Friday 28 August 2015

" பூஞ்சணம்பிடிச்ச பான் ...."

உண்மையில் விமர்சனம்  என்பது மிரட்டல்களுக்கும் உருளைக்கிழங்கு பிரட்டல்களுக்கும் பயந்துகொண்டே தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் பம்முவது என்பதல்ல பதிலாக அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது. விமர்சன விமர்சிப்புக்கள் நம்மை நாமே சுயபரிசோதனை செய்து இன்னும் ஒருபடி மேன்மக்களாக மேலேறிக்கொள்வது என்று நினைக்கிறேன்.

                                             தங்களால் தாயரிக்கப்பட்ட ஒரு படம் என்று சொல்லி ஒரு அன்பர் ஒரு லிங்க் சில மாதம் முன் அனுப்பி அதைப்பற்றி எழுதும்படி கேட்டு இருந்தார். எனக்கு திரைவிமர்சனம் எழுத முடியுமா என்பது எனக்கே ஒரு கேள்வியாக பல காலம் இருந்தாலும்,பல ஆங்கிலப் படங்களுக்கு " இல்லாதவனுக்கு இலுப்பை பூ சர்க்கரை .." போல என்னோட ஸ்டைலில் எழுதி இருக்கிறேன்,

                                       ஒருவேளை அதை நினைத்து அந்த பட லிங்கை சில மாதம் முன் எனக்கு அனுப்பி இருக்கலாம் போல
 . ஒரு படத்தைப் பலர் நேரம்,உழைப்பு செலவழித்து எடுத்து இருப்பதால் அந்தப் படம் என்ன என்று சொல்லி அவர்களின் உற்சாகத்தைக் குறைப்பது மோட்டுக் கழுதைத்தனம் அதால் அந்தப் படம் பெயர் சொல்லப்போறதில்லை.ஆனால் அதைப் பார்த்தபோது தோன்றிய சில விசியங்களை மட்டுமே என்னோட குறுக்காலபோற ஸ்டைலில் சொல்லுறேன்.

                                            பல இடைஞ்சல்களுக்கு நடுவில் முதலில் அதை எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள். எவளவோ  கஷ்டப்பட்டு  நேர விரைய  உழைப்பில்  அதை அதை  ஆர்வமாக  எடுத்து இருக்கிறார்கள் அதுக்குத் தலை  வணங்குகிறேன் . வாய்  பித்தத்தில் புளித்ததோ அல்லது மாங்காய் தான்  புளித்ததோ என்ற  விமர்சனம் போல இல்லாமல் என் வாசிப்பு,சினிமா பார்த்த அனுபவத்தில் இதை சொல்லுவது குறை பிடித்து மட்டம்தட்ட அல்ல பதிலாக அவர்கள் இன்னும் இன்னும் உயர்ந்த தரத்துக்கு முன்னேறிப் போக வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலை மட்டுமே.


                                 "  ஒரு திரைப்படத்தை, குறும்படத்தை ,டாக்குமென்ட்ரியை  விமர்சிக்க  உனக்கு  என்ன  தகுதி இருக்கு, நீ என்ன  பெரிய  அக்குரோ குரோசோவா ,   அப்ப  நீயே ஒரு  படம்  எடுத்துக் காட்டேன்  "  என்று ஒரு வாதம் எப்பவும் வரும். ஒரு தோசைக் கடையில் காசு கொடுத்து தோசை சாப்பிடுறோம். தோசை நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுக்காக அந்த கடை முதலாளி  வந்து  நீ அப்ப  தோசை போட்டுக்காட்டேன்  என்று கேட்க முடியாது. அசிங்கமா இருக்கும் .

                                          எனக்கு அனுப்பிய அந்த படத்தை நான் காசு ஒண்டும் கொடுத்துப் பார்க்கவில்லை. ஓசியில்  இன்டர்நெட் இல்தான்  பார்த்தேன். ஆனால் அந்த நேரம் எனக்கு முக்கியம். நான் செலவுசெய்த அந்த நேரத்துக்கு ஒரு காசுப் பெறுமதி இருக்கு. அதனால் என் கருத்தைப் பொதுவாக சொல்லுறேன். அதுக்கு  முதல்  மஸ்ஜித் மஸ்ஜித்   என்ற  ஈரானியர்  எடுத்த " சில்டர்ன் ஒப்  ஹவின் "  படத்தை பத்து முறை  பார்த்த அனுபவத்தில் உலக சினிமாவின் அடி அளவுகோல் எனக்கும் கொஞ்சம் தெரியும் . அதால சொல்லுறேன்

                                     தொடக்கமே நாலு வீதிகள் சந்திக்கும் இடத்தில நிக்கிற கதை எந்தப்பக்கம் போறது என்று தடுமாறும் அது முதலில் படம் போல இல்லை. ஒரு அளவுகோலில் பார்த்தால் குறும்படம் .கொஞ்சம் டெக்னிகலா சொன்னால் திரையில் ஓடவைக்க எடுக்கப்பட்ட டாக்குமென்ட்ரி போல இருந்தது. ஒரு திரைப்படம் எடுப்பது இலகுவான விசியம் இல்லை. " இருக்கிறவன் அள்ளி முடிஞ்சிக்கிறான், இல்லாதவன் தடவி பாத்துக்கறான் .." என்று போனாப் போ வந்தா வா என்று திட்டம் இல்லாமல் தொடங்கவே முடியாது.

                                                    அந்தப் படத்தின் கதையை  லைனியர் ஸ்டைலில் ஒரு வரியில் சொல்கிறேன் " பூஞ்சணம்பிடிச்ச பானை ஒரு பூனை பார்த்துக்கொண்டு இருக்கு." .......இவளவுதான்! ஆனாலும் என்னைப்பொருத்தவரை இந்த கொன்செப்ட் ஐ characteristics of the individual regardless of the nature or circumstances என்ற அணுகுமுறையில் வேற ஒரு லெவலில் எடுத்து இருக்காலம் போல இருக்கு.

                                                 இந்தப் படத்தின் கமராமான் என்ற ஒளிப்படக் கலைஞ்சர் பல இடங்களில் தன்னோட அலாதியான கைவண்ணத்தைக் காட்டி இருக்கிறார். ஒரு சின்ன நகரம் அதன் குறுக்குச் சந்திகள்,வீதிகள் ,அந்தக் கதை நடக்கும் வீடு, எல்லாத்தையும் ஒரு கன்வஸ் ஓவியம் போல பல படமாக்கி இருந்தாலும் ஒரு சொதப்பல் கதைக்கு அவரால் மட்டுமே கொஞ்சம் வண்ணங்கள் சேர்க்க முடிந்து இருக்கு. வேற என்னதான் செய்ய முடியும் ஒரு டெக்னிசியனால். எப்படியோ அவரின் பார்வை எதிர்கால கோடம்பாக்கப் பிரகாசங்களுக்கு உறுதிமொழி கொடுக்கிறது.

                                                  ஒருதிரைப்படம் எடுக்க முக்கியமா அதுக்கு ஒரு அமர்க்களமான கதை கையிலஇருக்க வேண்டும், அதை இடுக்குகளில் உள்ளே நுழைந்து விசுவல் ஆகச் சொல்ல திரைக்கதை ஆக மாற்ற வேண்டும், அலுப்படிக்காமல் நகர்த்த பூந்துவிளையாடும் வசனம் எழுத வேண்டும் ,தொய்வில்லாமல் அதைக் கமராவில் கதையாக இழுத்துக்கொண்டு பின் தொடரவேண்டும், பிண்ணனி இசை கதையின் ஈரமான பிரதேசங்களில் மழை பொழிய வேண்டும். . இவளவு இருந்தாலும் சில படங்கள் எடுபடாது,,சில படங்களில் இதில ஏதோ ஒன்று குறைவாக இருந்தும் வெற்றிபெறும்.

                                            ஒரு இடைதர நகரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தைப் பார்த்த போது அதில இருந்த மிகப்பெரிய ஓட்டை அந்தப் படத்தை இயக்கிய இயக்குனரின் பரிமாணங்களை கனதியாகப் பிரித்தெடுக்கத் தவறியது தெரிந்து. அந்தப் படமே அரைவாசிக்குமேலே நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில் மிச்சம் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு உயிரோட இருந்து பார்கத்தான் வேண்டுமா என்று மண்டையைக் குடையுது அதன் அசுவாரசியம்.

                                           முக்கியமா என்ன வகையான கதை திரையில் சொன்னாலும் அந்தக் கதையைத் தொடக்கும் நேரம் பார்வையாளருக்கு ஒரு எதிர்பார்ப்பு கொடுக்க வேண்டும், பின்னர் பார்வையாளர் எதிர்பார்க்காத இடங்களில் கதிரை முன் நுனிக்கு கொண்டுவரும் திருப்பங்கள் வரவேண்டும்,முடிவுகள் முக்கியம் இல்லை என்று சொல்லலாம் ஏனென்றால் ஒரு படம் இன்னொரு படத்தின் தொடர்ச்சி , வெள்ளித்திரையில் தவறவிடும் வாழ்க்கைபோல ,,இந்த உத்திகளில் அந்த இயக்குனர் இயங்கவேயில்லை.

                                          கோணையன் கிழிச்சது கோமணத்துக்கு ஆச்சு போல சில நல்ல விஷுவல் விசியங்கள் அந்தப் படத்தில் இருந்தது.ஆனால் அந்த கொன்செப்ட்ஐ இன்னும் கொஞ்சம் டெவலப் ஆக்கி இருக்கலாம். ஏன் அந்த இயக்குனர் அதை மறந்தார் என்று ஜோசித்த போது அவரின் கலைத்துவக் கற்பனைத் திறமையில்தான் சந்தேகம் வருகுது. ஒரு படத்தில் வரும் அழகியல் வறட்சி நிச்சயமாக அந்தப் பட இயக்குனரின் கற்பனை வறட்சியே.

                                      நிறையப் பணம் போட்டு, முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்த ஒரு படம் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும்போதாது அந்த லட்சியத்தை அடைய கடினமான உழைப்பு முதலில் கதையை விஷுவல் கோணங்களில் அகலப்படுத்த வேண்டும், கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ஆசை மட்டும் வைச்சுக்கொண்டு அதற்கான முயற்சியை எடுக்கவில்லையென்றால், பிறகு ஆச இருக்குதாம் அரசனாக, அம்சம் இருக்குதாம் கழுத மேய்க்க என்ற மாதிரித்தான் முடியும்.

                                      வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு. இந்தக் கரணத்துக்காகவே த்ரூஃபோவின் படைப்புகளில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை விரும்பியவர்கள் உலகின் பல பாகங்களில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் என்னோட சொந்த அபிப்பிராயம், ஒரு உணர்வுள்ள கவிதை எழுதக்கூடிய. சுவாரசியாமாக ஒரு சிறுகதை எழுதக்கூடியவர்கள் இயக்குனர்களாக இருக்கும்போது ஒரு திரைக்கதையை விஷுவல் ஆக முடிந்தளவு ரசிக்கவைக்க முடியும்.

                                   இதுக்கு நிறைய உதாரணம் வாய்க்குள்ள நுழையாத பெயர் உள்ள பெர்னாண்டோ பெட்ட  லூ ஸி,  ழான் கோலே, ஜோசப் வான் ஸ்டெர்ன்பெர்க், ரோமன்ஸ் பொலான்ஸ்கி போன்ற   இயக்குனர்களை உதாரணமாக சொல்லலாம். அவர்களின் திரைப்படஉத்திகள் வந்த படங்கள் பெயர் எல்லாம் சொன்னா அதை எல்லாம் வாசிக்க உங்களுக்கு அறுவையாக இருக்க ஒருகட்டத்தில் என்னில கொலைவெறி வரும் உங்களுக்கு.


                                     உலகத் தரமான படங்கள்  என்று  நானும்  பீலா  விடுறன் என்று நீங்க  நினைக்கலாம். ஆனால் அவர்களால் தேர்வு செய்யப்படும் கதைகள் மிக மிக சிம்பிள். அந்தக் கதைகள்  நமக்கு அதிகம் நெருக்கமாக இருக்கும். நல்ல சினிமா  பார்ப்பது எங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோவது. அந்த அனுபவம் மிகவும் திரில் ஆக இருக்கும். 

                                             அப்படி எல்லாம் இல்லை"   நான் படம் எடுப்பேன்  நீ பார்த்தே ஆக வேண்டும் " என்றால் அந்தப் பிடிவாதமாகக்  கண்ணைக் கட்டி " எவடம் எவடம் புளியடி புளியடி .." என்ற கதை போல ஒரு வட்டத்துக்குள்ளேயே நின்று சுழரும்படியான ஒரு நிலையை ஏட்படுதிவிடும் . மனித வாழ்வின்  முக்கிய அனுபவம் சினிமா .அதன் பல் பரிமாணங்களை  நாங்கள்  புரியும்போது  வாழ்வியலின் அபத்த நிலைகளில்  உள்ள சிந்தனைப் போக்குகளை இன்னும்  ஆழமாகப்பதிவு செய்ய முடியும் .

                                  கொஞ்சம் ஜோசித்துப் பார்தால் “ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் மீண்டும்மீண்டும் முயல வேண்டியிருக்கிறது.” என்று லூயி மால் என்ற இயக்குனர் சொன்னதில் நிறையவே அர்த்தம் இருக்குப்போல இருக்கு.

.


27.08.15