Thursday 19 May 2016

உதிரிப்பூக்கள்....

காலம்  ஒரு  நதிபோல .அது ஓடிக்கொண்டேயிருக்கும் . அதன் கரைகளில் நிறைய சம்பவங்கள் நடந்தாலும் எல்லாவற்றிலும் கதைகள் ஒரு அடியாழத்தில் சலசலப்பு இல்லாமல் இருக்கலாம். அதை என் உள்ளே இறங்கி வெளியே எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கும் ஒரு சின்ன நினைவு பலசமயங்களில் சிலவற்றை எழுதிவிட உற்சாகம் கொடுக்கும் .
                                                        
                                                   எங்கள்  ஊரில்  சின்னவயசில நான் மாலை கட்டுவேன், எங்கள் வீட்டுக்கு முன்னால  வசித்த என் வயதுள்ள ஒரு பெண் ,எப்படி வாழை நாரில , மலர்களை அசங்காமல் , கசங்காமல் அடுக்கி , மலர்களின் நிறங்களை வேறுபடுத்தி, இடை இடையே பச்சை இலைகளை வைத்து , கடைசியில கொத்தாக மலர்களை இணைத்து குஞ்சரம் போல  தொங்கவிட்டு  எப்படி மாலை கட்டுவது எண்டு,  அந்த வித்தையை எனக்கு காட்டித் தந்தா  !                                                   

                                            அதலா என்னோட அம்மா ஊருக்குள்ள அயல் அட்டையில் நடக்கும் சாமத்திய வீடுகளுக்கு ,கலியான வீடுகளுக்கு,  "என்னோட மகன் நல்லா மாலை கட்டுவான் " எண்டு சொல்லுறது மட்டுமில்லை, மாலை ஓடரும் எடுத்துக்கொண்டு வருவா! நான் பூ எல்லாம் புடுங்கமாட்டன் எண்டு அவாவுக்கு தெரியும், அதால அவாவே ஒரு கூடையை எடுத்துக்கொண்டு வீடு வீடாப் போய் ,சுவரிலையும் ,வேலியிலையும் தொங்கி தொங்கி பூ எல்லாம் புடுங்கி கொண்டு வந்து தருவா மாலை கட்டசொல்லி, நான் முதலில் எல்லாப் பூகளையும் முகர்ந்து பார்த்து , அவைகளின் அழகை கொஞ்சம் ரசித்துப் பார்த்து, அப்புறமா மாலை கட்ட தொடங்குவேன்!                                       

                                      நான்  முக்கியமா சாமத்திய வீட்டுக்கு ஸ்பெசலா "ஆண்டாள் மாலை" கட்டுவேன். கலியான வீட்டுக்கு மணமகளுக்கு சடைநாகம் , மணமகன் மாங்கல்ய மாலை , சரஸ்வதிப் பூசைக்கு  வாடா மல்லிகையில்   சின்ன மாலை , கோவில் திருவிழாவுக்கு போகும் தாவணி போட்ட இளம்  பெண்களின் கூந்தலுக்கு கனகாம்பர ஒற்றைச் சர மாலை, இப்படி  எனக்கு  பிடித்த மாதிரி கட்டுவேன்.

                                       தொழில் ரீதியாகவோ, கோவில்களில்  முறைப்படி  கட்டுபவர்கள் போலவோ  எல்லாம்  கட்டுவது  இல்லை. ஆனால் அயலட்டையில் தரமாக  இருக்கு  என்று சொல்வார்கள் அதைவிட  அதை  எல்லாம் ஓசியில் தான் கட்டிக்கொடுப்பேன்,ஆனால் மாலையில் விதம் விதமான பூக்களை "colour combination" இல் கற்பனையில் இணைப்பதில் ஒரு " த்ரில் "இருந்ததால்,எனக்கும் அதில நல்ல விருப்பம், வெளிநாடுக்கு புலன் பெயர்ந்தபின் ஒரு நாளும் சந்தர்பம் கிடைக்கவில்லை மாலை கட்ட!                           

                                          பல வருடம் முன் ஒரு நாள் ஸ்வீடனில் நான் வசித்த சிட்டியிடில் இருக்கும் பாரிய கடைத்தொகுதி அங்காடியில் இருந்த மலர்கள் விக்கும் கடையின் முன் ஒரு போட்டி வைத்தார்கள், வேறு பல பூ கடைகளில் வேலை செய்யும் இளம் பெண்கள் தங்கள் " பூ அலங்கரிப்பு திறமைய " காட்டும் ஒரு நிகழ்வு அது, வாசமில்லாத, வாசமுள்ள  பலவண்ண நிற மலர்கள் குவிந்து இருக்க அந்தக் கடையே மலர்த் தோட்டத்துக்கு நடுவில் இருப்பது போலிருந்தது  

                                     நான் அதை தற்செயலாக  கடந்து போகும் போது அவர்கள் அலங்கரிப்பு செய்த மேசையின் கீழே நிறையப் பூக்கள், உதிரிப்பூக்கள் போல சிதறிக் கிடந்தன. நிராகரித்த அந்த மலர்களைப் பார்க்கப் பாவமாய் இருக்க , கொஞ்சம் தயங்கி , ஸ்வீடிஷ் மொழியில்  

                                 ",நான் அவைகளை எடுத்து மாலை கட்டவா, நீங்கள்  பாவிக்காத ,அல்லது  நிராகதித்த மலர்களை  எடுத்து  எங்கள் நாட்டு ஸ்டைலில் ஒரு அலங்கரிப்பு செய்யவா  ?"

                                                எண்டு அந்தப் பெண்களிடம் கேட்டேன், அவர்களுக்கு நான் என்ன சொன்னேன் எண்டு விளங்கவில்லை

                                        " ,  மாலையா , அப்படி எண்டால் என்ன ,,,ங்க்  , .. கீழ  கிடக்கும் பூக்களில் அதென்ன மாலை ...அங்க்...நாங்க கேள்விப்பட்டதே இல்லையே ..."

                           " அதுவும்  நீங்கள் மலர்களில் செய்வது போன்ற ஒரு அலங்காரம் தான் ,"
                                     
                                  "அப்படியா,,எங்கே  சரி  செய்து காட்டேன் ,நாங்களும் அறிந்து கொள்கிறோம் "
                                           
                                      " ம்ம்,,,பார்க்கலாம்,,மாலை  கட்ட  வாழை  நார் தேவை,,அதுதான் ஜோசிக்கிறேன் "
                                         
                                  " வாழை  நார்,,,,ஹ்ம்ம்,,அது  என்ன,,,எங்களிடம்  அப்படி  ஒன்றுமே இல்லையே "
                                             
                                 "  ஓகே, தென்னாலிராமனின்  குதிரை கனவில  சாணி போட்ட மாதிரி  ஒரு  ஐடியா  வருகுது "
                                     
                               " ஹ்ம்ம், மாலை,,,வாழை  நார்,,,,தென்னாலி ராமனின்  குதிரை.... என்னவோ  சொல்லுறாய்,, ஒண்டுமே  புரியவில்லை "

                               எண்டு மண்டைய சொறிஞ்சார்கள்! நான் வாழை நாருக்குப் பதிலாக ஒரு உடுப்பு தைக்கிற " ட்வைன் " நூலை , அவர்கள் பார்சல் கட்ட வைத்திருந்த மேசையில் இருந்து  உருவி எடுத்து, முதலில் ஒரு சின்ன மாலை கட்டதான் தொடங்கினேன் கடைசியில் அவர்களே நெறைய பெரிய பூக்கள்  கொண்டு வந்து தர அந்த  உதிரிப்  பூக்களையும் ,உதிராத அர்ச்சனைப் பூக்களையும்  எல்லாம் இணைத்து ஒரு ஆண்டாள் மாலையே கட்டி முடித்தேன்.

                                        திருச்சபை ஏறிடும் அருச்சனை மலர்களை இணைத்து மாலை கட்டிக்கொண்டு இருந்த போது அந்தப் பெண்கள் எல்லாரும் நான் எப்படிக் கட்டுறேன் எண்டு கவனமாகப்பார்க்க, சில பார்வையாளர்கள் ",க்ளிக் கிளிக் " எண்டு அவர்கள் வைத்திருந்த கமராவில் படம் வேற கிளிக்கினார்கள், உலகத்தில் மிகவும் மொடேர்ன் சயன்ஸ் தொழில் நுட்பம் முன்னேறிய அந்த சுவீடன் நாட்டு மக்கள் ஒரு மாலையில் ஆச்சரியமாகி  ,அவர்களே மரியாதையாக  மாலை பற்றிய பல விவரங்களை என்னிடம் இருந்து முடிந்தளவு கேட்டார்கள் !

                                                உலகம் எவளவுதான்  இயந்திரங்களில்  நுட்பமாக முன்னேறினாலும் ஒருவன் கையால வெறும் பூக்களை வைத்துக்கொண்டு ஒரு வித்தை காட்டுவதை சுவிடிஷ் மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கவனிக்கத் தொடங்க நானும் மாலை கட்டுவது என்னவோ தேவலோக கைவினை இரகசியம் போல பல விதங்களின் கையைப் போட்டு வளைச்சு எடுத்து அவர்களின் காதில பூ சுற்றினேன் .

                                        மாலை  கட்டுவதில்  உள்ள டெக்னிக் உண்மையில்  ரெண்டு வாழை நார் பூவைக்  கொழுவிக் கொண்டு வளைந்து வளைந்து போவது . அதில்  நிலையான வாழை  நாரை  பிடிக்கும்  கோணம், அதில் பூவை  வைக்கும்  கோணம், வைத்து ரெண்டாவது  வாழை நாரை சுற்றி எடுக்கும் விதம் இதுதான்  சிம்பிளாக  மாலையாகும். ஆனால் எவளவுதான் அதை உலுப்பினாலும் அந்த நார் சுற்றிய  விதமான இணைப்புக்கள் பூக்களைக் கழண்டு போக விடாது . 

                                          பாடிப்  பாடிக் கட்டி முடிந்த ஆண்டாள் மாலையை என்ன செய்வது எண்டு ஜோசிக்கும் போது, அந்தப் பூ கடையில வேலை செய்த ஆண்டாள் போலவே இருந்த ஒரு வெள்ளைப் பெண் என்னிடம் வந்து 

                                       " இந்த மாலை பெண்கள் அணித்து இருப்பதை இந்தியா பற்றி பார்த்த ஒரு டாகுமெண்டில் பார்த்தேன் ,உங்கள் நாடில் மாலை கட்டிப் பெண்களுக்கா போடுவார்கள்? இதுக்கு என்ன அர்த்தம்?" 

                                        எண்டு கேட்டாள் . நான்

                                        " முதலில் நான் இந்தியாவைச் சேர்ந்தவன் இல்லை, வடக்கு ஸ்ரீ லங்காவில் இருந்து வந்த தமிழன் , ஆனாலும் தெற்கு இந்தியா மாநிலங்களில் வசிப்பவர்களும் என்னைப் போல இருப்பார்கள், எங்களின் இந்து சமய நம்பிக்கையில் இந்த ஆண்டாள் மாலையை அணிந்து கொண்டு ஆண்டாள் என்ற பெண் , நீலநிறக் கிருஷ்னருக்காக காத்திருந்தா,"

                                       என்றேன். 

                                             " அப்படியா எனக்கு சிறிலங்கா ,இந்தியா எல்லாம் ஒன்டுபோல தான் தெரிகிறதே, அந்தக் கிருஷ்ணர் , ஆண்டாளின் பாய் பிரெண்டா ?"

                                       என்றாள் . பாய் பிரென்ட் என்று  சொல்லும்போது அவள் கண்களில் ஜன்னல் திறந்தது 

                                         "ஒரு வகையில் அப்படிதான் ! அவருக்கு ஏகப்பட்ட் கோபிய கேர்ள் பிரண்ட் கோகுலம் எண்ட அவரோட நந்த வனத்தில இருந்தார்கள் "

                                          "  என்னது   ஏகப்பட்ட  கேர்ல்ஸ் பிரெண்டா "
                                   
 "   ஆமாப்பா,,,அப்படிதான்  சொல்லுவார்கள்,,அந்தக்  கண்ணன்  ஒரு மாய லீலைக் கண்ணன் பா "
                                       
                           " மாய லீலைக் கண்ணன்... அப்படி  என்றால்  என்ன "
                                     
                                  "  அதுதான் ,,நீங்க  சொல்லுறிங்களே  வுமனைசர்  என்று,,அப்படி  ஒரு  கில்லாடி "
                                       
                                     " அப்படியா,,ஆனாலும்  அவளவு  கேர்ல்ஸ் பிரெண்ட்ஸ் ஐ  சமாளிக்க தனித் திறமை  வேணும் பா,"
                                       
                                  "  அதெல்லாம்  அவருக்கு  பிறக்கும்போதே கூடவே பிறந்த சொல்லிக் கொடுக்கத் தேவையில்லாத  கலை "
                                         
                                          "  அதெப்படி சொல்லுறாய் "
                                       
                                     "  கிருஷ்ணன் குழந்தையாக இருக்கும் போதே மின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து மன்னவன் போல் லீலை  செய்த மாயவன் "
                             
                                           "  அப்படியா ,,சின்னக்  குழந்தை அழகாய் இருந்து  இருக்கும்,,அது கன்னிப்  பெண்களுக்கு  ஒருவித  அன்பான ஆசையைக்  கிளப்பி இருக்கும் "
                                     
                                  "   ஹ்ம்ம்,, கிருஸ்ணனின்  பின்னழகைப்  பார்த்து  போதை முத்தம் கேட்கவே கன்னிகள் அலைந்தார்கள்  "
                                       
                                           " அப்படியா,,நீ ஒண்டும்  அப்படி அலையிற  ஆள் இல்லைதானே ,பார்க்க  அநியாயத்துக்கு அப்பாவி  போல தெரியிறாய் "
                                         
                                   "  ஹ்ம்ம்,,கிருஷ்ணர்  பரமாத்மா  ,,நான்  ஜீவாத்மா ,,எல்லா  விதத்திலும்  சாதாரணமானவன்   "
                                                   
                                           என்றேன் ! அவள் கொஞ்சம் ஜோசித்தாள். பிறகு  சிரிச்சாள் . இளம் பெண்கள் சிரித்தால் அவர்களின் தற்பாதுகாப்பு அதி உயர் பாதுக்காப்பு வலயத்தை விட்டு கொஞ்சம் வெளியே வருகிறார்கள் என்று அர்த்தம், அதை  நழுவ விடாமல் மெதுவாக , அவளுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ,

                                         " இப்படி ஆண்டாள் மாலை போட்டால் கிருஸ்னர் போல நீல நிற ஆண்கள் கணவனாக வருவார்களாம் எண்டு எங்கள் ஹிந்து சமய  இதிகாசம்களில் உள்ளது " 

                                         என்றேன்..அவளுக்கு  கண்கள் இப்ப அரண்மனைக் கதவே தாழ் திறந்த மாதிரி விரிய 

                                         " ஒ அப்படியா , நாலு அஞ்சு பூவை  வைச்சு  இந்த நூலில்  அழகாக இணைத்துக்    கட்டி இதுக்குப்  பின்னணியில்  ஒரு  ரொமான்ஸ்  கதை  வேற  சொல்லுறியே ,,உண்மையில்  வெரி இன்றேச்டிங்கா இருக்கே" 

                             என்றாள், சிறிது நேரத்தில் அப்பாவியா  

                                  "உனக்கு  ஆட்சேபனை இல்லை என்றால் , இதை உனக்குப் போடவா?" 

                      எண்டேன் அவள் கன்னம் இரண்டும் தார்பூசணி போல சிவக்க,

                                        "ஒ , நான் தான் நீ சொல்லும் ஹிந்து சமயம் சார்ந்தவள் இல்லையே,, சிரிப்பு என்னவென்றால் நானே என்ன சமயம் சார்ந்தவள் எண்டும் எனக்கு இன்றைவரை தெரியாது,  எப்படியோ நான்தான் யாருக்காகவும் காத்திருக்கவில்லையே, என்றாலும் நீ விரும்பினால்ப்  போடு "  

                               எண்டு சொல்லி முடிக்கமுன் நான், மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன கேதுனா ,சந்தே பத்னாதிதம் ..எண்டு சொல்லி  அவளுக்கு அந்த ஆண்டாள் மாலைப்போடஅவள் அணில்குஞ்சு போல சுருங்கி , ஒவ்வையார் போல  வாய் முழுவதும்  சிரித்து, தாஸ்மேனியன்  அப்பிள் போல  கன்னத்தில்   சிவந்தாள் , நானும் படார் எண்டு ,

                                   " எங்கள் நாட்டில் மாலை போட்ட பெண் மாலை சூடியவனுக்கே சொந்த என்றேன்", 

                                   அவள் திடுக்கிட்டு ஜோசிதுப்போட்டு ,

                                          "அதுக்கென்ன ,எனக்கு கிருஷ்ணர் போல நீலநிற ஆண்கள் எல்லாம் வேண்டாம், உன்னைப்போல பிரவுன் நிறத்தில ஒரு  ஆண் கிடைத்தாலே போதும் "
                                  என்றாள் ! மறுபடியும் ,மெதுவாக , அவளுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ,

                                             " எங்கள் நாட்டில் திருமணத்தில் ஆணும்,பெண்ணும் மாறி மாறி மாலை மாற்றுவார்கள்" 

                                  என்றேன், அதுக்கு அவள்

                                    "இந்தியாவில் யானைகள் எல்லாம் திருமணவீட்டில கொண்டு வந்து கலாய்ப்பதையும் ஒரு டிஸ்கவரி tv  டாகுமெண்டில் பார்த்தேன் " 

                                   என்றாள்  ,

                                          " எனக்கெல்லாம் யானை கொண்டுவர வசதி இல்லை,வேண்டுமென்றால் இரண்டு பூனை பிடிச்சு கொண்டுவரலாம் "

                                       " ஹஹஹஹா,     பூனை   அது  என்னோட  வீட்டிலேயே ரெண்டு இருக்கே,,நான் தான்  வளர்க்கிறேன் "
                                   
                                    " ஹ்ம்ம்,,இப்பிடியே  மாலையோடு சேர்த்து  படம் எடுப்பமா,,உன்னோட வேலை செய்யும்   நண்பியைப் படம்  எடுக்கச் சொல்லுறியா "
                               
                                         "   ஹ்ம்ம்,, ஹன்னா  நல்லா படம் எடுப்பாள்,,நான்  வரச் சொல்லுறேன் ,"
                             
                                             "  ஆண்டாள் மாலையில்  நீ திருச்சூர்  பூரம்  திருநாளுக்குப்  போன சந்திரமுகி போல இருக்கிறாய் "
                                 
                                                " என்னவோ எல்லாம் சொல்லுறாய்,,ஒன்றுமே  புரியவில்லை ,,ஆனால்  என்னைப்  புகழ்ந்துதான் சொல்லுறாய் என்று தெரிகிறது "
                                 
                                           "  ஹ்ம்ம்,,,அப்படிதான்  சொல்லுறேன்,,உன்னோட  முகத்துக்கு  இது  அப்படி அம்சமா பொருந்துது ,, "
                                   
                                             " ஹ்ம்ம் ,  எனக்கு  இந்தப் படம் கட்டாயம்  வேணும் ,நான்  போன  பிறப்பில்  இந்தியாவில்  பிறந்து இருக்க வேண்டும்  போல ,"
                                   
                                               " வேண்டுமென்றால்  இந்த மாலையைக்  கட்டினவனையும்  அப்படியே கட்டி எடுத்துக்கொள் "
                                 
                                              "   ஹஹஹா,,  என்னோட  உணர்வுகள்  இப்ப என்ன தெரியுமா,"
                                 
                                         "      ஹ்ம்ம்,,நீயே  சொல்லு  "
                                 
                                           "  ஒரு    மாலையோடு  ஒரு  முழுமையான கலியாணமே  கட்டின  மாதிரி  இருக்கு "
                                     
                                          "  ஹ்ம்ம்,,எனக்கும்  ஒரு  மாலையை  வைச்சு  உனக்குக் மலையாளக் கந்தர்வன்  நாட்சார்  வீட்டில கலியாணம்  நடுராத்திரியில் காட்டின  கதை  மாதிரி  இருக்கு, உனக்கு  மாலை  போட்டது    "

                    " அதென்ன   மலையாளக் கந்தர்வன்  நாட்சார்  வீட்டில கலியாணம்  நடுராத்திரியில் காட்டின  கதை,,சொல்லு  ,,சுவாரசியமா இருக்கும் "

                                "  கந்தர்வன்   நடுச்  சாமம்  அழகிய  இளம்  பெண்களை  மயக்குவான்,,,ஒருநாள்  .....திருவனந்தபுரதில்....................    ஒரு  அழகிய  இளம்  பெண்  ..................அவளோட  வயதான  பாட்டியுடன்  வசித்து  வந்த நேரம் ..................................... ஒரு கந்தர்வன்  .....................   பாட்டியை  எழுப்பி ,,,,,,,,,,,,,,,,  அந்த  இளம்பெண் ....................அதிகாலை  முழித்துப்பார்க்க..................அழகான  குழந்தை.................  "
                 
                                         என்றேன் ,விழுந்து விழுந்து சிரித்து என்னை இறுக்கக் கட்டிப் பிடிக்க,  அவளோட வேலை செய்த ஹன்னா  வந்து  அவளோட  ஒலிம்பஸ்   கமராவில்  ,  அவளையும், அவள் போட்டிருந்த ஆண்டாள் மாலையையும்,  அருகில்  என்னையும் சேர்த்து " க்ளோசப்பில " படம் எடுத்தாள்! பல பெண்கள் என்னோட படமெடுக்க விரும்பினார்கள். நான் ஏகபத்தினி விரதன் ஸ்ரீ இராமன்  போல ஆண்டாளோடு மட்டுமே  படம் எடுத்தேன் .
                                             
                                           அந்த ஆண்டாள்  படத்துக்கு தலைமயிரை மாதவிப் பொன் மயிலாள் பொன்னிறத்  தோகை விரித்தாள்  மாதிரி பிரித்துப் பிரித்து அலைபாயவிட்டிருந்தாள் . படமெடுக்க வந்த ஹன்னா சின்னதாக இருந்தாள். தானும் அந்த ஆண்டாள் மாலையைப் போட்டுப் படமெடுக்க விரும்புவதாகச் சொன்னாள் , நான் அதை ஒரே முகூர்த்த கலியான மேடையில் அக்காவுக்கும்  தங்கச்சிக்கும் ரெண்டு கலியாணம் போல  அவளுக்கும் போட்டேன் , அவள் திரிபுரசுந்தரி போல சிரிச்சுக்கொண்டிருந்தாள்
                                           
                                                எப்படியோ  அந்த  நேரம்  அந்தப் படம் பற்றி சொல்ல  எதுவுமேயில்லை . பார்க்க கல்யானமான புது  மாப்பிளை பொம்பிளை வாழைப் பழத்தில திரி செருகிய  மஞ்சள் தட்டில் ஆலாத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைச்ச மாதிரி   வந்திருக்கலாம்  என்று  நினைச்சேன். ஒரு சின்ன சந்திப்பில் சில மணி நேர இடைவெளியில்  உதிரிப்பூக்கள் மாலையாகி ஒரு சுவிடிஷ்  பொன்னிற  மேனி மங்கையின் கழுத்தில் விழுந்த சம்பவம்  அவளவுதான் .                              
                                 
                                            அதுக்குப் பிறகு நான் நோர்வே வந்துவிட்டேன் ! பல வருடங்களின் பின் அண்மையில் மருபடியும் ஸ்வீடன் போனபோது அந்த நிகழ்வு நினைவுவர அந்தப் பூக் கடையிட்கு வெளியேபோய் வேடிக்கை பார்த்தேன்,முக்கியமா ஒரு மாலையை வைச்சு சில நிமிடங்கள் கலியாணம் கட்டின அந்த ஆண்டாளை தேடினேன் , கண்ணன்மீது காதல் கொண்டு மானிடக் காதலைத் தெய்வீகக் காதலாக மாற்றி " ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சங்கம் உதைத்த சரமழை ..." போல் சில்லறை எறிந்த மாதிரிச் சிரித்து, நீலக் கண்களால் மொழி பேசிய  திருப்பாவை போன்ற அவள் இல்லை! 

                                                    வேறு பல புது ஆண்டாள்கள்  வேலை செய்தார்கள் ,கடையை கொஞ்சம் நோட்டம் விட்டுப பார்க்க, அந்த கடையின் ஒரு மூலையில் நானும்,ஆண்டாளும் ,அந்த ஆண்டாள் மாலையும் உள்ள படத்தை "என் லார்ச்" பண்ணி தொங்கவிட்டிருந்தார்கள். எப்படியோ அந்தப் படம் ஒரு மூலையில் யாரும் கவனிப்பார் அற்று தொங்கிக்கொண்டு இருந்தது.                                                                     

                                                  ஆனால்  இடைப்பட்ட பல வருசங்களில் நிறைய மாற்றம்கள் நாட்டிலையும்,வீட்டிலையும் ,ரோட்டிலையும் ,ஏன் உலகத்திலயும் ,வந்த போதும்,அந்த ஆண்டாள் மாலையில் இருந்த பூக்கள்  இன்னும் புத்தம் புதுப் பூக்கள் போல பொலிவுடன் இருந்தன! அந்த ஆண்டாள் அவளும்  மாலையோடு  கண்களில்  கிருஷ்ணன் வரவுக்காய் காத்துக்கொண்டிருந்தாள் . 
,
,

Thursday 12 May 2016

ஐந்து விதமாகிய நாட்கள் ...


..........................................................
இப்போதைய
உன்
புறக்கணிப்புகளை
ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை
அப்போதெல்லாம்
குங்கும நாட்களில்
நூறு மடங்கு
கொஞ்சிப் பேசிக்
கொண்டாட்டங்களுக்குக்
குறைவில்லாமலிருந்ததடா
இதயமில்லாதவனே
என்கிறாள்
எனக்கென்றொரு
இதயம்
இயங்காமலிருப்பதுவும்
நல்லதுக்கே கச்சியேகம்பநாதா
இல்லாவிட்டால்
அது நூறு துண்டுகளாக
சிதறி வெடித்திருக்கும்.
.

.............................................................

வெய்யில் 
என்னோடு சேர்ந்து நடக்க
எப்பவுமே ஆசைப்படுவது
ஒருநாளும் அது
நடந்தேறியதில்லை
நிழல் மட்டும்
முன்னுக்கும்
பின்னுக்கும்
சரிவிலும்
சமாந்தரமாயும்
பக்கவாட்டிலும்
இணை பிரிவதில்லை
சிலநாட்களின்
உச்சிப் பகல்களில்
எனக்குள்ளும்
மறைந்து கொண்டு
ஒளித்து விளையாடுது.
.

...........................................................

நீராரும் கடலுடுத்த 
நிலமடந்தைக் கெழிலொழுகும்
நாட்டில்
தேர்தல் அறிக்கை பார்க்கிறேன்
டெலிவிசனில
ரெம்ப கொடுமையா இருக்கு
என்கிற தோழிக்கு
தக்கசிறு பிறைநுதலும்
தரித்தநறுந் திலகமுமே
அழகாக
அலங்கரிக்கப்பட்ட
பொய்களைப்
பார்த்துக்கிட்டு இருக்கேன்
என்று உண்மையைச்
சொல்லுங்க
என்கிறேன் நான்

...........................................................

முன்னமெல்லாம்
தண்ணியில்லாக் காட்டுக்கு 
மாற்றலாக்குவேன் என்பார்
மேலதிகாரி
அதைக்
காதில வேண்டாமல்
கணக்கெடுக்காமல்
காலை ஆட்டிக்கொண்டு
அசட்டையாக இருப்பது
இப்பெல்லாம்
நெட்வேர் கனெக்சன் இல்லாத
ஏரியாவுக்கு
இடம்மாற்றுவேன் என்று வெருட்டுறார்
உண்மையாகவே
உயிர் போகும்போலப்
பயமாய் இருக்கு.
.............................................................
கொலுசு நல்லாருக்கா.
நீ வெள்ளிக் கொலுசு வாங்கித்தரேன்னு 
கவிதை எழுதின
அடுத்த்நாள் வாங்கினேன்
மிஞ்சியும்
பஞ்சி பிடிக்காமல்
வேண்டி அணிந்தேன்
என்கிறாள் அவள்
உன்
மின்னும் கொலுசும்
பின்னும் மிஞ்சியும்
எனக்குத் தெரியலைடி
பட்டைவெடிச்ச
உன் பாதங்களை கொஞ்சவா
என்கிறேன் நான்
தேவையா
இந்த உத்தரிப்பு
காலக் கொடுமைடா சாமி .
....................................................

Tuesday 3 May 2016

ஒரு கேள்வி பல விடைகள் ...

இது வரைக்கும் எழுதப்படாத ஒரு கதை, அல்லது பல கதைகள் சில மனிதர்களிடம் இன்னமும் விடை தெரியாத  கேள்வியாகவே இருக்கலாம் . ஒரு ஒழுங்கு வரன்முறையில்தான்  எல்லாரோட  வாழ்க்கையும்  வடிவமைக்கப்பட்டிருக்கு என்று  சொல்லும்  உலகத்தில்  அது அதுக்கு என்று நேரம்  வேற இருக்கு என்கிறார்கள்,  

                                                          சிலருக்கு நல்ல நேரம் அதுவே  இன்னொருவருக்குக் கெட்ட நேரமாகிப்  பிசகிவிடலாம். என்னைப்போன்ற ஒரு தமிழ் அகதி மனிதரின் அவலமான இறப்பும்  அப்படிதான்  நடந்திருக்க வேண்டும்

                                                        இந்த வருடத் தொடக்கத்தில்  ஜேசுநாதர்  சிலுவையில் மரித்துக் கல்லறையில் உயிர்த்தெழும்பிய பாஸ்டர் விடுமுறையில் சிசிலியா  சென்ற வருடம் போலவே அவளோட தாத்தா அவளுக்குக்  எழுதிவைத்து விட்டுப் போன பைன் மரவீட்டைப்  பார்க்க என்னையும் வரச்சொல்லி கேட்டாள். ஒவ்வொரு  பாஸ்டர் விடுமுறையிலும்   எனக்கும் உருப்படியாகச் செய்வதுக்கு ஒண்றுமே இருப்பதில்லை. அழுது வடிந்துகொண்டு பழைய நண்பர்களுடன்  உப்புச்சப்பில்லாத விசியங்கள்  கதைத்துக்கொண்டு பியர் அடிச்சுக்கொண்டு இருப்பேன்.

                                         சிசிலியாவோடு காற்றே இல்லாத சந்திர மண்டலத்துக்குக்  கிளம்பிப் போனாலும் எப்போதும் செய்வதுக்கு ஏகப்பட்ட  விசியங்கள்  கிடைக்கும். சும்மா  வாயைக்  கிண்டிக்கொண்டு வருவாள். அல்லது திடீர் என்ற காரை ஓரம்கட்டி நிற்பாட்டிபோட்டு வயல்களில் இறங்கி கும்மாளம் போடுவாள்.   காற்றுக்குப்  போட்டியாகக் காது  கிழிய  விசில் அடிப்பாள். அதனால அம்மாவாசை  இரவில நாட்டுக்கோட்டை செட்டியார் ஆற்றோடு  அள்ளுப்பட்டுப் போனது  போல  அவளோடு அந்த பெரிய வெள்ளிகிழமை போகச் சம்மதித்தேன்

                                                         
அந்தப்  பைன் மரத்தால் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்ட  வீடு  ஒஸ்லோ நகரத்துக்கு  வெளியே கிழக்கு மலைகளின் சமன் விரி  பள்ளத்தாக்கு முடிவில்  ஒஸ்போல்ட்  என்ற அழகிய பிரதேசத்தில்  ஸ்பிலபேர்க் என்ற  கிராமிய நகரத்தில் இருக்கு. கிட்டதட்ட ஒரு மணித்தியாலம் கார் ஓடவேண்டும். சில பகுதிகள்  பூநகரிக்கும்  நாகதேவன் துறைக்கும்  இடையில் உள்ள வயல் வெளிகள் போலவே  இருக்கும் . அதிகம் சமதரையான பாதை. செம்மங் குண்டு போல வளைவுகள் அதிகம் இருக்கும் .

                                     சிசிலியா அவள் புதிதாக வேண்டிய மெர்சிடஸ் பென்ஸ்  கொம்போசர் என்ற பஞ்ச கல்யாணிக்  குதிரையைக் கொண்டுவந்தாள் . அது வெல்வெட் கலரில் கண்ணாடி போல உலகத்தைத் அதன் முகத்தில் தெறிக்கவிட்டு பசுந்தாக வந்து ப்ரேக் அடிச்ச இடத்தில தேர்க்கட்டை போட்ட மாதிரி நின்றது . அந்தக் கார் என்னை   அதுக்குள்ள ஏற்ற விருப்பம் இல்லாதது போலக் கேவலமாகப்  பார்த்தது.  சிசிலியா கதவைத்திறந்து

                                    "  டேய்,,எருமை,,  கெதியா முன் சீட்டில  ஏறுப்பா , ஒஸ்லோ லோக்கல் ட்ராபிக் பாய வேணும், ஒரு மணித்தியாலம் பிளான் போட்டு இருக்கிறேன் ஓடித்தள்ள, சாப்பாட்டு ஒன்றும் கொண்டுவரவில்லை ,,ஸ்பில்பேர்க்ல ஏதாவது வேண்டுவம் "

                                    "   சரி ,,ஹ்ம்ம் "

                                     "  பேந்தும் பார் ,,கழுதை  ,,என்னடா  ஜோசிக்கிறாய் "

                                     " புதுக் கார் வளைகாப்புப் போட்ட பெண்ணின் வெட்கம் போல அழகா இருக்குடி ,,சும்மா நிக்கவைச்சு பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு,,

                                        "ஓ,,டேய்,,பார்த்துக்கொண்டு இருந்தா அலுவல் ஒண்டும் நடக்காது பா,,உன்னோட வர்ணனை அதிகம் டா,,ஏறடா கழுதை   "

                                        " ஹ்ம்ம்,,உன்னோட எடுப்புக்கு இந்த வெல்வெட் மெர்சிடஸ் பென்ஸ் எசப்பாட்டுப்  பாடுதடி  சிசிலியா  " 

                                         "  அட,,அட,,நாசமறுவானே,,பிறகு உதையெல்லாம் வைச்சு கவிதை எழுதி உன் வாசகர்களை இரத்தம் கக்க வைச்சு சாகடியடா ,, இப்ப ஏறடா உள்ளுக்கு எருமை மாடு ,, ஸ்பிலபேர்க்  வீட்டைப் பார்த்து  நாலு  மாதம்  ஆகிட்டுது டா  " 

                                       "  இதை ரோட்டில ஒட்டி அதன் அழகைக் கெடுக்கத்தான் வேண்டுமா சிசிலியா  ,,அதுதான் ஜோசிக்கிறேன் "

                                        "  அட அட அட ,,நேரம் போகுது  ,,இல்லை  பறக்குது  பாயடா  உள்ளுக்கு,,பார் இப்ப எப்படி வைச்சு  மிதிக்கப்போறேன்  என்று "

                                               " ஹ்ம்ம்,,நீ ஓடுவாய்  ,,நீ யாரடி , போர்மிலா வன் டிரைவர்களுக்கே இடியப்பமும்  சொதியும் தீத்தினவள் எல்லோ  "

                                     "  எப்பிடி இருக்கு என்னோட பென்ஸ் , சும்மா  காஸ் கொடுக்க அக்சிள்ள கால் போக முதலே அரைக் கிலோமீட்டர் எகிறிப்பாய்த்து , கார் என்டால் அது ஜெர்மன்காரன் செய்ததுதான்  கார்,,

                                            " கார்  உன்னைப்போலத்தான் அகிலாண்ட ஜோதி பிரம்மாண்ட நாயகி போல  ,,அம்சமா  இருக்குதடி  "

                                        " ஜப்பான்காரன்  கார்  அவங்கட  ....போலத்தான் வேலை செய்யும்.  ஹஹஹா,,இனி  வாழ்கையில் பென்ஸ் தவிர வேற எந்தக்காரும் ஓடுறதில்லை, கெதியா ஏறுப்பா.. பெல்ட்டை போடு "

                                              என்று அவசரப்படுத்த  என்னையும் செருகிக்கொண்டேன்

                                                           
கொஞ்சம் ஒஸ்லோ நகர சந்தடிக்கு உள்ளாள வளைச்சு எடுத்து ஓடி ஒரு பெரிய நெடுஞ்சாலைக்கு  ஏற்றின உடன  கார் ஸ்ட்டிரியோவில் அவளுக்குப் பிடித்த பிரைன் அடம்ஸ் பாடல்கள் அடங்கிய " என்னோட எப்போதும் சேர்ந்து வா  " என்ற பாடல்  உள்ள , "One Night Love Affair ", சீடியைப் பாட விட்டாள்,  

                                                எப்பவுமே  " என்னோட எப்போதும் சேர்ந்து வா  " என்ற பாடல அவள்  பாடுவாள்.அதுவும் கார் வேகமா ஓடும்போது பாடுவாள். ஏதாவது ஆக்சிடன்ட்  ஆகி மேல போகும்போதும்   " என்னோட எப்போதும் சேர்ந்து வா  " என்ற அர்த்தத்துடன் பாடுறாளா என்று குழப்பமாக இருக்கும்.

                                       " ஸ்பிலபேர்க் போய்க் கதைப்போம் " 

                                                             என்று சொல்லி ஒரு கையால அந்தப் பெரிய  டபிள்டேர்போ  எஞ்சின் காரை  ஓடிக்கொண்டு , மற்றக் கையால உலகப்புகழ்  பெற்ற  விக்டோரியா சிக்கிரெட்  என்ற  பசைன் டிசைன் கடை  தயாரிக்கும் லிப்ஸ்டிக் எடுத்து சொண்டில தடவி எனக்குக்  காட்டி  ப் ப் ப் என்று சொண்டை  ஒட்டிப் பிரிச்சாள்.

                                                                  
சிசிலியாவின் சொண்டு அது ஒரு சிதம்பர நடராஜா ரகஸியம் . சும்மாவே அவள் சொண்டு மொங்கன் வாழைப்பழக் கலர். அதுக்கு விக்டோரியா சீக்கிரெட்  தயாரித்த லிப்ஸ்டிக்  போட்டாள் என்றால் ரெண்டு தென்னம்கிளி நடுவில கொவ்வைப் பழத்தை வைச்சு உறிஞ்சுற மாதிரி அட்டகாசம் போடும். 

                                                 விக்டோரியா சிகிரெட் உலகப்புகழ் பெற்ற பசைன் டிசைன்  உடுப்பு  விக்கும்  கடை , ஒஸ்லோவில் அதுதான் மிக்கப்பிரபலம்  ,அவர்கள் தயாரித்து  வெளியிடும்  லிப்ஸ்டிக் பயங்கர விலை, ஆனால் நம்பர் வன் என்று சிசிலியா அவள் சொண்டை சாட்சிக்கு வைத்துச் சொல்லுவாள் ,,,

                                                  நாசமாகப் போக இந்தக்கதை சிசிலியாவின் சொண்டு  பற்றியதும்  இல்லை.விக்டோரியா சிக்கிரெட்  என்ற  பசைன் டிசைன் கடை  தயாரிக்கும் லிப்ஸ்டிக் பற்றியதும்  இல்லை , அவளோட  பிறவிப் பணக்காரத்தனம் பற்றியதும்  இல்லை.  இது அகாலத்தில் அஸ்தமனம் ஆகிய ஒரு ஆத்மா பற்றியது . ஆனால் சிசிலியாவின் சொண்டு முக்கியம் இல்லாட்டியும் அவள் இல்லாட்டி இந்த கதை வெளிய வந்திருக்காது .அதனால அவளையும் இதுக்குள்ளே வைச்சு இழுக்குறேன்

                                                       
சொன்ன  மாதிரி ஒரு மணித்தியாலம் ஒஸ்போல்ட்  சமவெளி வயல்கள்,காடுகள் ,சின்ன சின்ன நகரங்கள் எல்லாம் கடந்து  ஸ்பிலபேர்க் வந்து அந்த கிராமிய நகரத்தில் ஒரு தாய்லாந்து நாட்டு டேக் எவே  சைனிஸ் கடையில் வூக் சாப்பாடு வேண்டி பாசல் கட்டிக்  கொண்டு பென்ஸ் காரை அவளோட தாத்தா வீட்டுக்கு வெளியே விட்டுப்போட்டு ,என்னை இறங்கி மரக்கதவைத் திறக்கச் சொல்லி பிறகு அதை உள்ளே மெல்ல எடுத்து ஒரு வயதான பேர்ச் மரத்துக்கு அருகில் நிற்பாட்டினாள் . 

                                        இந்தக் கதை நாசமாகப் பிளான் போட்ட மாதிரி உடன இன்னொருமுறை லிப்ஸ்டிக் எடுத்துப் பூசிப் போட்டு என்னைப்  பார்த்து  ப் ப் ப் ப் என்றாள் .

                                            
அந்த வீடு பைன் மரத்தால் கட்டப்பட்ட பழமையான வீடு . சிசிலியா அதில பிறந்து வளரவில்லை . ஆனால் அவளோட சின்ன வயது விடுமுறைகளை அந்த வீடு அதிகம் திண்டிருக்கு. அதன் வாசம் சிசிலியாவின் எல்லா சின்னஞ்சிறு நினைவுகளில் ஒட்டி இருக்கு. பாய்கப்பலில் கப்டன் ஆக இருந்த அவளோட பணக்காரத் தாத்தா  இறந்தபோது தாய் உறுதியில் அவளுக்கே அது என்று எழுதிவைத்து நிறையக் காசும் அவள் பெயரில் வைப்புச் செய்து போட்டு  செத்துப்போனார். 

                                               சிசிலியா அந்த வீட்டை ஒரு கழுவல் துடையல் கொம்பனிக்கு பாரம் கொடுத்து மிக மிக நேர்த்தியாக அதைப் பராமரித்து வைத்துக்கொண்டு இருந்தாள்.

                                                 பாஸ்டர் விடுமுறைக்கு அவள் போறது அது எப்படி இருக்கு என்று பார்க்க. எப்பவுமே ஒரு பேப்பரும் பென்சிலும் எடுத்து அதுக்கு என்ன என்ன திருத்தவேலைகள் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு அங்குலமும் பார்த்துப்பார்த்துக் குறிப்பாள் ,

                                                      நோர்வேயில் பழைய வீடுகளைப் பராமரிப்பது செலவு அதிகம், எவளவுதான் நோர்வே மக்கள் நவீனமாக முன்னேறிக்கொண்டிருக்கிறதாய் இருந்தாலும் பழமையில் அவர்களின் கனவுகள் எப்பவுமே தோய்த்து எடுக்கப்படுவதால் செலவைப்பற்றிக் கவலைப்பட்டு அடிமாட்டு அறவிலைக்கு விக்கமாட்டார்கள் .

                                                
நான் அந்த வீட்டின் முன்னே இருந்த மரவாங்கில் இருந்தேன். சிசிலியா உள்ளே போய் யன்னல்கள் எல்லாத்தையும் திறந்து போட்டு பழைய குசினியில் விறகு போட்டு நெருப்பு வைச்சுக் கோப்பி போட்டுக்கொண்டு வந்து தந்தாள். 

                                                         அந்த வீட்டுக்கு இரண்டு பக்கமும் ரெண்டு வீடுகள் இருந்தது . ஆனால் சென்ற வருடம் அந்த ரெண்டு வீடும் பூட்டி இருந்தது. இப்படிதான் இந்த வருடமும் இருக்கும் என்று சும்மா அந்த ரெண்டு வீட்டையும் பார்த்தேன் . அதிசயமா வலது பக்கம் இருந்த வீட்டு வெளிக்கதவு திறந்து அதில ஒரு வயதான நோர்வே நாட்டவர் என்னை அதிசயமாகப்  பார்த்தார் .

                                                    என்னை எதுக்கு அதிசயமாகப் பார்க்கிறார் என்று குழப்பமாக இருந்தது. இந்த வந்தேறு என்னத்துக்கு ஒரு நோர்வே மரவீட்டுக்கு  பென்ஸ் காரில் வந்திருக்கிறான் என்று பார்க்கிறாரா என்று சந்தேகமாக இருந்தது. அல்லது வீட்டை உடைச்சு அள்ளிக்கொண்டு போகப்போறான என்பதுபோல நினைக்கிறாரா என்று மண்டையில் ரபர் பாண்ட்  இழுபட நான் சும்மா " ஹாய் " என்று சொல்லிப்போட்டு கோப்பிக் கோப்பையை கையால இறுக்கிப்பிடித்துக்கொண்டிருந்தேன் .

                              நான் " ஹாய் " சொன்னதுக்கு அவர் " ஹாய் " சொன்னார் .


ஒருகாலத்தில் கடுமையான உழைப்பாளி போலிருந்த அவர் தாடி நரைத்து இருந்தது. பலசாலிகள் போல கைகள் முறுக்கி இருந்தது. புறங்கையில் சிலுவையும் நங்கூராமும் சேர்ந்த  கறுப்பு  டட்டு குத்தி இருந்தார்.  நீலக் கண்களில்  புத்திசாலிதனம் அளவுக்கு அதிகமாக இருக்க வெள்ளை நிறத்துக்கு கொஞ்சம் மேலே போய் சிவப்பு நிறத்தில் இருந்தார். கடலோடு சம்மந்தப்பட்ட வேலையோ, அல்லது கடலோரப்பகுதிகளில் வேலை செய்தவர் போலவே அவர் அலை அடித்த முகத்தில் கோடுகள் இருக்க . தாறுமாறாக கோழி குப்பை கிண்டின மாதிரி தலை மயிரை சலூன் பக்கம் காட்ட விருப்பம் இல்லாத மாதிரி கவனிக்காமல்  வளர்த்து விட்டிருந்தார்.

                                                  சிசிலியா சாப்பிட சாப்பாடு எடுத்துக்கொண்டு லின்டெக்ஸ்  ஜக்கட்டை கழட்டிப்போட்டு ஸ்பானிஸ் டுனிக்கா போட்டுக்கொண்டு வந்தாள் மர வாங்குக்கு. அவளுக்கு அந்த மனிதர் பற்றி சொன்னேன், அவள் தான் அறிந்தவரை அந்த வீட்டில் யாருமே இல்லையே அது " ஸ்ப்பார  பேங்க் " பொறுப்பில் இருக்கு என்று திரும்பிப் பார்க்க அந்த மனிதர் நட்பாக சிசிலியாவுக்கு ஹாய் சொன்னார், 

                                               சிசிலியாவைக் கண்டவுடன கொஞ்சம் பயம் தெளிஞ்ச மாதிரி முகத்தில வெளிச்சவீட்டு லைட் அடிக்க , மறுபடியும் " ஹாய் " சொல்லி வேற சில கதைக்க விரும்பும் சமிஞ்சை உள்ள அன்பான சந்திப்புத் தொடக்க வார்த்தைகளும் சொன்னார்.

                              
அவர் சொன்ன நோர்ஸ்க்  உச்சரிப்பில் வடமேற்கு கரையோர நோர்வேமொழி வாயில இயல்பாகக் கிடந்தது . தொண்டை கரகரக்கக் கதைத்தார். வயதாகி பென்சனில் இருப்பவர் போலிருந்தது . நாரியை சரித்துக்கொண்டு நின்றவிதம் பக்கவாதம் இருக்காலம் போலிருந்தது. தனியாக இருப்பது போலதான் ஜன்னல் திரைகளில் மெழுகுதிரி வெளிச்சம் போல  பழுப்பு ஏறிய நிறம் காவி பிடித்து இருந்தது.

                                        " அவர் எங்களுடன் பேச விரும்புறார் போல இருக்கு சிசிலியா , வாவேன் சும்மா கதைச்சுப் பார்ப்போம்," 

                                       " ஹ்ம்ம்,,,எல்லா ஆண்களும் பெண்களைக்கண்டா வயது வித்தியாசமில்லாமல் வழியுறது..ஹ்ம்ம்  " 

                                               " உனக்கும் அருகில் ஒரு தெரிந்தவர் இருப்பது உன் வீட்டுக்குப் பாதுக்காப்பாய் இருக்குமெல்லா  "

                                                         என்று அவளைக் கேட்டேன். 

அவள் கொஞ்சம் ஜோசித்தாள். நோர்ஸ்க்  மக்கள் இலகுவில் புதிய ஆட்களுடன் பழக விரும்பமாட்டார்கள். கொஞ்சம் ஜோசித்துதான் பேச விரும்புவார்கள். நான் சொன்னால் அவள் செய்வாள். ஆனாலும் இன்னொருவர் விசியத்தில் நான் அவளுக்கு அவளவுதான் சொல்ல முடியும்,  முடிவில்

                                    " சரி வா போய்ப் பார்ப்பம், உன்னைப்பார்க்க  கிளி ஜோசியம் சொல்லுறவன் போல இருகிறாய்,,"

                                     "ஹாஹாஹா,,என்னைப்பார்க்க அப்படியா தெரியுது,, "

                                    " அந்தாள் நல்ல பெரிய இடத்து மனிதர் போல இருக்கு ,,என்னவும் பிசகுமா கழுதை உன்னையும் கொண்டு போனால் என்று ஜோசிக்கிறேன் "

                                      "ஜோசிக்காதே சிசிலியா,,நான் பொறுப்போடு நல்லவனாக நடந்துகொள்ளுவேன், நம்புடி என்னை  "

                           "சரி வா  பார்க்கலாம் என்ன நடக்குது என்று  " என்றாள்


நாங்க அவர் வீட்டு வாசலுக்கு போகவே அந்த மனிதர் கதவை அகலத் திறந்து , சிசிலியாவுக்கு கை கொடுத்து " ஹால்வோர்சன் " என்று அவர் பெயரைச்சொல்லிக்  கை கொடுத்தார். இன்றைய இளம்  நோர்வே மக்கள் அவர்களின் பரம்பரைப் பெயரை அதிகம் சொல்வதில்லை. அப்படி பரம்பரைப் பெயரைச் சொல்லிக் கை கொடுத்தால் அதில அவர்கள் பல பரம்பரை விசியங்களை மறைமுகமாகச் சொல்ல விரும்புகிறார்கள் என்று அர்த்தம் .


                                        
சிசிலியாவும்  சும்மா  ஆள் இல்லை. பெரிய  உடையார் மணியகாரன் போன்ற ரேஞ்சில் உள்ள கொலர் தூக்கி விட்டு சபைசந்தியில் எழும்பிப் பேசிய  நோர்க்ஸ் குடும்பத்தை சேர்ந்தவள், அவளைப் பார்த்தாள் அவள் உயரத்தையும் நடையையும் நீல அக்குவாமரைன் நிறக் கண்களையும்  வைச்சே மிச்ச சாதகம் சொல்லலாம். 

                                           அவளோட தாத்தா நிலச்சுவான்தார் குடி , கப்பலோடிகள்  கோத்திரம் , அவருக்கு  ஸ்பிலபேர்க்  நகரின்  சந்தியில் வெண்கலச் சிலையே வைச்சு இருக்கிறார்கள் .

                                           சிசிலியா அவள் குடும்பப் பெயரான " அன்டிரியாஸ்வன்விக்  " என்ற தன்னோட குடும்பப் பெயரை சொல்லி அவளோடு  பனை மரத்தில வவ்வால் போல தொங்கிக்கொண்டு நின்ற  என்னையும் சேர்த்து அறிமுகம் செய்து வைத்தாள் . 

                                                       அவர் எங்களை அந்த வீட்டில் போட்டிருந்த தூசி பறக்கும் ஒரு சோபாவில் இருக்க வைத்தார். அவர் வீட்டுக்குள் டென்மார்க் நாட்டு டிய்டர்மென்ட் புகையிலை வாசம் சுற்றிச் சுழன்டுகொண்டிருந்தது. பல வடிவங்களில் புகைக்கும் சுங்கான் வைச்சு இருந்தார் 

                                            என்னை இடை இடையே பார்த்துக்கொண்டு சிசிலியாவுக்கு அவர் வீடு பற்றியும் , அவர் பற்றியும், எப்ப  அவர்  இங்கே வந்தார் என்பது பற்றியும்  வள வள என்று சொல்லிக்கொண்டு இருந்து போட்டு, 

                             " குடிக்க கோப்பி வேணுமா " என்று கேட்டார். 

ஒரு நடுத்தரமான சுங்கானில்  டேனிஷ் புகையிலை  பரதநாட்டிய மான் முத்திரை போல விரல்களைச் சொடுக்கிக் கிள்ளி  அடைந்த அதை  நெருப்புக்குச்சி தட்டி பத்தவைக்கப் போனார், ஆனால் பத்தவைக்கவில்லை, அதை அப்பிடியே அடைஞ்சபடி வைச்சுப்போட்டு , என்னைப் பார்த்து,

                                          " வ ண க் க ம் , நீ வடக்கு ஸ்ரீலங்காவில் இருந்து  சிங்களவருடன்  நடந்த  மொழிவாரி உள்நாட்டு யுத்தத்தில் இடம் பெயர்ந்து வந்த தமிழனா "  என்று கேட்டார் . 


அவர் " வணக்கம் " என்று அழகாகச் சொல்லி இதை இயல்பாகக் கேட்டார் , சிசிலியா என்னை ஆச்சரியமாப் பார்த்தாள் . என்னடா இந்த சொம்பு திருடுறவன் போல முளிக்கிரவனை  இந்த நோர்க்ஸ் மனிதர் நன்றாக நடத்துறாரே என்று என்னைப் பார்த்து சொண்டால நெளிப்புக் காட்டி நக்கல் வெட்டு வெட்டினாள்.   

                                       நான் அதிராமல் " ஓம் " என்றேன் . 

அவர் அதுக்குப் பிறகு என்னோட கதைக்க விரும்புவது போல என் பக்கம் திரும்பி

                                  "  உனக்கு வார்டோ  எங்கிருக்கு என்று தெரியுமா, அந்தப்பக்கம் அசைலம் சோக்கர்  அகதிமுகாமில்  நீ இருந்து இருக்கிறாயா  "

                                 "  இல்லை,,,நான் அங்கெல்லாம் போனதும் இல்லை  ஹால்வோர்சன் "

                                   " நான் சொல்லுறது  ,,முப்பது சொச்சம் வருடங்களின் முன் நடந்த கதை "

                                    " அப்படியா , பழைய கதை ஒக் பரலில் வைச்ச விஸ்கி போல காலம் செல்லச்செல்ல தான் அது மெச்சூர் ஆகி சுவை அதிகமாகும் "

                                     " அப்படியா,,நான்  உன்னை  வெளியே பார்த்தவுடன்  நான் வேலை செய்த வார்டோ   மீன்பக்ட்டரி தான் உடன நினைவு வந்தது "

                                     " ஓ...நீங்கள் சொல்லும் அந்த  இடத்தில  அசைல்முத்தாக் அரசியல் அகதி முகாமும்,,இலங்கைத் தமிழரும் இருந்தார்களா ஹல்வோர்சன் "

                                   "  யெஸ்,,நிறைய,,ஒரு  கோடைகாலம்  என்று  நினைக்கிறன் , அப்போதுதான் முதல் முதல் தமிழர்கள் அங்கே அகதியாக வந்தார்கள் "

                                        " ஹ்ம்ம்,,"

                                       " நான்  வார்டோ   நகரசபையிலும் அதிகாரமுள்ள உறுப்பினரா இருந்தேன் அப்போது,,"

                                     "ஓ லோக்கல் பொலிடிக்க்கில்     பெரிய புள்ளிதான் போல நீங்கள் ஹல்வோர்சன்  " 

                                   " அங்கிருந்த ஒரே ஒரு பெரிய வார்டோ   மீன்பக்டரியில் மிஷின்  மெயிண்டேயின் டெக்னிகல் லெவெலில் அதிகாரியாகவும் இருந்தேன் "

                                     " ஒ,,அதுவா  என்னை உற்று உற்றுப் பார்த்திங்கள் ஹல்வோர்சன் "

                                     "   ஹஹஹா,,யெஸ் ,  "

                                 "  நான் நினைச்சன் கள்ளன் வீட்டை உடைக்க வந்திருகிறானோ என்று நினைச்சிங்க என்றெல்லோ "

                               "   ஹஹஹா,,இல்லை,,தமிழர்கள் அப்படி செய்யமாட்டார்கள், எனக்கு அவர்களை நல்லாத் தெரியும் , நாங்கள் எல்லாம் முதல் முதல் வார்டோ  வந்த அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம் "

                                     "  ஏன் "

                                  " ஏனென்றால் இந்தக் குளிரை எப்படி இவர்கள் தாக்குப்பிடித்து உயிர்  வாழ சமாளிக்கப்போகிறார்கள் என்று "

                                   "  ஓ,,அப்படியா,  எங்கள் நாட்டில் பயங்கர யுத்தம் நடந்தது  அதோடு ஒப்பிட்டால் உயிர்தப்பி வாழ வார்டோ  குளிர் ஒன்றும் பெரிய பிரசினை இல்லை "

                                    " அது  உண்மைதான்,,நான் என் நண்பர்களுக்கு சொன்னேன் பாருங்கள் இந்த விண்டரோடு இவர்கள் துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடிப் போய் விடுவார்கள் என்று "

                                    "    உங்கள் வார்டோ  நண்பர்கள் அதுக்கு என்ன சொன்னார்கள் "

                          "  அவர்களும் அதைத் தான் சிரித்து சிரித்து சொன்னார்கள், அந்த ஊருக்குள் அதுதான் பியர் குடிக்கும்போது பப்பில் பேச்சாகவே இருந்தது  "

                            " அப்படியா,,பிறகு விண்டர் வந்தபோது என்ன நடந்தது "

                             "    அவர்கள் போகவே இல்லை "

                                    " அட,,அப்ப அதுக்கு அடுத்த விண்டர் வந்தபோது என்ன நனடந்து "

                                      "    அதுக்கும் அவர்கள் போகவில்லை "

                                    "   ஹ்ம்ம்,,,,அப்படிதான் ,,அவர்களில் பலருக்கு அங்கே இருக்க பூர்செட்டினிங் நிரந்தர அனுமதி விசா கிடைத்தது "

                                            " அது,,நல்ல  செய்தியே "

                                 " பலர் கணவன் மனைவியாக குடும்பமாக வார்டோ  வந்தார்கள்,,குழந்தைகளும் வந்து இருந்தார்கள் "

                                     "   ஹ்ம்ம்,,அப்படிதான் குடும்பம் குடும்பமா அடியோடு புலம்பெயர வேண்டிய நிலைமை இலங்கையின் வடக்கு கிழக்கில் இருந்தது "

                                    "   ஹ்ம்ம்,,கணவனும் மனைவியும் பிள்ளைகளைப் சின்னப் பிள்ளைகள் படிக்கும் இடத்தில கொண்டுபோய் படிக்க விட்டுப்போட்டு ஒன்றாக வந்து ஒன்றாகவே வேலை செய்வார்கள் "

                                      "  அதில என்ன பெரிய ஆச்சரியம் இருக்கு "

                                     " இருக்கு,,எங்களின் நோர்வே மக்கள் அப்படி மீன் பக்டரியில் வேலை செய்ததை நான் கண்டதில்லை "

                                       " ஹ்ம்ம்,,சுவாரசியமாக  இருக்கு  உங்களின்  அனுபவம்,,ஹல்வோர்சன் "

                                          " ஹ்ம்ம்,,அப்படிதான்,,கடினமான வேலை,,வேலைநேரம்,,அவர்கள் பக்டரிக்கு வந்த கொஞ்ச நாளில் வேலையைப் பிடித்துக்கொண்டுவிட்டார்கள் ,,கெட்டிக்காரரர் அதுவும் நோர்க்ஸ் மொழி அதிகம் தெரியாமல் வார்டோ   வந்த கொஞ்சநாளில் "

                                         "   ஹ்ம்ம் "

                                        "  சோம்போறி பிடித்த எங்களின் நோர்வே மக்கள் அவர்களை மீன் பக்டரியில் தள்ளிப்போட்டு  , இலகுவான வேலைகளுக்கு பாய்ந்து போய்விட்டார்கள் "

                                     " ஒ..அது எங்கேயும் நடக்கிற தானே  அகப்பட்ட மட்டி மடையனை இரும்படிக்க மாட்டிவிட்டுப்போட்டு உமி அள்ளப்போற விசியம்தானே "

                                       " அவர்கள் எல்லாருமே நான் பொறுப்பாக நடத்திய மீன் பக்டரியில் கடினமாக வேலை செய்தார்கள் ,,எனக்குக் கீழே "

                                  " அப்படியா ,,இதுகள்   நான் கொஞ்சம் கேள்விப்பட்டது "

                                      " உண்மைதான்  கடினமான உழைப்பாளிகள், நல்ல மரியாதை உள்ளவர்கள், மேலதிகாரியை மதிப்பவர்கள் , செய்யும் தொழிலே தெய்வம்,,சம்பளமே சீவியம்  என்று வாழ்ந்தார்கள்  "

                                            "    ஹ்ம்ம், "

                                       "  வடமேற்கு நோர்வேயிட்கு ஒரு உல்லாசப்பிரயாணிகள் கப்பல் வரும் தெரியுமா , அதில பணக்கார நோர்வே மக்களும் வெளிநாட்டு பணக்கார மக்களும் உல்லாசம் காண வருவார்கள் "

                                     "     அப்படியா,   தெரியாது , ஹல்வோர்சன் "

                                   "   அந்தக் கப்பலில் வரும் உல்லாசப்பயனிகளை மீன் பக்டரிக்கும்,அவர்கள் வாழ்ந்த அகதிக் காலனிக்கும் ஒவ்வொருமுறையும்  கொண்டுவந்து எப்படி ஒரு வெப்ப மண்டல  நாட்டிலிருந்து  அரசியல் அகதியாக வந்தவர்கள் குளிர் உயிரை எடுக்கும் அந்நியமான வார்டோ  பிரதேசத்தில் வெற்றிகரமாக வாழ்கிறார்கள் என்று காட்டினோம் "

                                     "  உண்மையாவா சொல்லுரிங்க,,ஹல்வோர்சன் ,,அந்த உல்லாசப்பயணிகள் என்ன சொன்னார்கள் "

                                         " அவர்கள் வாயில கை வைச்சு அன்டார்ட்டிக்காவில்  பென்குயினை  பார்ப்பதுக்குப் பதிலாகக் கறுப்புக் காகத்தைப் பார்ப்பது  போல தமிழர்களை ஆச்சரியமாகப் பார்த்தார்கள் " 

                                 "ஹஹஹஹா..என்ன ஒரு உவமானம்...கலக்குறீங்க ஹால்வோர்சன்   "

                                  " தமிழர்களின் கடின உழப்பை , மன உறுதியை வியந்தார்கள் "

                                          "   அட,,நம்ம  ஆட்கள் நல்லாத்தான் கலக்கி இருக்கிறார்கள் "

                                        " உண்மை,,தமிழர்கள் பாவம்,,அதன்பின் தான் அவர்களின் அரசியல் பிரசினையைத் தேடித்தேடி வாசித்தேன் "

                                              "  ஹ்ம்ம்,, "

                                        " அவர்கள் கொத்துக் கொத்தாக அழிக்கபடுவதை எங்கள் உள்ளூர் தொழில் கட்சியில் முக்கியமாகப் பேசினோம் "

                                         "   ஹ்ம்ம்,,அது  நல்ல  விசியம் "

                                    " நான்  இவளவும்  பொதுவாக சொல்லுறேன், உன்னை வெளியே பார்த்த போது முக்கியமாக ஒரு சம்பவம் நினைவு வந்தது, அதுக்கு நான் சில  ஆதாரம் வைச்சு இருக்கிறேன் ,கொஞ்சம் இரு எடுத்துக்கொண்டு வாறன் "

                                              என்று சொல்லி ஹல்வோர்சன் ஏறக்குறைய சிசிலியா எங்களோடு இருப்பதை  மறந்தே விட்டார் , சிசிலியா எக்கொனொமிக்ஸ் மாஸ்டர் டிகிரி படிச்சவள், எக்கொனொமிஸ்ட் ஆகத்தான் வேலை செய்கிறாள் . அவள் ஆர்வமாக இடையே அநாவசியக் கேள்வி கேட்காமல் என்னையும் ஹல்வோர்சன்னையும் பின்தொடர்ந்துகொண்டிருந்தாள். 


சிசிலியாவும் அதுக்குப்பிறகு இவளவு கதை கேட்ட  பிறகு  என்னையும் கொஞ்சம் உருப்படியான கேஸ் போல பார்த்தாள். வளர்த்த நாய்  முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது போல நான் அவளைப்  பார்த்துக்கொண்டிருந்தேன் .  தானும் அந்த வார்டோவில் வசித்து, அரசாங்க உதவியில் தங்கியிராமல்  மீன் வெட்டி நோர்வே பொருளாதரத்துக்குப் பக்கபலமாகப்   பணி செய்த தமிழர்களை நினைச்சுப் பெருமைப்படுவதாக சொன்னாள் ,

                              " என்னை நினச்சு பெருமைபடவில்லையா சிசிலியா " என்று கேட்டேன் .

                              "   அடி செருப்பால நீ ஒரு  கேடு கெட்ட தமிழனடா, அங்கே இங்கே எங்க உல்டாவிட இடம் கிடைக்குதோ அதுகள் எல்லாதுக்கு உள்ளாலும் புகுந்து நுழைஞ்சு கொண்டு திரியிற பிரம சத்தி "

                                  என்று சொல்லி சிரிச்சாள் .

                       "  ஹ்ம்ம்,,என்ன  பிளான்,, இந்தாள் மிச்சம் வைச்சு வாட்டப்போகுது போல இருக்கு ,, கந்தபுராணபடனம்  கேட்டது காணும் வதக்கி எடுக்க முதல் எஸ்கேப் ஆகிப்  போவமா " என்று கேட்டாள்

                                "  கொஞ்சம் பொறு அந்தாள் என்னவோ காட்டப் போகுதாம் அதில தான் சூரனின் தலை விழும் போல இருக்கு,," என்றேன்

                                         
ஹல்வோர்சன் ஒரு முப்பது வருடம் பழமையான கடித உறை  என்பலப் எடுத்துக்கொண்டு வந்தார். அதைத் திறந்து ஒரு கிறிஸ்மஸ் மட்டையும், ஒரு குடும்பப்படமும் மேசையில் எடுத்து வைத்தார். என்னை அதைப் பார்க்கச் சொன்னார். கிறிஸ்மஸ் மட்டையில்  அரைகுறை நோர்க்ஸ் மொழியில் வாழ்த்து எழுதி இருந்தது. 

                                                 குடும்பப் படத்தில் ஒரு நடுத்தர வயது தமிழ் ஆணும் , அவர் மனைவியாக அவரைவிட இளமையான தமிழ் பெண் மனைவியாகவும் அருகருகே நிக்க அவர்களுக்கு முன்னே ரெண்டு சிறிய பெண் குழந்தைகள் நின்றார்கள்.

                                        அந்தத் தமிழ் நடுத்தர வயது ஆண் கண்களால் கொஞ்சம் சிரித்துக்கொண்டிருக்கு. அவரின் மனைவி சிரிக்கவில்லை. கவலையை மறைப்பது போல முகத்தை எந்த சலனமும் இல்லாமல் வைத்து இருந்தா. 

                                      குழந்தைகள் எதுவும் அறியாக் குழந்தைகள் போலவே  நின்றார்கள் . 

                                                 அவர்கள்  வடக்கு  மாகாணமா  அல்லது  கிழக்கு மாகாணமா  என்று  மட்டக்கம்பு  வைச்சு மட்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனால்  அந்தக் குடும்பப் படத்தில் ஒரு குழப்பம் இருப்பது போலிருந்தது.


பொதுவாக கணவனுடன் சந்தோஷமாக வாழாத மனைவிகள் எப்போதுமே குடும்பப்படம் கணவனுடன் சேர்ந்து எடுக்கும்போது பழி வேண்டுவதைப் பதிவுசெய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது போல முகத்தை உம் என்று வைத்திருப்பார்கள் என்று பலமுறை கவனித்து இருக்கிறேன். சில பெண்கள் தற்காலிகமாக  அந்த வாழ்வியல் அவலத்தை மறைத்து ஒரு புன்சிரிப்பைக் கொழுவிக்கொண்டு  புத்திசாலித்தனமாக புன்னகைத்து மறைப்பார்கள்.  

                                                       இந்தப் படத்தில அப்படி ஒரு வைக்கல் வண்டில் சாய்ஞ்சு விழ அதில மாட்டினவன் அப்பன் பெயரைக் கேட்ட கதைப்போல ஒரு சந்தேக நிழல் இருந்தது.

                             சிசிலியாவும் அந்தக் குடும்பப்படதைப் பார்த்தாள். அவளுக்கு இதுபோன்ற மைபோட்டு மைச்சினியை மடக்கிற விசியங்கள் விளங்காத்தனமாக வெளுத்ததெல்லாம் பதநீரும்  தென்னம் கள்ளும்   என்று  நினைக்கும்  வெள்ளாந்தியான அப்பாவி. ஆனால் சிசிலியாவும் அந்த கிறிஸ்மஸ் மட்டையையும், குடும்பப் படத்தையும் ஆர்வமாகப் பார்த்தாள்.  என்னைப் போலவே வாயைத்திறந்து கருத்து  ஒன்றும் சொல்லவில்லை . முதல் ஹல்வோர்சன் ஏன்  இதைக் காட்டுறார் என்றே எங்களுக்கு விளங்கவில்லை. 

                                         ஆனால் ஹல்வோர்சன் முகம் நினைவுகளை மீட்டு எடுத்த ஏதோவொரு  சம்பவத்தில் ஒன்றிப்போய் கவலையாக ரேகைகள்  படர  அவர் நீலக் கண்கள் மழை மப்பு மந்தாரம் போடுவது போல இருட்டு அலைந்து கொண்டிருந்தது. 

                                                     
ஸ்பிலபேர்க்  நகரம் மேட்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில்  மஞ்சள் வெய்யிலில்க்  குளித்து , ஒய்யாரமாகத் தலை துவட்டிக்     குளிர்ந்து  கொண்டிருந்தது . அந்த விடுமுறை நாட்களில் குன்ச்க்வின்ன்கர் மலைகளில் உருவான காற்று தென்மேற்குப் பக்கமா   உலாப்போகும்  போது அதிகம் நகரத்துள்  உள்வாங்கி  அடிச்சு ஜன்னல்களை அதட்டிக்கொண்டிருந்தது

                                           ஹல்வோர்சன்  சிசிலியாவைப் பார்த்து " கொஞ்ச நேரம்  கதைக்கப்போறேன்,,அதுக்கு  நேரம் இருக்கா " என்று கேட்டார், சிசிலியா " ஓம் "  என்றாள் . ஹல்வோர்சன் என்னைப்பார்த்து  உரையாடலை இப்படித் தொடங்கினார்

                                   " இவர்களை  உனக்கு  தெரியுமா , "

                                  " இல்லை,,ஹல்வோர்சன்,,முப்பது வருடங்களின் முன் நான் நோர்வேயில்  இல்லை,  நீங்கள் சொல்லும்  இடங்களில் வசித்ததில்லை "

                                  " ஹ்ம்ம்,,அது  தெரியுது,,உன்னோட  நோர்க்ஸ் உச்சரிப்பில் மறந்தும் ஒரு வடக்கு நோர்வே நோர்க்ஸ் உச்சரிப்பு  இல்லை,,அதை  நான்  கவனித்துக்கொண்டிருக்கிறேன் "

                               "  ஹ்ம்ம்,,அதுதான்  உண்மையும்  ,ஹல்வோர்சன் "

                                "   இவர்கள் இருவரும்  என்னோட வார்டோ மீன்  பக்டரியில் வேலை செய்தார்கள் "

                               "    அப்படியா,,நல்ல  விசியம் ,,நல்ல  நண்பர்களா  உங்களுக்கு "

                              " ஹ்ம்ம்,,மிக மிக  நட்பு..இந்த  ஆணின்  பெயர் ............     ................மிக மிக  நல்ல இளகிய இதயம் உள்ள மனிதர், நாங்கள் இருவரும் நட்பென்றால் அப்படி ஒரு நட்பு, நான் மேலதிகாரி  ஆனால் வேலை முடிய பிரெண்ட்ஸ் , அப்படி  நெருக்கம்  "

                            "  ஹ்ம்ம்,,அதனால் தான்  இந்த கிறிஸ்மஸ் வாழ்த்துமட்டை தந்து  இந்தப்  படமும் தந்தார்களா "

                                    "ஹ்ம்ம்,,அப்படிதான்,,அதுக்கும் மேலே ..  "

                                     " இவர்கள் இலங்கையில் திருமணம் முடித்து இங்கே அரசியல் அகதியாக வந்தார்களா "

                                   " யெஸ்..அப்படிதான்  சொன்னார்கள்,,இந்த  ரெண்டு  குழந்தையும்  சிறிலங்காவில்  பிறந்தவர்கள் ,,ரெண்டு வருடம் தான்  மீன் பக்டரில் வேலை செய்தார்கள் ,"

                                   " அட,,ரெண்டு  வருடத்தில்  இவளவு நட்பாகி இருக்கிறார்களே ,,அதுவே  நல்ல  ஒரு  விசியமே "

                                "   ஹ்ம்ம்,,,அவர்கள்  எனக்கும்  என்  கான்சர்  வந்து இறந்து போன மனைவிக்கும்  எவளவோ தருவார்கள்..நாங்களும்  கொடுப்போம்,,நான்  நோர்வே மக்களிடம் காணாத ஒருவித அன்பை அவர்கள் எங்கள் மேல் பொழிந்தார்கள் "

                                    " ஒ..அது  கேட்கவே சந்தோசமா இருக்கே, இவர்களுடன் இப்பவும் கதைப்பின்களா "

                                    " அதுதான் ,,பிரசினையே,,ஜீசஸ் கிறிஸ்ட்,,,இந்த  ஆண்  என்  நண்பர் .......  ..... ஒருநாள் மீன் வெட்டிய பின் மிஞ்சும் பிரயோசனம் இல்லாதா மிகுதிகள்  போட்டு சின்னதாக வெட்டும் மிசினுக்குள் ,,ஜீசஸ் கிறிஸ்ட் ..பாய்ந்து விட்டார் ,,ஜீசஸ்  கிறிஸ்ட் "

                                
இதைக் கேட்ட சிசிலியா " அய்யோ "  என்று கன்னத்தில் கையை வைச்சாள் , அந்தக்  குடும்ப்பப்ப் படத்தை உடன எடுத்துப் பார்த்தாள். என்னைப்  பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. 

                        நான் அதிகம்  எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தேன். ஹல்வோர்சன் முப்பது வருடங்களின் முன் நடந்த அதிர்ச்சி இன்னொருமுறை உயர் ரத்த அழுத்தம் போல எகிற அவர் கண்களில் கருவளயங்களின் அடியில் கீழ்வானம் போல சிவப்பு நிறம் வந்திருந்தது

                                "  அடப்  பாவமே ,,பிறகு  என்ன நடந்து, ஹல்வோர்சன் "

                                  "   ஜீசஸ்  கிறிஸ்ட்,,,,  பிறகு  என்ன நடக்கிறது,  ஜீசஸ்  கிறிஸ்ட்,,,, மிசினை நிப்பாட்டி,  ,துண்டு துண்டாதான் பொறுக்கி எடுத்தோம்  ,,ஜீசஸ்  கிரிஸ்ட் "

                                       "  அடப்  பாவமே ,,அந்த மிசினில் யாரும்  பாயமுடியாதவாறு வலைபோலப் போட்டோ,,அல்லது  வேறு  உயிர் காப்பு பாதுகாப்பு முன்னேட்பாடுகள் எதுவுமே  இல்லையா ,,"

                                       "   எல்லாம்  இருந்தது,,அவர்  முதல் நாள் இரவு வேலை முடிந்து  போகும்போது யாருக்கும்  தெரியாமல்  எல்லாவற்றையும் அகற்றிவிட்டு அடுத்தநாள் காலையில்  வந்து  பாஞ்சிட்டார்,,,,ஜீசஸ்  கிறிஸ்ட் "

                                       " ஏன்  அப்படிச்  செய்தார்  என்று  தெரியுமா ,,என்ன  காரணம் அப்படித் தற்கொலை செய்ய .."

                                          " அதுதான்,,எனக்கும்  விளங்கவில்லை.  ஆனால்  இதுக்கு  காரணம்  புலம்பெயர் அந்நியநாட்டில் மனஅழுத்தமாக இருக்கலாம் என்றுதான்  நாங்கள் நிர்வாகம் நினைத்தோம்," 

                                             "இருக்கலாம் ,ஹல்வோர்சன்  "

                                    " ,ஆனால்  பிறகு  கதைகள்  அப்படி  வரவில்லை "

                                          "   ஒ,,வேற  எப்படி  வந்தது "

                                         "  ஹ்ம்ம்,,,,உங்கள்  நாட்டில்  திருமணம் எப்படி செய்வார்கள் "

                                   " காதலித்தும்  செய்வார்கள் ,,,பொருத்தம்  பார்த்தும்  செய்வார்கள் "

                                  ." அப்படியா,  சரி,,  இது  என்ன  .  .............  ..............    ..............        .....    .... ஹ்ம்ம்ம் "


                                   "..ஹ்ம்ம்ம்,,இது   போல  தான்,, ....................  .................  ஹ்ம்ம் .ஹல்வோர்சன் "

                                      "  ஒ,,,அப்படியா,,ஹ்ம்ம்,  நீயும்  இதைப்பற்றி கதைக்க விரும்பவில்லை போல இருக்கே,,,,,"

                                     " ஹ்ம்ம்,,அப்பிடிதான்  நான்  நினைக்கிறன், ஆனாலும்  சரியாக  அனுமானிக்க முடியாது ,ஹல்வோர்சன் "

                                         " அந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்தில்  நான் என் வேலையை ரிசைன் செய்து விட்டேன் "

                                    "       ஒ..ஏன்,,அப்படி செய்திங்க  ஹல்வோர்சன் "

                                      "  எனக்கு அந்த இடத்துக்குள் போக முடியவில்லை,,,நினைவுகள்.....அகால மரணம்,,,,,என்னால் முடியவே முடியவில்லை ,,அந்த  அருமையான மனிதர் "

                                     "  ஹ்ம்ம்,,உங்கள்  இழப்பின் ஆதங்கம்  புரிகிறது "

                                           " அவர் என்னோட பல விசியங்கள் பேசி இருக்கலாம்,,நான்  உதவி  செய்திருப்பேன்,,,,குறைந்த பட்சம்   எப்படி  அப்படியான நிலைமைகளை  கடந்து போவது என்று "

                                        "   ஹ்ம்ம்,,,,அது  உண்மைதான்  ஹல்வோர்சன் "

                                        " எங்கள்  நாட்டில்  சில  விசியங்களை இலகுவாக அப்பிளைக் கடிச்சு எறிஞ்சு போட்டு பியேர்ஸ் பழத்தைக்  கடிச்சுக்கொண்டு கடந்து செல்கிறோம்,,உங்கள் கலாச்சாரத்தில் அப்படி இல்லையே....அது  ஒரு  பெரிய  மனவியல் உளவியல் பிரசினை  இல்லையா "

                                          " ஹ்ம்ம்,,இருக்கலாம், எங்கள் நாட்டிலும்  கல்லைத் தூக்கி  நாய்க்கு  எறிஞ்சுபோட்டுப் போறமாதிரி ஆட்களும் இருக்கிறார்கள்..ஆனால்  எல்லாரும் ஒரே மாதிரி  இல்லையே

                                               " அப்ப,,இந்தக்  கேசில்  ஏன்  அப்படி  நடந்துக்கொள்ளவில்லை.  புலம்பெயர் அந்நியநாட்டு  நிலைமை என்பதாலா "

                                                " ஒரு  கேள்வி பல விடைகள் ...வேறென்ன சொல்ல முடியும் ,,ஹல்வோர்சன் "

                                           " ஹ்ம்ம்,,,எனக்கு அந்த சம்பவம் நடந்தபின் ,,தமிழர்கள் மீது  இன்னும்  இரக்கம்  அதிகம்,,,அவர்கள்  இந்த அந்நிய நாட்டில்  வாழுறதுக்கு நிறையக்  கலாசாரப்  பாலங்களைக் கடக்க வேண்டி இருக்குப் போலிருக்கு ,, "

                                         " எனக்கு இதுக்கு பதில் சொல்லும் அந்தளவு  அறிவு எல்லாம் இல்லை,  நானே  ஒரு  சிம்பிள்  ஆள்  ,,,,ஹல்வோர்சன் ,ஆனால் ,இது பெரிய அகன்ற  ஆழமான  சோசியோலோயி  கற்கைநெறி என்கிறார்கள் "

                                       " நான்  அந்த நட்புக்கு  எப்பவுமே  தலை வணங்குகிறேன்,,அதனால் இந்தப்  படத்தை நான் வடக்கு நோர்வேயில் இருந்து இடம் மாறி  இங்கே வரும்போது மறக்காமல் கொண்டுவந்து என்னோடு வைத்து இருக்கிறேன்..."

                                          "  ஹ்ம்ம் "

                                      " நான் நினைக்கிறேன்  முப்பது சொச்சம் வருடங்களின் பின் இன்றுதான் அதை வெளியே எடுத்து உனக்குக் காட்டி இருக்கிறேன், இவளவு  நேரமும் என்னோட  பேசிய  உனக்கும்,,சிசிலியாவுக்கும்  மிகவும்  நன்றி "

                                         "   ஹ்ம்ம்,,மிகவும்  நன்றி  ஹல்வோர்சன்,,நீங்க  உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்க,,இன்னொருமுறை இங்கே  வந்தால் உங்களோடு கதைக்குறேன் ,,ஹல்வோர்சன் "


சிசிலியா  எங்கள் உரையாடலைக் கேட்டே  அதில் உள்ள பல விசியங்களைக் கிரகித்து உள்ளே இறக்கியே களைத்துப்போய் இருந்தாள். அவள் மரவீட்டுக்கு வந்து கோப்பி போட்ட மிச்ச  சுடு தண்ணியில் முகத்தைக் கழுவினாள். கொஞ்ச நேரத்தில் ஜன்னல் , கதவுகள் எல்லாவற்றையும் இறுக்கி சாத்தி வெளிக்கேட்டை பூட்டிப்போட்டு  மெர்சிடஸ் பென்ஸ் கோம்பிரசரரை ஸ்டார்ட் செய்து..... 

                                                .............ஏறக்குறைய ஸ்பில்பேர்க் கிராமியநகரத்தைக் கடந்து ஒஸ்லோ எல்லைவரை வரும் வரை ஏனோ அவள் எதுவுமே பேசவில்லை...........

                                   
அந்த பிரைன் அடம்ஸ் பாடிய சீடியும் போடவில்லை. ஜன்னலை இறக்கி சில்லென்ற காற்று மட்டும் உள்ளே வரவிட்டு ஓடிக்கொண்டு வந்தாள். சொண்டுக்கு விக்டோரியா சிகிரெட் லிப்ஸ்டிக் நாலுதரம் போட்டிருக்க வேணும் அதைத் தொடவேயில்லை . என்ன நினைக்கிறாள் என்று பிடிபடவில்லை . ஸ்பானிஸ் டுனிக்காவை  நல்லா  நெஞ்சுவரை இழுத்து  கீழ  இறக்கி விட்டுப்போட்டு  அதை கஸ்மீரி கொட்டன் சால்வையால் மூடி இருந்தாள்

                                      
ஒஸ்ட்போல் குன்று  மலைகளில் மாலை வெய்யில் மஞ்சள் அடிச்சு கொஞ்சம் சாணிபோல பூசிவிட்ட சரிவுகளில் மோர்க்கோ பறவைகள் கும்பலாக குந்தி இருந்து கதை பேசிக்கொண்டிருந்தது . பாதையோரம்  ஒரு அல்பா ரோமியோ ஸ்போர்ட்ஸ்  காரும் முன்ஹோலம் கொம்பணி   இழுவை ட்ரக்கும் சைட் கொடுப்பதில் இடம் வலம்  பிசகி  இடிச்சுப்போட்டு உரசிக்கொண்டு  நின்றன  . 

                                                  நான் பறவைக் காவடியில்  செதில் குத்தினவனின் முதுகுபோல கொஞ்சநேரம்  நெளிந்து கொண்டு இருந்தேன்,

                              
கார் ஒரு  நேர் ரோட்டில் ஓடத் தொடங்க , சிசிலியா திரும்பிப் பார்த்து

                       "  ஹ்ம்ம்,,,,உங்கள்  நாட்டில்  திருமணம் எப்படி செய்வார்கள்,,ஹ்ம்ம்,,சொல்லு,,,,விபரமா  சொல்லு  கழுதை,,அந்தாளுக்கு  சொன்ன மாதிரி  சடைஞ்சு  சொன்னி என்றால்  உதை வேண்டுவாய்,,சொல்லு கழுதை  .. ஹ்ம்ம்,,,,உங்கள்  நாட்டில்  திருமணம் எப்படி செய்வார்கள் .."

                                    என்றாள்.    அதுக்கு  நான் ஜோசித்துப்போட்டு

                          "   பிறகு ஒரு நாள்  உன்னை  இருத்தி வைச்சு,,கணபதி  ஓமம்  வளர்த்து  , முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன  கேதுனா சந்தே  பத்னாதிதம்... என்று அம்மி  மிதிச்சு சப்தரிஷி மண்டலத்தில் அருந்ததி நட்சத்திரம்  பார்க்கும்போது சொல்லுறேன் "

                                                 என்று சொன்னேன்  , அவள் அதுக்குப் பிறகுதான் பிரைன் அடம்ஸ் பாடின , " One Night  Love  Affair ",  சீடியை   பாடவிட்டாள் .அதில " என்னோட எப்போதும் சேர்ந்து வா  "  என்ற பாடல்  தொடங்க  அவளும் சேர்ந்து பாடத் தொடங்கினாள்,....
.
.
.03.05.2016