Thursday, 26 April 2018

வண்ணாத்திப்பூச்சியின் காதல்


என்னதான் நானே எழுதினாலும் இன்னும்தான்  கவிதை பற்றிய நிறைவான ஒரு கோட்ப்பாடு என்னிடம் இல்லை, அதனால அதை  அறிய  இலக்கிய விமர்சகர்கள் எழுதிய  கட்டுரைகளை  எப்போதும்  வாசிப்பது . அதிகம் அலட்டிக்கொண்டு இருக்காமல் " கவிதை விமர்சனம் " என்ற வகையில் " கவிதைகளின் நேரடித்தன்மை " என்ற தலைப்பில் வா.மணிகண்டன்  என்னும் கவிஞ்சர் எழுதிய நீண்ட கட்டுரையில் உள்ள ஒரு கருத்தை  சுருக்கமாக அப்படியே தருகிறேன். மிக எளிமையாக அதே நேரம் ஆழமான ஒரு கருத்தை அவர் சொல்லி இருக்கிறார். 

                                                            " கவிஞன் தனது வாழ்வியல் அனுபவத்தை கவிதையில் அடர்த்தியாக தர முயற்சிக்கிறான். அனுபவத்தை அதீத அடர்த்தியாக்குவதற்கு கவிதையின் வடிவத்தில் மேற்கொள்ளப்படும் சில மாறுதல்கள் உதவக் கூடும். வார்த்தைகளை நீக்குதல், மாற்றியமைத்தல், வரிகளை மடக்குதல் போன்ற யுக்திகளை கவிஞன் தனது கவிதையைச் செறிவாக்கும் பொருட்டே செய்கிறான். பயிற்சியுடைய கவிஞன் ஒருவனால் கவிதைக்குள்ளாக சில சொற்களை மாற்றியமைத்து கவிதை தரும் மொத்த அனுபவத்தையும் திசை திருப்ப முடியும்."


                                                       ஒரு பானை பழஞ்சோறுக்கு  தொட்டுக்கொள்ள ஒரு துண்டு நாரத்தங்காய் உறுகாய்போல இப்படி சொல்லி இருக்கிறார் கவிஞ்சர் வா மணிகண்டன். அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க. 


வண்ணாத்திப்பூச்சியின் காதல் 
எந்தவையென்று 
எப்பவாவது அதனிடம்
காற்றை முன் நிறுத்தி வைத்து 
விசாரித்திருக்கிறோமா ?
இல்லையே !
அதையெல்லாம் விட்டுவிட்டு
படிமங்களை
அதன் சிறகுகளில் ஏற்றி
பறப்பதைச் சிக்கலாக்கினோம் ,
நனவோடை உத்தி என்று
குறுக்குவழிகளில்
புத்தி சொல்லிக்கொடுத்தோம்,
தேடல் என்ற பிரயோகத்திலதன்
சுயநிர்ணயத்தை
மொத்தமாகக் களவாடினோம்,
தேர்வுசெய்த
தோல்வியின் விபரிப்புகளுக்கோ
கனவுகள் காணாமல்போதலுக்கோ
அதன் பெயரைப் பாவிப்பதுக்கு
முன் உத்தரவுகள் வாங்குவதில்லை,
பயங்கரமான சொல்லாடல்களில்
அதன் பெண்மைப் பாதுகாப்பே
பதறிக்கொண்டது,
திடீர் திருப்பங்களென்று
அதன் பழக்கப்பட்ட திசைகளை
மாற்றிவைத்தோம் ,
கவிதைமொழிப்பற்றி அதனுடன்
ஒருநாள்த்தன்னும்
கலந்துரையாடியதில்லை !
ஒதுங்கிக்கிடக்குமதன்
ரகசிய விருப்பங்களையும்
பிரத்யேகமாக சேர்த்து வைத்திருக்குமதன்
காதல் குறிப்புகளையும்
கணக்கில் எடுத்ததேயில்லை !
இப்படித்தான்
அதீத பலாத்காரங்களுடன்
தப்பிப்போகாதவாறு
கவிதைகளில் உள்நுழைக்கப்பட்டு
அடிவேண்டியே செத்துப்போன
அட்ப ஜீவன்
வண்ணாத்திப்பூச்சி !


.........................................................................................

எதிர்பார்த்த வேகத்தைவிட 
தயங்கியபடியே 
எத்தனையோ வருடங்கள் 
அலைக்கழித்தும் கலையாமலிருந்த
அந்த சந்திப்பு 
இரண்டு புள்ளிகளை இணைக்குமிடத்தில்
தூக்குமாட்டிய தற்கொலை போலிருந்தது!
ஒன்று
அமரஜீவிதக் காதலும்
அசட்டுத்தனமான காமமும்
நேரடியாகவே சம்பந்தப்பட்டது !
இரண்டாவது
குற்றமும்
அதுக்கான தண்டனையையும்
மேலோட்டமாக உரசிச் செல்வது !
ஆனால்
ரெண்டையும் சேர்த்து
அந்தப் பழைய சம்பவம்
ஒரு
நேர் கோட்டில் மேலும்கீழுமாகவே
தலைகீழாக அறையப்பட்டிருந்தது !
எனக்கு
கட்டுப்பாடுகளிலும்
சுதந்திரத்திலும்
காற்றில் பறப்பது போன்ற ஆயாசங்கள்
அப்போதெல்லாமிருந்தது !
மறப்பதை விடவும்
மன்னிப்பதில் குறியாகவேயிருந்தேன் !
நேர்தியாகத் திட்டமிட்டு
நகர்த்திய வியூகங்களைப்
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை !
ஆனாலும்
ஒரு கட்டத்தில்
அவள் உடைந்துபோய்க்
குமுறி அழுத நிமிடத்தை
இப்பவும்
பொக்கிஷமாகவே சேகரித்துவைத்திருக்கிறேன் !


.....................................................................................................

தனித்தனியாக நின்று 
இருட்டின் 
மொழிபெயர்ப்புகளை 
உறக்கமின்றி 
ஒன்றோடொன்று தொடர்பிளக்கச் செய்யும் 
கனவுகள் !
பயணமாகிக் கொண்டிருக்கும்
நெடுந்துராப் பாதையில்
அச்சம்தரும் அமைதி !
இருத்தலைப்
பொறுமையோடு அணுகிக்கொண்டிருக்கும்
வெவ்வேறு கணங்களில்
அருகருகே
வெளிச்சக் குறுக்கீடுகள் !
ரகசியமாகப் படர்ந்திருந்தாலும்
நிசப்தங்களை
நீட்டிக்கொண்டேயிருக்கும்
நிசி மவுனம் !
இதெல்லாம்
இயங்கக் காரணமாயிருக்கிற.
இரவின் குரலை
எப்போதாவது
கேட்டேவிடுவதென்று முயட்சித்த
அத்தனை நாட்களிலும்
முதலில்த் தூக்கம்
அப்புறம் தான் மற்றதெல்லாமென்று
சொல்லாமலே
விடிந்துவிடுகிறது !


...............................................................................................

முன்னெப்போதுமில்லாதவாறு 
உனக்கேயான 
ஒவ்வொரு நொடிகளையும் 
நினைவாக்கிவிடு !
வயதான தம்பதிகள் 
மர வாங்கில் நெருக்கமாகி
கைகளைப் பிடித்துக்கொள்கிறார்கள் !
வாழ்ந்துகொண்டிருப்பதே
ஒருவிதமான
ஆதிக்கும் அந்தத்துக்குமிடையிலான
அட்புதமான குறுக்கீடு !
பள்ளிக்குழந்தைகள்
ஓவென்று கத்திச் சிரித்தபடி
பாதையைக் கடக்கிறார்கள் !
என்னை
முடிவில் திட்டுவதை நிறுத்து
நான்
கருவில் உருவான
பிறப்பின் ஆரம்பத்திலிருந்தே
உன்னோடு பயணிக்கிறேன் !
ராத்திரியின்
அளவுக்கதிமான ஸம்போகத்தில்
மேலாடைகள் கலைந்த
நகர வீதிகளின் நிசப்தம் !
உன்
இறுதிக்கணப் பாடலை
இப்போதே எழுதி எடுத்துக்கொண்டு
வீரனைப்போலவே காத்திரு !
காற்றின் திசைகளை
தேர்ந்தெடுத்துக்கொண்டு
தேவாலய மணிகள்
விட்டு விட்டு அடித்துக்கொள்கிறது !
என்
ஆத்மாவின் தேடலைப் புரிந்துகொண்ட
ஆழ்மனதின் கெஞ்சலுக்கு
இப்படித்தான்
கடைநிலை விளக்கம் தருகிறது
மரணம் !


..............................................................................

மனமகங்காரம் 
அவ்வளவு இலகுவாக 
சமயங்களில் விட்டுக்கொடுக்குதில்லை, 
மோனத்தை ஆனந்தமாக்கும் 
செப்படி வித்தைகளும் 
பிடிபடுகுதில்லை,
அப்பட்டமாகச் சொல்வதென்றால்
விழிப்புணர்வின்றி
நாளைகளை களவெடுத்து
இன்றோடு பொருத்திக்கொண்டு
அத்தமில்லாக்
காலத்தில் வாழ்ந்து போவது குறித்து
வருத்தப்படமுடியவில்லை !
மேன்மையானவொன்றை இழக்கிற
கவலை
உதறி எழ முடியாதவாறு
ஆக்கிரமிக்கிறது !
இன்னும் இன்னும் வேண்டுமென்ற
மனப்பான்மை
ஆழ்ந்த விவாதத்திறகுரிய
எளிதில் மறுக்கவியலாத
நோக்கங்கள் நோக்கி
வழி நடத்தும் பொறுப்பிருப்பதாகவும்
நம்பமுடியவில்லை !
புரிகிறதோ
இல்லையோ
ஆழ்மனக் கொந்தளிப்புக்களை
முடிந்தவரையில் அடக்கிக்கொண்டு
நேர்மையான
சிருஷ்டிகர்த்தாக்களுக்கு
உண்மையானதை விட்டுக்கொடுத்து
ஒதுங்க வேண்டியதுதான்.!


.....................................................................................

முதல்முதலா 
உங்கள் வெளிறிய முகத்தைக் 
கதவை திறக்கச்சொல்லும் வெளியில்
காற்றோடு அறிமுகமாகித்தான் 
பார்த்தேன் !
என்
உறவுமுறை தேடிவந்த
உங்களுக்கு எதுக்கு
முகம் சட்டேன்று வெள்ளையானது ?
அது எனக்கும் புரியவில்லை !
தலைமுறைப் பிறழ்வுகள்
நீண்ட தூரங்களை அனுமதிக்கும்
பார்வைப்பரிமாற்றத்தில்
அளவில்லா அதிர்ச்சிகளை
நீங்கள்
எதிர்பார்த்திருக்க நியாயமில்லை !
ஒருவேளை
அந்த இடத்தில என்னை
பலவருடம் முன்னைய
பால்ய நாட்களில்
அடையாளம் கண்டிருக்கலாம் !
அதில் தான்
என்
வயதை நேரடியாகச் சந்திக்கிறீர்கள்,!
இரண்டாம் முறையாக
கதவைத்திறந்து நீக்கலாக விட்டு
காலத்தைக் கொஞ்சநேரம்
கசியவிட்டேன் !
நீங்கள்
மேம்படுத்தல்களில்லா
எனக்குரிய வாசனையை
அடையாளம் கண்டதுபோல
தலையைக் குனிந்துகொள்கிறீர்கள்,
தயைகூர்ந்து
அம்மாவின் சாயலோடிருக்கும்
என்னை
நானே
எனக்குள்ளே
பத்திரமாக வைத்திருப்பது பற்றி
யாருக்கும் சொல்லிவிடாதீர்கள் !


..........................................................................

சாதாரணமான பார்வையில்
எளிதாகவே
கவனிக்கப்படாமல் தப்பிவிடும்
சின்ன விபரங்கள்,
பிரத்தியேகமாக அனுபவங்கள் 
எதிர்கொள்ள விரும்பாத
நேரடியான யதார்த்தம்,
நீண்ட கதைகளாகவேண்டியதை
வரிகளுக்கிடையில் சுருக்கிவிடும்
நரித் தந்திரங்கள்,
நல்ல சந்தர்பங்களைத்
தள்ளிப் போட்டுவிடும்
அசந்த மன அழுத்தம்,
இன்னார் என்று பெயர்சொல்லி
இந்த இடத்திலென்று குறிப்பிடமுடியாத
இணைக்கப்பாடுகளற்ற
கணநேர சம்பவங்கள்,
எந்தச் சந்தேகங்களையும்
சிக்கலாகிவிடும்
போதையேற்றும் கற்பனை ,
நிறைவேற்றமுடியாத
மவுன வெளிகளில்
தனித்து நின்று கேலிசெய்யும்
மொழிப்பிரயோகம்.
சில உண்மைகளையும்
பல பொய்களையும்
நம்பும்படியாகவே
உருவாக்கிய விதம் ,
இவற்றோடு போராடித்தான்
ஆச்சரியங்கள் தருகின்ற
ஒரு கவிதையை
எழுதிமுடிக்கவேண்டியிருக்கு !


.......................................................

கறுப்பு நிறத்தை 
நேருக்குநேர் சந்திக்க 
வெறிச்சோடிக்கொண்டிருக்கும் 
இரவுநேரத்தெருக்கள்,
கரண்ட் வயரின் 
மீதமர்ந்து பாடிக்கொண்டிருக்கும்
மோர்கோப் பறவைகள்,
சின்ன வெளிச்சக்கீற்று
வசீகரமான கட்பனையாக
அடிவைக்கத்தவறிய வேகத்தில்
முன்னோக்கி விழுந்தேன் !
விவரிக்கமுடியாத
பயங்கரவலி முள்ளந்தண்டில் !
மொத்த உலகமும்
என்
தோல்வியால் போர்த்தப்பட்டு
மென்மஞ்சளாக மங்கியது,!
மனதின்
கபடமான பகுதி
திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்கிறது,
தடுமாறும் மற்றையபகுதி
பைத்தியக்க்காரத்தனமாக
முடித்து வைக்கப்போகிறதென்கிறது !
வயதாகும் வயது
மறைமுகமாகக் கிண்டல்செய்கிறது
என்பதே என்னோட சமாதானம் !
முற்றிலும் மாறுபட்ட
தொனியில்
முனகிக்கொண்டு எழுந்துவிட்டேன்!
விழுகிறதே
எழுவத்துக்குத்தானே
என்றுசொல்லி முடிப்பதுக்குள்
ரெண்டாவது முறையும் சறுக்கிவிட்டது!


.....................................................................................

என்னை
வேகமாக உந்திச் செலுத்தி
நான்
அறிந்திருந்கும்
முன்னரங்க எல்லைகளை 
உடைத்துக்கொண்டே தகர்த்து
வலிகளையே
வார்தைகளாக்கும்
மிக முக்கியமானவொரு
சம்பவத்தில் முழுமையடையாமல்
தொக்கி நிக்கிறேன் !
உள்வாங்கி உச்சக்கடத்தில்ப்
பாவிக்க வேண்டியிருந்த
கவிதைமொழி
கடைசி நேரத்தில்
புத்தியையைக் கபடமாகக்காட்டிப்
பின்வாங்கிவிட்டது !
ஒரு
குறிப்பிட்ட
பின்விளைவுச் செயல்பாட்டில்
கைகளை பிசைந்தவாறு
ஏதுமில்லாமல்
திரும்பிப் பார்க்கையில்
இழந்தவை அத்தனையும்
சமாதானம் சொல்லி ஈடாகுமாவெனும்
சின்னக் கேள்வியை
பெரிய வரலாற்றிடம் கேட்கிறேன் !
விட்டுக்கொடுப்புகளற்ற
கபடத்தனமான வரலாறு
அந்தக்
கனதியான கேள்விக்கு
சீரழித்துக் கொண்ட
மிருகத்தின் மூர்க்கத்துடன்
இப்போதும்
ஆம் என்றே பதிலுரைக்கிறது. !


.................................................................................

முடிந்தவரையில் 
உன் 
சின்னச் சிரிப்புக்குள் 
ஓராயிரம்
உணர்ச்சிகளை மறைத்துவிடு !
பார்வைக்கு எட்டியவரையில்
வசந்தகால மரங்கள்
பூக்கத்தொடங்குகின்றன !
அதிகமதிமாய்த்
துயரங்களோடு
அங்கலாய்த்துக்கொண்டே
அலைக்கழியாதே
நன்றாகவே நடந்தால்
கொண்டாடிவிடு !
முன்கோடைப் பறவைகள்
கீழ் வானத்தை
சின்னச் சிறகில் மிதந்து
இன்னுமின்னும் விரித்துக்கொண்டிருக்கின்றன !
தோல்விகளைத்
தூசிதட்டிக்கொண்டிருக்காதே
நாளைக்கான
அனுபவமாக்கிவிடு !
பார்வையற்றவொருவன்
மிகத் தெளிவாக
வழி தேடியெடுத்துக்கொள்கிறான் !
முன்னிருக்கும்
சவால்கள் எல்லாவற்றையும்
சந்தோசமாய் எதிர்க்கொள்ளு !
சின்னவனுக்கு
சைக்கிள் பழக்கும் அப்பா
முதன் முதலாகக்
கைகளை விடுவித்துக்கொள்கிறார் !
என்
அர்த்தத்தேடல்களைப் புரிந்துகொண்டு
ஆழ்மனதின் குரலுக்கு
இப்படித்தான்
உரைநடை விளக்கம் தருகிறது
வாழ்க்கை !

Wednesday, 25 April 2018

உதவி கிடைக்குமா ?

இதுதான் சொல்லுறது கிடாய் ஆடு அறுக்க முன்னம் அதன் ...க்குப் பங்குகேட்டு முந்தக்கூடாது எண்டு. பொறுமை என்பது சிலநேரம் காலத்தை எம் கண்ணுக்கு முன்னேயே நீட்டி வைத்துக்கொண்டேயிருக்கும் . அதன் முடிவுவரையில் அதனோடு ஒருங்கிசைந்து போவதுக்கு எப்போதும் அசாத்தியமான மன ஒடுக்கம் வேண்டும் . 

                                                       அல்லது ஒரு இடத்தில அதன் தாங்குதிறன் வெடிக்கும் போது எப்போதுமே ஒரு சின்னப் பிரச்சினை அனாவசியமான கலவரத்தால் பெரிய பிரச்சினையாகிவிடலாம்.அதன் பிறகு ஆற அமர இருந்து ஜோசித்தால் அட இதுக்குப் போயா போயும் போயும் இந்தக் குதி குதிச்சோம் என்று ஆசுவாசமாக இருக்கும், 

                                                            ஆனால் ஒரு செக்கன் முன்னால் நடந்தது காலத்தின் கோணத்தில் நடந்ததே முடிந்ததுதான். உண்மையில் இந்தப் பொறுமையைச் சோதிப்பது மிகவும் அவசரமான நேரங்களில் அரசாங்க வேலையில் பொறுப்போடிருக்கும் மனிதர்கள் வழங்கும் சேவைகளில் தாமதங்கள் வரும்போதுதான்
கிட்டதட்ட ஒரு மணித்தியாலயம் நோண்டு நோண்டு எண்டு நோண்டி ஸ்பானிஷ் ஸ்டைலில் டிகிரிலினி பாஸ்தா லாமியா லாரின்னிக்குச் சமைத்துக்கொடுத்தேன், சாப்பிடத் தொடங்குமுதல் அவள் அந்த விலாசமும், அந்த தொலைபேசி இலக்கம் எடுத்து தந்தாள். அந்த இடம் அவசர வைத்திய சேவைகள் ஒருங்கிணைப்பு நிலையம். சில சேவைகளை அவர்களிடம் இருந்து பெறவேண்டிய அவசரத்தில் நான் இருந்தேன் .
                                                                            அந்தக்கிழமை முழுவதும், அவசர சேவையாக இருந்தபோதும் ஒரு வெளியக உதவி தேடுபவராக இருப்பதால். அந்த சேவை எனக்கு கிடைப்பத்துக்கும் கிரிஸ்மஸ் விடுமுறைக்கும் இடையில் மாட்டி ஐந்து நாட்களை தொடராக இயங்காமல் செய்துவிட்டது.
லாமியா லாரின்னி தந்த அட்ரசுக்கு டெலிபோன் அடிக்காமல் நேராகவே போனேன். தெருவெல்லாம் உறைபனிக்கு மேலே இரவு மழை சாந்திமுகூர்த்தம் போல விடிய விடிய கட்டிப் பிடித்துப் பிரண்டு விளையாடி ஏறக்குறைய அகல நடைப்பாதைகள் சேறும் சகதியுமாக ஆரம்ப கட்ட வரவேட்பே ரணகளமாக இருந்தது.
                                                                               மேற்பரப்பில் மெண்மையாகப் பஞ்சுகளால் மறைத்து உள்ளே பதுங்கி இருந்த கண்ணாடி உறைபணியில் இரண்டு இடத்தில வழுக்கி விழுந்து எழும்பி ,இன்னொருமுறை சறுக்கினால் அவசர வைத்திய சேவைகள் ஒருங்கிணைப்பு நிலையதுக்கு அம்புலன்சில்தான் போகவேண்டும் போல காலநிலை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருந்தது .
குங்ஸ்ஹோலாம் என்ற கிழக்கு ஸ்டோக்ஹலம் நகரின் நடுவில் பன்னிரண்டாம் நூற்றாண்டு குஸ்தாவ்வாச மன்னன் காலத்தில் கட்டியது போன்ற பழையகால கட்டிடத்தில் அந்த " அ வை சே ஒ நி " நிலையமிருந்தது. எதிர்பார்த்ததுக்கு எதிர்மாறாக ரிஷப்சனில் இருந்த அழகான இளம் பெண் மத்தியகிழக்கு மூக்கிலே இரான் வெள்ளை முகத்துடன் நின்றாள், 
                                                                          
நூறு வீதம் பந்தயம் கட்டிச் சொல்லலாம் சுவீடிஷ் இனத்தவள் இல்லையென்று. ஏழு வருடங்கள் முன்னர் பஞ்சம் புழைக்க உடுத்தியிருந்த  கட்டுத் துணியோடு  சுவீடனை விட்டுப் போட்டு  பக்கத்துக்கு நாடான சுவீடனுக்கு  முறை மச்சான்  முறையான  நோர்வேக்குப்  போனபோது இப்படி இடங்களில் பொன்னிற முடி சுவிடீஷ் வெள்ளைகளே வேலை செய்தார்கள். 

                                 இப்போது அதெல்லாம் அதரப்பழசான பழங்கதை!

" அ வை சே ஒ நி " ஆனா பட்டியால போன உடனேயே வெத்திலை பாக்கு வைச்ச மாதிரி, 
                                                 " உனக்கு என்னதான் பிரச்சினை,,நாங்கள் எப்படி உதவ முடியும் "
                                                           என்ற கேள்வி உள்நுழைந்து சில நிமிடங்களில் அந்த ரிசப்ஸ்டேனிஸ்ட் இடமிருந்து வந்தது . அப்போதுதான் நான் அவளைக் கொஞ்சம் கவனிச்சுப்பார்ப்பமா என்று நினைச்சேன், 
                                                                          ஆனால் போன அலுவல் கொஞ்சம் தலையில் பிக்கான் போட்டு நெம்புற மாதிரியான உடல்நலக்குறைவு " இனியும் பொறுக்கமாடேன் கையை விடப்போறேன் " என்ற எமெர்ஜெஞ்சி நிலைமை சம்பந்தமானது. ஆனாலும் அவள் சுவிடீஷ் பாஷையை எப்படி உச்சரிப்பில் கலந்து கொடுத்து கதைக்கும் விதத்தைக் கவனித்தேன்.
                                                                            அவள் கதைத்த சுவீடிஷ் மொழியில் அரபி வினைமுற்றுக்கள் எழுப்பும் சத்தம் உரத்து வந்தது. கடுமையான தொனியில் வாள் போல வீசும் கண்களால் சத்தங்கள் இன்னும் கொஞ்சம் பயப்பிடும்படியாக வேகமாகக் கதைத்தாள் .
                                                                  நான் நோர்வேயில் பல வருடம் வசித்துவிட்டு வந்ததால் என்னோட சுவீடிஷ் உச்சரிப்பில் நோர்க்ஸ் அதிகமாக இருந்தது, அதை அவள் சடாரென்று கவனித்தாள்,எனக்கு சுவீடிஷ் கொன்னை தட்டுறமாதிரி வந்தது ,அதில் நான் எப்படிவிளக்கமாகச் சொல்வது என்று ஜோசிக்க ரெண்டாம் முறையும்
" உனக்கு என்னதான் பிரச்சினை,,நாங்கள் எப்படி உதவ முடியும், நோர்வேயில் இருந்து வந்திருக்கிறாயா ?, அல்லது ? நீ நோர்வேயியனா ? "
                                                                  என்ற கேள்வியை அரபிக்கள் விசிறும் ஸ்டைலில் என்னப்பனே அய்யப்பனே என்று பெங்களூர் ரமணியம்மா போல கை ரெண்டையும் விரிச்சுப் பாடுவதுபோலக் கேட்டாள். .நான் அவளுக்கு என்னோட பிரசனையைச் சொன்னேன். என்னோட மக்கள் வதிவிட சமூக விலங்கு அடையாளமான நம்பரைக் கேட்டாள் . சொன்னேன், 
                                                         
சடக்கு சடக்கு கணனியில் மஜெந்தா நிறத்தில் நெயில் போலிஸ் போட்டு, அழகாக கவனமெடுத்து வெட்டிய நகங்களுக்கு நோகாமல் எட்டு விரல்களுக்கும் வேலையைக் கொடுத்து குத்தினாள். குத்திப்போட்டு ஏதோவொரு வரவுக்காக காத்திருந்தாள். எடக்கு முடக்கான  திருப்பத்தில குளுவன் மாடு திருத்த வருமே அதுபோல என்னமோ வந்த மாதிரி வெருண்டு அடிச்சு,  என்ன வந்திச்சுதோ தெரியவில்லை சடாரென்று என்னைப் பார்த்தாள் .
" உன்னோட மக்கள் வதிவிட பதிவு இலக்கம் சரியா,,அல்லது பிழையாக சொல்லியிருக்கிறியா"
" இல்லையே,,இன்னொருமுறை சொல்லுறேன் ,,"
" சரி சொல்லு, ஒவ்வொரு இலக்கமாக இடைவெளி விட்டு சொல்லு, கடைசி நாலு கொண்ரோல் நம்பரையும் கவனமாகச் சொல்லு,,இங்கே என்னவோ உதைக்குது "
" என்ன உதைக்குது "
" அதுதான் தெரியவில்லை,,இப்ப திருப்பி அடிக்கவும் அதே பதில்தான் வருகுது "
" என்ன பதில் வருகுது "
" உனக்கு இந்த " அ வை சே ஒ நி " இடத்தில உதவி கொடுப்பதும் சில தடைகள் இருக்கு என்று சொல்லுது "
" அப்படியா என்ன தடைகள் அது "
" அதுபற்றிய விபரங்கள் இங்கே இல்லைப்பா,,,"

" ஏன் இல்லை ,,கணனி திரையை என்பக்கம் திருப்பு,,நான் வாசிக்கிறேன்"

",வருமானவரித் திணைக்களம் தான் அந்த முடிவுகளை எடுத்து இங்கே வார்னிங் போல டேட்டா ப்ளாகிங் அனுப்பி இருக்கிறார்கள் "

" என்னது,,,சொல்லுறாய்"

"வருமான வரி ஒழுங்கா கட்டினால் தான் அரசாங்க சேவைகள் கிடைக்கும் பா.  அனுவல் டாக்ஸ் இன்கம் செலுத்தாமல்  வெருட்டி மருட்டி .ஓசியில நீ அலுவலைக் கொண்டுபோக சுவீடிஷ் அரசாங்கம் என்ன உனக்கு தாலி கட்டின பொண்டாட்டியா   "

"வரி பலவருடம் காட்டவில்லை எண்டுறது உண்மைதான்,,அதுக்காக அவசர  மருத்துவ சேவையுமா ஒரு மனிதனுக்கு கிடைக்காமல் செய்விங்க   "

" குழம்பாதை,,சிம்பிளா கேட்க்குறேன்,,ஏன்பா நீ வரி காட்டவில்லை  அல்லது கட்டவில்லை ,ரெண்டுல எதுவோ ,என்னமோ எதுவா இருந்தாலும் நீ ஏன் அதை செய்யவில்லை  ,,பதில் சொல்லுப்பா "
" நானென்லாம் வெள்ளையனுக்கு எந்தவிதமான வரியும் கட்டமாட்டேன் ,,கட்ட விருப்பமும் இல்லை "
" அடிடா சக்கை அம்மன் கோவில் புக்கை எண்டானாம், ஏன்பா ஏன் அப்படி ஒரு பிரியோசனமில்லாத கொள்கை வைச்சு இருக்கிறாய் "
" அதுதானே சொல்லுறேன் வரி கட்ட மாட்டேன்  என்று, எதுக்கு மீண்டும் மீண்டும் குடையுறாய்"
" ஏன்பா, உன் அளவில் அதுக்கு என்ன விளக்கம் வைச்சு இருக்கிறாய் சொல்லுப்பா "
" நானென்லாம் பாஞ்சாலம் குறிச்சி வீரபாண்டிய கட்டப்பொம்மண் இனம் , வரி ,கிஸ்தி,குஸ்தி எல்லாம், வெள்ளையனுக்கு கட்டமாட்டோம் பா "
" அது யாருப்பா பானசாலம் கிறிச்சி கொட் ட பம்மன் ?"
" ஒழுங்கா சொல்லு,, வெள்ளையனுக்கு வரி கட்டாத அந்த மாமனிதனின் பெயர் பாஞ்சாலம் குறிச்சி வீரபாண்டிய கட்டப்பொம்மண் "
" சரிதான் ,,இதுவேறயா ,,,அந்தாள் யாருப்பா ?
" வெள்ளையனுக்கு வரி கட்டாமல் நாற்று நட்டாயா ? யூரியா உரம் போட்டியா ? களை பிடுங்கினாயா ? களை நாசினி மருந்து அடிச்சாயா ? கொஞ்சி விளையாடும் எங்களூர்ப் பெண்களுக்கு தேங்காய்ப்பூசம்பல் அரைச்சுக் கொடுத்தாயா ? என்று நெஞ்சை நிமிர்த்தி நேராகவே கேட்ட மன்னன் "
" அப்படியா,,அப்ப பின்ன வரி கட்டாமல் அந்த நாட்டியலயே இருந்திருக்கலாமே,,ஏன்பா இங்கே வந்து எங்களின் உயிரை எடுக்கிறாய் "
" ஹஹஹஹஹஹஹஹஹஹ "
" ஏன்பா இந்தப் பழைய கட்டிடமே அதிர்ந்து விழுகிறமாதிரி சிரிக்கிறாய்"
" பாஞ்சாலம்குறிஞ்சி வீரபாண்டிய கட்டப்பொம்மண் போல சிரிச்சேன் "
"ஓ,,அவர் இப்பிடி சிரிக்கிறதை நீ நேர்ல வேற பார்த்திருக்கிறீயா "
" இல்லை சினிமா படத்தில சிவாஜி கனேசன் என்ற நடிகர் கட்டப்பொம்மண் ஆக நடிக்கும் போது இப்பிடித்தான் சிரிப்பார் ,,அதைத் தான் பார்த்துக் கொப்பி அடிச்சு சிரிச்சேன் "
" சரி விடுப்பா,,வருமான வரி கட்டுறது முக்கியம்பா,,அதுகள் ஒழுங்கா கட்டாமல் ஓசியில அரசாங்க சேவை உதவிகளுக்கு தொங்கிக்கொண்டு நிக்கிறது கேவலம் பா, என்னமோ நான் சொல்லுறதை சொல்லிட்டேன் "
" அப்படியா "
" ஹ்ம்ம், அப்படித்தான்,,நீ உழைப்பு வரி கடந்தவருடம் கட்டாமல், அல்லது வருமானவரி ஏய்ப்பு போல எண்ணவும் தில்லுமுல்லு செய்து இருக்கிறாயா,"
" அப்படியா "
" அப்படியென்றால் தான் அதிகம் இப்படி அ வை சே ஒ நி உதவிகள் தடை செய்வதுக்கு எச்சரிக்கை வரும் "
" சட்டப்படி .எனக்கு இந்த சேவை கேட்க்கும் உரிமை இருக்கு "
" ஆமாப்பா,,சடடபடிதான் உனக்கு அ வை சே ஒ நி " இடத்தில உதவி கொடுப்பதும் சில தடைகள் இருக்குஎன்றும் சொல்லுது "
" இந்த உதவி அவசரமா கிடைக்காவிடடாள் நான் செத்துப்போவேன் "
" அட அட அட ,,நீதான் விடாக்கண்டன் கொடாக்கண்டன் போல குத்தி எழுப்பி நிக்கிறியே "
" அது வெளியால,,உள்ளுக்கு என்ன நிலைமை மோசமாக்கிக்கொண்டு போகுது தெரியுமா"
" நீ சாகமாடடாய் என்னைக் கேள்விகேட்டு என்னை முதல் சாகடிச்சுப்போடுதான் நீ சாவாய் "
" அப்படியா.. இப்ப என்னதான் செய்யலாம் "
" அதுதான் எனக்கும் விளங்கவில்லை, என்னோட மேலதிகாரி உள்ளே இருக்கிறா, அனுபவம் நிறைய உள்ள பெண்மணி, கொஞ்சம் நேரம் தா, அவாவைக் கேட்டுச் சொல்லுகிறேன் "
                                                                          என்று சொல்லி ரிசப்ஷனுக்கு உள்ளே இருந்த கதவைதிறந்துகொண்டு போனாள். போய் எப்படியும் ஏதாவது ஒரு முடிவோடு வருவாள் என்றுபார்க்க. கதவைத் திறந்துகொண்டு ஒரு வயதான சுவீடிஷ் பெண்மணி வந்தா. அவாவுக்குப் பின்னால அந்த இளம் ரிஷப்சனிஸ்ட் வந்தாள் . வந்த வயதான அதிகாரி என்னைப் பார்க்கவில்லை 
                                                                      நேராப்போய் கணனியின் திரையைத்தான் பார்த்தா, பார்த்திட்டு , என்னவோ இன்னும் சில ரகசியமான சில சொற்களை தேர்வு செய்து குத்தினா, குத்திப்போட்டு,கொஞ்சநேரம் காத்திருந்து போட்டு ,
" ஆஆஆஆகாகாகா.... ஜஸ்ஸோ ஆஆஆஆகாகாகா.... ஜெத்தி கொன்சிட்,,ஹ்ம்ம்....ஜஸ்ஸோ "

சுவீடிஷ் மொழியில் " ஆ ஆ ஆஆ கா கா கா...".என்று இழுத்து விழித்தால் அது என்னமோ அலுப்பிலதான் கொண்டுவந்து நிட்பாட்டுமென்று நல்லாவே தெரியும் . ஆனாலும் என்ன சிக்கல் இந்தச் சிலெடுப்பு எண்டு விளங்கவில்லை. நான் பொறுமையாக அந்த ரிசப்ஷன் மேசைக்கு முழங்கையை முண்டுகொடுத்துக்கொண்டு நின்றேன். 
                                                               அந்த வயதான அதிகாரி அப்போதுதான் என்னை நிமிர்ந்து பார்த்தா, பார்த்துப்போடு அவசரமாக கைக்குழந்தையைக் கிணத்துக் கட்டில வைச்சுப்போட்டு வந்தமாதிரி சடார் என்று உள்ளே போட்டா . அந்த இளம் ரிஷப்சனிஸ்ட் கொஞ்சம் பொறு என்பதுபோல கண்களால் சைகை காட்டினாள்

சுவீடனில் இப்பெல்லாம் பல காரணங்களுக்காக தங்கள் தாய்த்திருநாடுகளில் இருந்து பிடிங்கி எறியப்பட்டு வந்த வெளிநாட்டு பெற்றோர்களுக்கு சுவீடனில் பிறந்த பிள்ளைகள்தான் வளர்ந்து படித்து அதிகம் முன்னுக்கு வேலை செய்கிறார்கள், சுவீடிஷ் மக்கள் முடிவுகள் எடுக்கும் அதிகாரமான அதிகம் சம்பளம் எடுக்கும் வேலைகளில் பின்னுக்கு எப்போதும் இருக்கிறார்கள்.
                                                                           அதில ஒரு புதிய இனமக்கள் எப்படி ஒரு புதிய நாட்டில் வேலை என்ற ஒரு பரந்த சமூக வெளியின் முக்கியமான பரிமாணத்தில் இயல்பாக உள்வாங்கப்படுகிறார்கள் என்பது வெளிப்படையாக இருந்தாலும், சில பாரம்பரியமான பழக்கவழக்கக் குழப்பங்களும் மறைமுகமாக இருக்கு. 
                                                                  அதிலொன்று கேள்வியை உள்வாங்கி அதுக்கு பொருத்தமான பதில் சொல்லாமல் வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வது போல எதிர்வினைகள் கிடைப்பது

அந்த இளம்பெண்ணைக் கவனிக்க இப்போது எனக்கும் அவகாசம் கிடைத்தது. 
                                                                     மத்திய கிழக்கு அரேபியப் பெண்களை கண்ணை மூடிக்கொண்டு பார்த்தாலே அழகானவர்கள். இவளோ ஓடோமான் எம்பயர் காலத்து அழகை அப்படியே சிதறவிடாமல் அள்ளிக்கட்டிக் கொண்டு வந்தவள் போலிருந்தாள். நல்ல வேலை. நல்ல சம்பளம், விலை அதிகமான டோல்லஸ் கபானா கண்ணாடி போட்டிருந்தாள். அதன் பிரேமில் DG என்று வெள்ளை ரத்தினக்கற்களில் அந்த வியையுயர்ந்த பெயர் பதிக்கப்பட்டிருந்தது , 
                                                                  சுருக்கமாகச் சொன்னால் அவளுக்குக் கிடைத்த காதலனோ அல்லது கணவனோ போன ஏழு பிறப்பிலும் கொடுத்துக் கை சிவந்த புண்ணியவாளனாயிருக்க வேண்டும். அவ்வளவு ரம்மியங்கள் அங்கம் முழுதும் .

இப்போது அந்த ரிஷப்சனிட் மறுபடியும் உள்ளே போனாள்,பிறகு கதவைத் தள்ளித் திறந்துகொண்டு வந்தாள் , வந்த வேகத்தில் என்னிடம் அலட்சியமாகக் கேள்விகள் கேட்டாள். அவள் கேட்ட விதம் இவனை வேறெங்காவது ஒரு அலுவலகத்துக்கு அடிமாட்டு விலைக்கு சாச்சு விடமுடியுமா என்பது போலிருந்தது , மேசையில் பேனையை சிலம்பு விசுக்குபவர்கள் போல இரு முனைகளையும் இரண்டு பக்கமும் தட்டிக்கொண்டு
" உனக்கு இந்த அ வை சே ஒ நி உதவி சேவை இன்றைக்கே வேணுமா "
" இல்லைப்பா அடுத்த வருஷம் தேவை "
" என்னது ,கிண்டல் அடிக்கிறியா "
" வேற என்னடி சொல்ல மோட்டுக்கழுதை ,அந்தரிச்ச அவசர உதவிக்குத்தானே " அ வை சே ஒ நி " என்றே இருக்கு ,"
                                                                 அவள் முகத்தில எள்ளும் கொள்ளும் அள்ளுகொள்ளையா வெடிக்கிறமாதிரி என்னைப் பார்த்தாள். ஒரு அதிகாரியின் நிறைவேற்று அதிகாரம் அவள் பார்வையில் இருந்தது. ஒரு பேப்பர் கோப்பையில் தண்ணி எடுத்துக் குடித்தாள்
" வார்த்தைகளை,,அளந்து பேசு,,இன்னொருமுறை இந்த வார்த்தை வந்தால்,,உனக்கும் எனக்கும் இடையில் சிக்குறூட்டி வந்து நிக்கவேண்டிவரும் "
" ஹ்ம்ம், வேற என்னதான் சொல்லமுடியும் ,சொல்லு நீ சொல்லுறதை பார்த்தால் இப்ப உதவி கேட்டா பெஞ்சன் எடுக்கிற காலத்திலேதான் பதில் வரும் போலிருக்கே "
" வார்த்தைகளை,,அளந்து பேசு,,எந்த வேலையும் நீ நினைக்கிற நேரத்தில நடக்காது,,அது அது அதன் அதன் வேகத்திலதான் நடக்கும் ""
" அதெண்டா உண்மைதான்,,,முன்னமெல்லாம் இப்பிடி இல்லை, இப்ப அந்தப் பொய்த்துப் போன பொட்காலத்தைக் கதைச்சு வேலை இல்லையே "
" ஏன்பா,,உனக்கு என்ன பிரச்சினை முதலில் ,வார்த்தைகளை,,அளந்து பேசு, தொண தொண என்று கரிச்சுக் கொட்டாதே ,உனக்கு இந்த அ வை சே ஒ நி உதவி சேவை இன்றைக்கே வேணுமா !"
" ஆமப்பா,,இன்றைக்கே அவசரமா தேவைப்படுவதால்தானே இன்றைக்கே கலியாணப் பந்தல் கால் போட்ட மாதிரி வந்து நிக்குறேன் "
" அது தெரிகிறது,,ஆனால் உன்னோட பெர்சனல் நம்பர் எகிறிக்கொண்டு நிக்குதுப்பா "
" அது தெரியுது,, வேற எங்கேயும் இந்த மாதிரி அ வை சே ஒ நி உதவி பெறமுடியுமா "
" யெஸ்,,அதுதான் என் மேலதிகாரி சொன்னா,ஒரு டெலிபோன் நம்பரும் கதைத்து தேடியெடுத்து தந்தா , நம்பர் தாரேன் அதுக்கு நீயே போண் அடி ,,இது முக்கியமான இடம் "
" ஓகே ,,அது நல்ல அணுகுமுறை,நன்றி "

அந்த ரிஷப்சனிஸ்ட் ஒரு நம்பர் தந்தாள், நான் அவடத்தில இருந்தே என் கையடக்கியில் அந்த நம்பருக்கு அடிச்சேன் ,எதிர் முனையில் ஒரு நடுத்தர வயது ஆணின் குரல். குரலே நம்பிக்கைதருபடியாக இருந்தது
                                                            " ஹாய் , உனக்கு என்னதான் பிரச்சினை,,நாங்கள் எப்படி உதவ முடியும் "
                                                                                 என்ற கேள்வி பின்னனியில் பல குரல்களோடு ஒரு அலுவலகத்தில் இருந்து நுழைந்த சில நிமிடங்களில் நான் என் பிரச்சினையையும், என்னோட மக்கள் வதிவிட சமூக விலங்கு அடையாளமான நம்பரையும் சொன்னேன் , 
                                                              கொஞ்சம் கணனி எழுத்துப்பலகையில் விரல்கள் தாறுமாறா ஓடும் சத்தம்,,பின்னர் கொஞ்சம் அமைதி, 
                                                            ஒரு சின்ன ஆச்சரியமான விகசிப்பு, நான் டெலிபோனை செவிப்பறை வரைக்கும் நெருக்கும் படியாக இறுக்கிவைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தேன்
                                                        கொஞ்சநேரத்தில் அடுத்த முனையில் குரல் உயிர்வந்து
" உனக்கு இந்த " அ வை சே ஒ நி " இந்த இடத்தில உதவி கொடுப்பதும் சில தடைகள் இருக்கு என்று சொல்லுதுபா ,,ஏன்பா என்னதான் பிரச்சினை இப்ப உனக்கு"
" அதுதான் தெரியவில்லை, வேறு எங்காவது உதவி கிடைக்குமா "
" பொறுவாரேன் , இன்னொரு நண்பர் தாரேன் அதுக்கு அடிக்கிறியா , அடிச்சுக்க கேக்குறியா,,அது முக்கியமான இடம் "
" நீயே அடிப்பா அடிச்சு சொல்லு,,எனக்கு சுவீடிஷ் அவ்வளவாக பிரோகிராட்டிகள் லெவலில் விளங்கப்படுத்த முடியாது "
" சரி அப்டியே லைனில் நில்லு "

நான் என்னோட கையடக்கியை வறட்டி தட்ட சுவத்தில சாணி தப்பின மாதிரி அப்படியே காத்தோடு காத்தும்போக்காமல் தப்பி வைச்சுக்கொண்டு நின்றேன், அந்த மனிதர் வேறெங்கோ டெலிபோன் அடிச்சு கதைச்சுக் கொண்டிருந்தார், பல குழப்பமான சத்தங்கள் குறுக்க மறுக்க வந்து முடிய
" அந்த இடத்திலேயும் இந்தப் பிரச்சினைதான் பா , உனக்கு இந்த " அ வை சே ஒ நி " இந்த இடத்தில உதவி கொடுப்பதும் சில தடைகள் இருக்கு என்று சொல்லுதுபா ,,ஏன்பா நீ என்னதான் குளறுபடி செய்து வைச்சிருக்கிறாய் "
" ஹ்ம்ம்,, வேறே எங்கேயும் உதவி எடுக்கலாமா "
" ஹ்ம்ம்,,பார்க்கலாம் இன்னொரு இடமிருக்கு ,இது மிக மிக முக்கியமான இடம் ,,பொறு கேட்டு சொல்லுறேன் "
" சரி,,உங்கள் முயட்சிக்கும்,,நேரத்துக்கும் நன்றி "

நான் என் கையடக்கியை இன்னும் அதிகமாக இரவுக்காதலர்களின் நெருக்கம் போல காதுக்கு உள்ளேயே தள்ளி வைச்சுக்கொண்டிருந்தேன், பல மெல்லிய ஓசையில் குழப்பமான, கேள்விகளும் பதிகளும் , மவுனங்களும், உத்தரவுகளும் , சந்தேகங்களும் கலந்த சத்தங்கள் குறுக்க மறுக்க வந்து முடிய
" யெஸ் ,,இந்த இடம் உனக்கு உதவும்,,இதுதான் கடைசி இடம் பா ,,அனால் நீயேதான் இங்கே போன் அடிச்சு கதைக்கவேண்டும்,ஓகேயா,,இதுதான் மிக மிக முக்கியமான ,நம்பகமான, உத்தரவாதமான அலுவலகம், ஓகே யா "
" சரி,ஓகே,நன்றி உங்கள் நேரத்தை செலவழித்து இந்த நம்பர் எடுத்து தந்தத்துக்கு "

சுவீடன் ஒரு காலத்தில் யானை காதுமடலை படக்குப் படக்கு என்று அடிச்ச மாதிரி வேகமாக எல்லாமே நடந்த நாடு. இப்ப இங்கே சிஷ்டம் வெகு சிலோவாக போகுது, உண்மைச் சொன்னால் பல இடங்களில் சிஸ்டமே இல்லை. அந்தத் துன்பத்தை உங்களுக்குத் சொல்லி கட்டி அழ இப்ப நேரமில்லை என்பதால் விட்டு போட்டுப் போகிறேன்.
                                                                                 சிலநேரங்களில் இப்பிடித்தானே சரியான இடத்தை மூக்கைச் சுத்தி வந்துதானே கண்டடைய வேண்டி இருக்கு . நான் கொஞ்சம் என் கையடக்கியை காதில இருந்து எடுத்து மூச்சு விட்டேன். இந்த அலுவல் இன்றைக்கே இந்த நேரமே முடிக்க வேண்டும் என்பதால் , ரிசப்ஷனுக்கு கொஞ்சம் தள்ளி இடம் விட்டு வந்து ,என் கையடக்கியில் அந்த நண்பரை அடித்தேன் , 
                                                                    அது மூன்றுதரம் மணியடித்து முடியமுதலில் ஜாஸ் ம்யூசிக் போல ஒரு இசை வந்தது பிறகு
" அவசர மனிதர்களின் அவசரமான வைத்திய சேவைகளுக்கு நம்பிக்கை தருகிறோம் "
                                                                        என்று ஒரு அழகான பெண் டெலிவிஷன் சீரியல்களுக்கு நடுவில கல்யாணி ஜூவல்லர்ஸ் விளம்பரம் போல சொல்லிமுடிய அந்த ஜாஸ் இசை மங்கியது. அந்த அலுவலகத்தின் தீம் ஜிக்கில்ஸ் கேட்கவே இவளவு நேரமும் பட்ட அவஸ்தைகள் விலகி உத்தரவாதமாக இந்த இடத்தில உதவி கடடாயம் கிடைக்குமென நினைக்கவே
"அவசர மனிதர்களின் அவசரமான வைத்திய சேவைகளுக்கு அ வை சே ஒ நி நிலையம் உனக்கு என்னதான் பிரச்சினை,,நாங்கள் எப்படி உதவ முடியும் "
                                                             என்ற கேள்வி உள்நுழைந்து

அந்தக் குரலை இரண்டு மணித்தியாலங்கள் முன்னுக்கு கேட்டது போலிருந்தது , என்ன குழப்பம் என்று விளங்காமல் ,திருப்பியும் அடிச்சேன் , இப்போதும் அது மூன்றுதரம் மணியடித்து முடிய ,
" அவசர மனிதர்களின் அவசரமான வைத்திய சேவைகளுக்கு அ வை சே ஒ நி நிலையம் உனக்கு என்னதான் பிரச்சினை,,நாங்கள் எப்படி உதவ முடியும் "
                                             என்று கேட்க,,நான் ரிஸப்ஷனைப் பார்த்தேன்,,அந்தப் பெண்தான் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்
" எனக்கு ஒரு அவசர அவசரமான வைத்திய சேவை மண்ணாங்கட்டிப் பிரச்சினை ஒன்றும் இல்லை,,சும்மா பொழுது போகவில்லை அதனால அடிச்சேன் "
                                             என்று சொல்லிப்போட்டு வந்திட்டேன்.
..

Tuesday, 10 April 2018

சமாளித்துக்கொண்ட விசாரிப்புகள்,!

"சமாளித்துக்கொண்ட. விசாரிப்புகள்,! "  புலம்பலும் பினாத்தலும் கலந்த  வகையில் கொஞ்சம் கொஞ்சமாக அன்றாடம் சேர்ந்துகொண்டு நெஞ்சறிய பொக்கிஷமாகிய அனுபவங்களை அதிகாலைக் கனவுகள் கலையுமுன்  கடைசிப் பக்கங்களில் எழுதிய எண்ணங்களின் வண்ணங்கள் .

                                                    ஆங்கிலத்தில்  " first-person style  " என்று சொல்லுகிறது இதைப் போலவே இருண்ட நாடகளில் எழுதப்பட்ட நாட்குறிப்பு அல்லது அத்தை பையன்கடைசியாக   மாமன் மகளுக்கு எழுதிய காதல் கடித  வடிவம் என்று சொல்லலாம். கொஞ்சம்போல " Confessional poetry " க்கும் இதுக்கும் கொடுக்கல் வாங்கலில்  ஒரு பஞ்சாயத்து அளவில் சம்பந்தம் இருக்கு .
                                                " ம் " என்றாலே " தும்மிப்போட்டுப் போகும் " ஒருவிதமான முரண்பாடான வாழ்வியலில் நாமெல்லாம் காலங்கடந்து போய்க்கொண்டிருக்கும் வேகத்தில் , எங்கிருந்து தொடங்குவது என்பது ஒரு குழப்பமாகவே இருந்தது. அதனால் என்ன பிடித்தமான கவிதைகளில் இருந்தது ஆரம்பிப்போம் என்று நினைத்து எழுதுகிறேன்.

                                                      சோர்வின்றி மெய்வருத்தி நிறைய எழுதும்போதுதான் மொழியில் உள்ள உணர்ச்சி வார்த்தைகளின் சூட்ச்சுமங்கள் பிடிபடுகுது, அதே நேரம் மற்றவர்கள் எழுத்துவதைப் பார்த்து நிறைய வாசிக்கும்போது மொழியின் சாத்திய எல்லைகளை எப்படி மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஜோசிக்கும்போது இன்னொருவிதமான அனுபவம் கிடைக்கிறது.

                                               இது இரண்டையும் ஜோசித்தபோது " மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது " என்று எங்கள் முன்னோர்கள் சொல்லிவைத்த முதுமொழிதான் நினைவு வந்தது . வசந்தகாலத் தென்றலை நிறுத்திவைத்து விசாரித்தது போன்றது புத்தகப்பதிப்பில் கவிதைகளின் தொகுப்புகளைப் படித்த அந்தக்காலம். 

                                      இப்போது எழுத்து என்பது எல்லாருக்குமே சாத்தியமாக அமைந்து அந்தத் திசையில் பயணிக்கவிரும்பும் ஒருவர் யாராக இருந்தாலும் முன்னோடியான அறிமுகங்கள் இல்லாமல் மரபை உடைத்து புதியபாணியில் எழுதிக்குவிக்க ஏகப்பட்ட இலத்திரனியல் ஊடக வாய்ப்புகள் வாசல்களைத் திறந்து வைத்திருக்கின்றன.அவற்றைப் பற்றி, அதன் வீச்சு பற்றி எனக்கு விளங்கிய வரையில்  இது ஒரு வரவேற்கத்த காலமாற்றம் .

                                             வழக்கம்போல முகநூலில் எழுதிய என் சொற்கட்டமைப்பு  முயட்சிகளைத் தொகுத்து உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


பரபரப்பான 
விவாதக் குரல்கள் 
முகங்களில் 
நினைவுக் கலக்கம் 
பழக்கமான 
மரணவாசனை அடித்தது
யுத்தம் நினைவுக்கு வர
உள்ளே
எட்டிப் பார்த்தேன்
புதிய அரசியல் அகதிகள்
மீதியுள்ள 

உயிர் முடிச்சுகளோடு
காத்திருக்கிறார்கள் !


..........................................................
.

பிரகாசமான
தெருவிளக்குகள்
அணைந்துகொண்டிருந்தபோது
வடக்கு வானம்
ஜன்னல்களைத் 
திறந்துகாட்ட முடிவெடுத்தது !
இருட்டில்
ஒரேயொரு நிலவு
அது
தனித்திருப்பதால்தான்
அழகாக இருக்கிறது !.


..............................................................

ஒரு
வெற்றிடத்திலிருந்து
உருவாகி வருவதுபோல
நடுக்கம்
லேசாகத் தொடங்கி 
முழுமையாக
வற்றிப்போகிறது
பாதங்களில் உஷ்ணம்
ஒருநாள் விட்டு
இன்னொருநாள்
விடிகாலைகளே
வெறுக்கும்படியாகவேயிருக்கு !,


...............................................................

ஒரு
இடத்தில்
நடுக்கோடு கிழித்து

உட்சாகமில்லா நாட்களில்
இரண்டாகிவிடுகிறது
மனத்திடம் !
விளக்கமாக
விபரம் சொல்லாவிட்டாலும்
வேறொரு
எல்லையை வரைந்து
பாதையை மாற்றிவிடுகிறது
நம்பிக்கை !


...............................................................

அதை
மறுக்கும் போதெல்லாம்
இறுக்கத்தை 

வளர்த்துவிடுகிறது
முன்னேற்றங்களில்
பலமான 

பின்னிழுப்புக்கள் 
எனக்கிது
உண்மையாகவே
தேவையில்லாத ஒன்றுதான்!
எத்தனைமுறை
அடித்து விரட்டினாலும்,
தொலைந்தேபோகாத
உறைபனிக் குளிர் !


......................................................

தூரத்தில்
பனிமழையைப்
பிழிந்தெடுத்துப்
பொழிந்துகொண்டிருக்கும்
வெளிச்சங்கள், 
இரவுகளில்
அது காரணமாயிருக்கலாம்
விழி உறக்கமில்லா
இமைகளைமூடும்போதெல்லாம் .
சொல்ல முடியாதவாறு
ஒரு நெருக்கம்
அதுவும்
நிதானமிழக்கவைத்து
விடியும்வரை !


..........................................................

ஒரு 
முடிவோடுதான்
வந்திருந்த மாதிரியிருந்தது
அந்த
நிகழ்வின் அழைப்பு
அணுகத்தயங்கிய 
முணுமுணுப்பில்
தொடங்கிய வார்த்தைகள்,
உரிமையுள்ளவொரு
உறவாடலாயிருந்தும்
ஒரு
முழுநேரச் சண்டையை
விரும்பாததால்
நேராகவே நிராகரித்துவிட்டேன் !


................................................................

மனமின்றிக்
நடக்கும் போதெல்லாம்
முகத்தில்
படிந்துவிடுகிற
இளவெய்யிலின் 
உச்சி நிழல் போல
திசைப் பிளவுகளில்
வெறும்
நினைவுக் குறிப்புகளாக
ஒரு
அடைப்புக்குறிகளுக்குள்
எஞ்சிவிடுகிறது
காலம் !


..........................................................

ஒரு
சமாதானத்தில்
வந்துசேர முடியாமல்
இரு முனைகளிலும்
இறுக்கங்கள் 
ஒரு புரிதலில்
ஓடிக்கொண்டிருந்த
சந்தேகங்கள்
அதிகமாகிக் கொண்டேயிருக்கு
எல்லாவிதமான . ‘
நேர்வழிகளையும்
இந்த அளவுக்கு வந்தபின்னும்
நிராகரிக்கிறது
அச்சம்தரும்
அசாதாரண தணிக்கை !


...............................................................

நேற்று இரவு
சப்த மூச்சின்றி
மெல்லப் படிஇறங்கிய
பிடிவாதமான
உறைபனியாகத்தானிருக்கவேண்டும்,
கடைசிப்
பருவத்தின் பிரிவை
ஆழப் பதிந்து செல்ல
உண்டாக்கிய கலவரத்தில்
கிட்டத்தட்ட
கிடைத்ததை எடுத்துக்கொண்டு
ஓடிப்போயேபோய்விட்டன
நடை பாதைகள் !


.................................................................

பாரமாகி
நுனியை வளைக்கும்
மழைத்துளி ,.
வெளிறிய .
காம்பிலாடும் 
மஞ்சள் இலைகள்,
வௌவாலின் சிறகுகள் போலப்
படபடக்கும் காற்று
அலட்சியமாகவே
அமைதியில் குந்தியிருக்கும்
பருவகாலம்
இன்றுதான்
சாட்சி சொல்ல வேண்டிய
கடைசி நாள். !


......................................................

அந்தச்
சிட்டுக்குருவியின்
வலது கண் 

மூடியிருந்தது.
கிட்ட நெருங்க
இடது கண் 

விழித்திருந்தது, 
உறுதியெடுத்தது போல
இறுக்கமாகிகொண்டிருக்கும்
வெண்பனியில்
சிறகுகளை
விருப்பம்போல அசைக்கமுடியாத
சின்னப் பறவையை
மேற்கொண்டு
நின்று நலம் விசாரிக்க
துணிச்சல் இருக்கவில்லை !


..............................................................

என்ன முயன்றும்
விஷமேற்றிய கதைகளை
வாசிக்க முடியவில்லை.
ஆரம்பத்திலிருந்து
அவர்கள் என்பதெல்லாம் 
நானாக
மாறிக்கொண்டிருந்தது .
இடையிடையே
பக்கங்கள் திரும்பும்போதெல்லாம்
என்
அந்தரங்க ரகசியங்கள்
பகிரங்கமாகவே
திறக்கப்டபடுவதுபோலிருந்ததால்
மனசாட்சியின்
இரைச்சல்கள் அடங்கும்வரை
மூடிவைத்திருக்கிறேன் !


......................................................................

ஒருகாலத்தில்
மிகப் பிடித்த கிராமம்
நாலிரண்டு பக்கமும்
பருவ மழையும் பச்சைக் காடுகளும்
இப்போது 
புதியபாதைகள்
எல்லாமே தொடர்மாடிகள்
நினைவொடுங்க
அதிவேகத் தெருமுனையில்
திரும்பியபோது
முகத்தைச் சுழிக்கவைத்தது
வேரிழந்த மரங்கள் மட்டுமல்ல,
வழித்துத் துடைத்து போல்
சோலைகளைப் பிரசவித்த
பறவைகளுமில்லை
என்பதும்தான் !


...................................................................

சில சமயங்களில்
சுயகட்டுபாடு
அவ்வப்போது அத்து மீறும்,
நேற்றிரவு
அதிகம் சில்லிடாமல் 
ஓர்
தலையசைப்பு,
காலையில்
மெல்ல விலகிக்கொண்டிருக்கும்
ஓர்
புன்னகை ,
சற்று பதட்டத்தோடு
ஒரு இரவின்
இழப்பைத் தாண்டிச்செல்லப்
போதுமானதாக இருந்தது.


..............................................................

வழக்கமாகச்
சுருண்டு படுக்கும் இடத்தில்
எதிர்ப்பைக்காட்ட
என்குரல்வளையை
யாரோ 
அமுக்குவது போலிருந்தது,
எல்லாவற்றிற்கும்
சேர்த்து வைத்து
மெல்லிய குரலில்
மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தேன்
எப்போது
தன்னிச்சையாகப்
பிசாதிக்கொண்டிருந்ததை
நானாக நிறுத்தினேன்
என நினைவில்லை !


...........................................................

தவிப்பை
வேடிக்கை பார்ப்பதுபோல
இத்தனை
வருடங்கள்
வெளியாகிப்போய்விட
சகலத்தையும்
நிர்மலமாய் வைத்திருக்கும்
வானத்தைப்போல
அனுபவங்களைத்தான்
நிதானமாக வாங்கிவைத்து
மன ஆழத்தில்
உறுதிப்படுத்த
எதிர்பார்த்திருந்திருக்கிறேன் !


.....................................................................

வரிசை தவறிய
மையத்தில்
எல்லாமே சலித்துப்போகுது
அடித்துக் கொல்வதுபோல
விதவிதமான 
விளையாட்டு வினைகள்
ஒரு தூளி போல
செல்லுமிடமெல்லாம்
வானவில்
அதைப் பார்த்ததும்தான்
கொஞ்சம்
இன்றைய நிகழ்காலத்திற்குத்
திரும்பி வந்தேன்!.


............................................................

உறைபனி
வண்ணத்துப்பூச்சி.
பறந்துகொண்டிருப்பது போலப்
பெய்துகொண்டிருக்கு,
குளிர்ந்து கொண்டிருக்கும்
நெஞ்செல்லாம்
நெருக்கடி பலமிழக்க
உஷ்ணத்துக்கு
ஏற்படக்கூடிய அபாயம்
பதுங்கியிருக்கலாம்,
கண் விழித்திருக்கும்
போர்க்களத்தில்
கனவுப் பயணம்,
தாண்டிச்செல்லத்தான் போகிறேன்.
ஆனால் இன்று அல்ல.!


................................................................

தன்னைப் பார்த்துத்தான்
என்றவருக்குத்
தோன்றி இருக்கலாம்,
சந்தோஷமாக
நான்
எதையோ நினைத்துச்
சிரித்துக்கொண்டிருக்கிறேன்,
ஆச்சரியமாக
இது அடிக்கடி நடக்கும்.
அவர்
என்னிடம்
என்ன எதிர்பார்த்தார் ?
என்னவென்று புரியாமல்
நான்
எதைப் பூர்த்தி செய்யவில்லை ?
வேறெங்கிருந்தோ
கண்காணிப்பது போன்ற
சந்தேகத்தைத்தான்
இன்று வரை
புரிந்துகொள்ளமுடியவில்லை.!


...............................................................

மூச்சு முட்டும்
மலர்களின் வாசனை
தொடங்கமுன் வந்துவிடும்
இளமைக்காலக் காதல்,
இப்பெல்லாம்
விழுந்து மடியும்
வயதான பூக்களைக்
குனித்து பார்த்துக்கொண்டே
நடந்து போகிறது
பூர்வஜென்மத்தில்
உறிஞ்சி முகர்ந்து
கலக்கம் ஏற்படுத்திய
மண் அரிக்கும் சருகுகளின்
வாசனை !


...........................................................

எனக்கு
நினைவு தெளிவாக
இல்லாத பக்கம்
பரபரப்பான பேச்சுக்குரல் !
காட்சிகளாகவே
எனக்கு
அந்த சம்பவம்
மனதில் இருந்ததால்
வழக்கம் போல
எனக்குப்
பாதி கண் விழித்து
தீவிரமாகப் பேசிக்கொண்டு
விழிக்காமலுமேயே
எனக்குள்
எழுந்து நடந்தேன் !
கனவு என்பதும்
ஒருவித துவக்கம்தான்.....!


.........................................................

கையெழுத்து
மறையும் நேரத்தில்
பழகியவர்கள்
ஒதுங்கிப் போகிறார்கள்,
வேண்டாம் என்றால் 
வேண்டாம்தான்
உட்காரவைத்து
யாரும் வற்புறுத்தமுடியாது !
வற்புறுத்தி
மனத்தாங்கலாய்
வெளிக்காட்டிக்கொள்ளும்
கவலையை
தேற்றிக்கொண்டிருக்க
நிறைய நேரம்
செலவழிக்கவேண்டும் போலிருக்கு !


............................................................................

தலைகீழாகச் சறுக்கி
எல்லாவற்றையும்
எழுதிக்கொண்டிருக்கும்போது
இதுபோன்ற
விஷயங்களையும் 
சொல்லித்தான் ஆகவேண்டும்.
என்னைப்
பொறுத்தவரை
யாராவது ஏதாவது கேட்டால்
பதில் சொல்லத் தெரியாது.
நீங்களாவது
யாராவது ஏதாவது கேட்டால்
வழி சொல்லத்தெரிந்த
பாதையின் போக்கில் செல்லுங்கள்.
அது போதும். !


............................................................

எதை எடுத்து உடைக்கலாம்
என்பதுபோல்
தொட்டுத் தொட்டு
ஆராய்ந்து கொண்டிருந்தேன்,
விதம் விதமாகப் 
பினாத்தியிருக்கிறேன்!
அலைவுகளை
ஒரு கட்டுக்குள்
கொண்டுவரநினைத்து
சுதாரிப்பதற்குள்
சுவாரஸ்யம் போய்விட்டது !
பழைய பதிவுகளை
ஏதோ சிந்தனையில்
புரட்டிக்கொண்டிருந்தபோது
ஆரம்பித்தது
இந்த அவஸ்தை !


.........................................................

நன்றாக இருந்த
சம்பந்தப்பட்ட
முகம் தெரியாத
அந்நியர்களுடன்
திருப்பித் திருப்பிச்
சமநிலை தடுமாறி
கீழே விழுந்திருக்கிறேன்!
இந்த சம்பவம்
இரண்டு மாற்றங்களுக்கு !
ஒன்று
ஏராளமான
அப்பாவித்தனம்
இரண்டாவது
தற்செயலாக
சமாளித்துக்கொண்ட.
விசாரிப்புகள்,!