Sunday 1 March 2015

‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’

“ பிரபஞ்சத்தை எது உண்டாக்கியது எனும் கேள்வி என்னை எப்போதுமே ஈர்த்துள்ளது. காலமும் வெளியின் புதிராக இருக்கலாம். ஆனால் இது எனது தேடலை முடக்கிவிடவில்லை. . இப்போது வாய்ப்பிருப்பதால் உங்களூடன் என் பயணத்தை பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ” 

                                       என்று குறிப்பிட்டு பேஸ் புக்கில் தன்னோட 72 வது வயதில் இணைத்துள்ளார் " த பிரீப் கிஸ்ட்ரி ஒப் டைம் " என்ற தமிழில் சொல்வதாயின் " காலத்தின் சுருக்கமான வரலாறு " என்ற எளிமையான புத்தகம் மூலம் உலகம் எங்கும் உள்ள அடிப்படை விஞ்ஞான அறிவில் விண்வெளி ஆர்வம் உள்ள எல்லாரையும் மொடேர்ன் பிசிக்ஸ் இக்குள் அழைத்துச்சென்று ஏடு தொடக்கி வைத்த அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் ஹாவாக்கிங்.

                                     சென்ற நூற்றாண்டு பிசிக்ஸ் இன் தந்தை சார் ஐசாக் நியுடனுக்கு பிறகு லூதரியன் பேராசியர் என்ற பதவி வகிக்கும் ஒரே ஒரு பேராசிரியர் ஸ்டீபன் ஹாவாக்கிங்கின் நடுத்தர வயதில் ஒருவித நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு நாற்பது வருடமா தள்ளு நாற்காலியில் இருந்தபடி, வாய் சரியாக பேச முடியாமல் நரம்புகள் இயங்காத நிலையில் கைகளால் கீபோர்டில் எழுத அவர் எழுவதைக் கொம்புடர் மொழி வடிவில் அவரின் உச்சரிப்பில் மொழி பெயர்க்கும் தொழில் நுட்பத்தில் யூனிவேர்சிட்டி இல் படிப்பித்து, அதே நேரம் ஆராய்ச்சி செய்து, பல விண்வெளி உண்மைகளை தியரி வடிவில் கண்டு பிடித்து ,எதிர்வுகூறல் மூலம் பல எதிர்கால சாத்தியங்களை சொல்லியுள்ள ஒரு மொடேர்ன் அஸ்ட்ரோ பிசிக்ஸ் அதிசயம், அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாவாக்கிங்.

                                 அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி ஹவாக்கிங் சொன்னவற்றில் நிறைய குழப்பத்தை உண்டாகிய அவர் சொன்ன சில கருத்துகளில், முக்கியமான " காலத்தில் பின்னோக்கி பிரயாணம் செய்ய முடியாது " என்பதும், அவர் நிறுவிய கருப்பு ஓட்டைகள் என்ற " பிளக் ஹோல் " ஒளி உட்பட எல்லாவற்றையும் " உள்ளுக்க இழுக்காது, பதிலாக வெளியேயும் எறியும் " என்ற அவரின் எடுகோள்கள், மற்றைய விஞ்ஞானிகளின் பல எதிர் கருத்துக்களை உண்டாக்கியது . அவரின் பல தியரிகள் இன்னும் நிரூபிக்கப் படவில்லை,அதனால் அவருக்கு இன்னும் பிசிக்ஸ் இல் நோபல் பரிசு கிடைக்கலை. ஆனாலும் தன்னோட கண்டுபிடிப்புக்கள் ஒரு நாள் நிருபிக்கப்படும் எண்டு உறுதியா சொல்லுறார் ஸ்டீபன் ஹவாக்கின் .

பி பி சி ஒருமுறை அவரை அவர்கள் முக்கிய பிரபலங்கள் தோன்றும் டீவி நிகழ்சிக்கு அழைத்து

‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள்.

‘‘முன்னைவிட சுவாரஸ் யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார்.

‘‘இந்த உடல்நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள்.

‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

                                1942 இல் இங்கிலாந்தில் பிறந்த ஸ்டீபன், படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டிருந்தபோது,காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும் பரிசோதித்தும்,மருத்துவர்களால் அவரின் வருத்தம் என்ன என்று முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.


                               ஆனாலும் ஸ்டீபன் படித்தார் ,கடினமாப் படித்தார் , மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது.. தன்னால் படிக்க முடியும் என்பதே தான் எதிர் காலத்தில் அதிஷ்டசாலியாவதுக்குக் காணும், உடல் அவரின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்து வீல் சேரில் இருந்தபடியே , யாருமே தொட விரும்பாத மிகவும் கடினமான ஒரு பிசிக்ஸ் குழப்பத்தை சவாலாக எடுத்து அதை Phd இக்காக ஆராய்ந்து பல்கலைக்கழக டாக்டர் ஆய்வினை முடித்துப் பேராசிரியர் ஆனார்.

                                       அதன் பின் திருமணம் முடிந்து,இரண்டு குழந்தைகளும் பிறந்தனர் .ஆனாலும் அவரோட நாற்பது மூன்று வயதில் அவரின் நரம்பு நோய் முற்றிய வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்து உடல் நிலை மோசமான கால கட்டத்தில் அவர் மனைவி, குழந்தைகளையும் கூடிக்கொண்டு அவரை ஒரு " பிசியோதிரபி " என்ற " உடல் தசை வலு பயிற்சி " கொடுக்கும் நேர்சிடம் பார்க்க சொல்லிப்போட்டு ஸ்டீபனை விட்டுப் பிரிந்து போயிட்டா.....

                               ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட அந்த நேர்ஸ் ஐ இரண்டாவதாகத் திருமணம் முடித்தார். அந்த நேர்ஸ் பெண்மணி அவரின் மனைவி ஆனபின் அவர் புகழ் பெற்ற அவரின் அஸ்ட்ரோ பிசிக்ஸ் புத்தகம் " த பிரீப் கிஸ்ட்ரி ஒப் டைம் " எழுதி முடித்து வெளியிட்டார்.

                                  ‘‘ உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன் இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளிஉலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுதமுடிகிறது " என்று சொன்னார் .

                           மிகவும் கடினமான மருத்துவ நிலைமைகளை எப்பவும் கடந்து வந்துகொண்டே ,உலகத்தை அவரின் விஞ்ஞான அறிவால் அதிசயிக்க வைக்கும் அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹவாக்ஸ்கிங் வாழ்க்கை வரலாற்றை , ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இன் அசைக்க முடியாத கண்டுபிடிப்பான , இன்றைவரை முழுதாக இன்னும் யாருமே நிறுவி முடிக்காத " த தியரி ஆப் எவிரிதிங் " என்ற தியரியின் பெயரில் ,ஸ்டீபன் ஹவாக்ஸ்கின்ஸ் இன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆக விரைவில் வெளியாக உள்ளது எண்டு சொல்லுறார்கள் ..

                           ஸ்டீபன் ஹவாக்கின்ஸ் சில வருடம் முன் , பூமியின் புவிஈர்ப்பு விசை இல்லாத, " எம்டி ஸ்பேஸ் " என்ற மிதக்கும் விண்வெளியின் விளிம்பு வரை விசேட விமானத்தில் போய் ,அங்கே விமானத்தின் உள்ளே " சீரோ கிரவிடேசனால் போர்ஸ் " என்ற " அந்தரத்தில் பறக்கும் " அவரின் நீண்டகால விருப்பம் நிறைவேறிய சம்பவத்தை உலகம் எங்கும் உள்ள டெலிவிசன் நிறுவனங்கள் அவர்களின் செய்திகளில் முக்கியத்துவம் கொடுத்து காட்டினார்கள்...

                                         சிலரால் தான் சில வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் உயிர் போலக் கொடுக்க முடியும் ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்ற வார்த்தைக்கு அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி ஹவாக்கிங் நிச்சயம் கொடுக்க முடியும்........

நாவுக் அரசன்
ஒஸ்லோ 04.11.14.




பக்கப் பார்வையில்...

காகங்கள்
நாங்கள்  
ரசித்துப் பார்க்க
நேரம்
ஒதுக்குவதில்லை...  

ஏதோவொரு
தருணத்தில், 
மரத்திலிருந்து
மதில் சுவரிலிருந்து
கரண்ட் வயரிலிருந்து  
திடீரென
எதிர்பாராமல்
பறந்து  வரும்.... 

அவசரமாக 
யாரும் கிட்ட
நெருங்க முடியாதபடி
வியூகம் அமைத்து 
படிப்படியாக  பத்துக் 
குவிய ஆரம்பிக்க
இரைச்சலாக 
சம்பாஷனை
தொடங்கும்.....

பக்கப்
பார்வையில்
நிலையில்லாமல் 
பார்த்தபடி  
பதட்டமான
ஒன்று கூடலை
நாங்கள்  
வழமை போல 
நிதானமாகப் 
பார்க்கத் தொடங்க 
பக்கவாடில் 
பறந்து போகும்...

சரியாக 
உற்று நோக்கினால், 
நடப்பது 
அவசரம்  என்பதை விட
அந்த அவதியில் 
ஏற்படுத்தப்பட்ட
கவனயீர்ப்பே 
முக்கிய பங்களிப்பது
தெரிய வரும்...

காகங்கள் 
எப்போதும்
சாதாரண சவால்களை 
எப்போதும் 
அசாதாரண நிலைமையில் 
விரும்புவதால் . 
அதிசயங்களும்
மர்மங்களும்
அதற்கு மிகவும் 
விருப்பமான
ஒன்றாகி விடுகிறது.


திருப்பிக் கொடுங்கள்

எதைக்
கடல்ப் பயணங்களில்
திருடினீர்களோ
அதை முதலில்
திருப்பிகொடுங்கள் 
அப்போதுதான்
எதிர்கால
உத்தரவாதங்களை
நிபந்தனையின்றிப்
பெறமுடியும்.....
நீல வானத்தின்
கல்யாணக் கனவு
வண்ணத்தையும்,
கடல்ப் புறாக்களின்
தென்மாங்குக் காதல்
பாட்டையும்,
அலைகளின்
செல்லோ வயலின்
இசையையும்,
பாய் மரங்களில்
புயல் எழுதிய
ஒப்பாரியையும்,
கடலின்
ஆழிவரை ஆழமான
கவிதையையும்,
உப்புக் காற்று
விரித்து வைத்த
புத்தகத்தையும்,
முதலில்
திருப்பிகொடுத்து.....
உள்ளதில் இருந்து
உருவாக்குபவராகுங்கள்
இதை
மறுதலித்து
எதிர்த்துப் போய்
இல்லாத ஒன்றில் .
உயிரோட்டமுள்ளவராக
நீங்கள்
இருக்கவே முடியாது.



என்னைப்பற்றி ...

கடந்துபோன
கசப்புக்களை
நான்
கோபிப்பதில்லை
இப்பவும்
நல்ல மனிதர்களை
நேசிக்கவும்
தவறுவதில்லை...

இருட்டுப்போல
இறுக்கமான
மன நிலையில்
காற்று வந்து
காது மடல்களை
வருடிச் செல்ல

அமர்க்களமான 

மனிதர்களின் 
ஆரவாரமான
நகரத்தின்
அமைதியான
தெருக்களின்
வழியாக
அலைந்து திரிந்து

இதயத்தில்
ஆரம்பித்து
இன்று
புதிதாய் பிறந்தேன்
என்று
நம்பிக்கையைக்
கைப் பிடித்து
நாளைய
பொழுதுக்கு மட்டும்
நடை
பழகிக்கொண்டிருக்கிறேன்..

வார்த்தைகள் தேடிய சருகுகள்...

தொடங்க வேண்டிய
சரியான
தருணத்திற்கு
எல்லாமே
காத்துக்
கொண்டிருக்கிறது
மரணித்த மரத்தின்
அருகிலே
அழுதுகொண்டிருக்காமல்
அடுத்தகட்ட நகர்வில்
இயற்கையின்
விதி
இயல்பாகி

வரவைச்
சொல்லமுடியாமல்
தவித்துக்
கொண்டிருந்த
உயிர்ப்பு
துணிந்து
வறட்சியை விட்டு
வெளியே வருகிறது ..
மவுனத்தை
இனியும் தாங்க
முடியாமல்
வசந்தகால
வார்த்தைகள் தேடிய
சருகுகள்
பேசத் தொடங்குகின்றன...
சமாளிக்க
சாதகமான
காற்று வீசும்
நேரத்திற்க்காக காத்திருந்து
சிறகை விரிக்கிறது
குருத்து ....
விழுந்த
மழைத்துளியை
முத்தாக மாற்ற
இறுக்கி மூடிக்கொள்கிறது
மண்
எல்லா எல்லைகளையும்
எல்லா தடைகளையும்
தாண்டி
வேர்களையும்
ஒளியையும்
நம்பி
நேரம் நெருங்க
அதன்
ஜெனன ஜாதகத்தை
எழுத
துளிர் விடுகிறது
விதை..