத்தை
தங்களுக்குள்
உருவாக்கிக்கொள்ள

நான்
எரிக்கரையின் விஸ்தீரணத்தை
இன்னும் கொஞ்சம்
அகலமாக விரிக்க
அலைகளை சம்மதிக்க வைத்து
ஒதுக்கித் தள்ளமுடியாமல்
அதிலும்
தோற்றுப்போனேன்...